மாவீரனின் கல்லறை

மாவீரனின் கல்லறை

இரவின் து}க்கத்தில்
இன்று வந்து தட்டிச் சொல்கிறது
நெருப்புருவில் பல தியாகங்கள்
ஒ மாவீரனே

கார்த்திகை 27 என்று மட்டும்
கனவில் சொல்லி மறைகின்றாய்
வானம் தொட அக்கினி வளர்த்து
உன் வயல் முழுக்க நெருப்பெரிய
துயிலும் இல்லம் விழித்தெழவே
பூவாலே உன் பொன் முகத்தை வரவேற்று
சுடர் ஒளியில் உன் முகம் கண்டு
வாடா மகனே என்று உன் தாயோடு நீ சிரித்த
காலம் ஒன்று இருந்துதடா
இன்று விழுந்து கிடக்கும் வன்னிப் பேரரசனின்
இராட்சியத்திலிருந்து  உடைந்து விழுந்த
கனவுத் துண்டுகளைத் தவிர
உனக்குத் தருவதற்கு என்று என்னிடம் ஒன்றுமில்லை
மனு நீதி கண்ட மன்னனின் கோபுரத்து மணி
அறுந்து கிடக்கிறது
ஆயிரம் கவிபடித்த அத்தனை வீணைகளின்
சுரம் அறுந்து புழுதியில் புதைந்து கிடக்கிறது
நம்பி இருந்த கனவைக் கூட
துரோகம் இழுத்துக் கொன்றுவிட்டது
கண் முன்னே எதிரி உன் கல்லறையை
மிதித்துப் போகின்றான்
எங்கள் நெஞ்சறைகளில் இரத்தம் வடிய
கருக்கலைத்த வயிறுகள் போல் காணாமல் போய்விட்டன
கல்லறையில் முளைத்திருந்த சிசுக்களின் கனவுகள்
கையில் விளக்குடன் பாலைவனத்து பெருவெளி எங்கும்
உன் பாதங்களைத் தேடித் திரிகின்றன மிஞ்சியிக்கும் உன் குழந்தைகள்
கண்களில் வடியும் குருதியைத் தவிர
என் கைகளில் பூக்களில்லை
ஓ மாவீரனே
உடைந்து விழுந்த கனவுத் துண்டுகளைத் தவிர
உனக்குத் தருவதற்கு என்று என்னிடம் ஒன்றுமில்லை
நாளை விடியும் ஒர் சூரியப் பேரொளியில்
வன்னிக் காட்டில் திரியும் மதம் பிடித்த பண்டாரவன்னியனின் யானைகள்
உன் கல்லறையை இழுத்து வந்;து
கரும்பனைக்கு அருகில் வைத்து
உன் உயிருக்கு பூ அள்ளி எறிந்து
மத நீரால் உன் தலை கழுவும்.

நன்றியுடன்
பா. உதயகுமார்  ( நோர்வே)

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.