அடம்பன் கொடி உணவு பட்டினிக் கொடுமை; மருந்துப் பஞ்சம்: தமிழர் உயிர்ப்பலி

ipomoea_pes-caprae_01வன்னியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் இன அழிப்புப் படையெடுப்பினால் – நேரடிப் படுகொலைக்கு உள்ளாகும் தமிழர்கள் ஒரு பக்கம் போக – பட்டினியாலும், நோயினாலும் பலியாகும் தமிழர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது என செய்தியாளர் வன்னியில் இருந்து தெரிவிக்கின்றார். நோய்களுக்கு மருந்து இல்லாமல் மருத்துவமனைகள் அவலப்பட, உண்ண உணவு இல்லாமல் மக்கள் கண்டதையும் உண்டு நோய் வாய்ப்படும் கோர நிலையும் ஏற்பட்டுவிட்டது.

பட்டினிச் சாவு
 
சிறிலங்கா அரசின் போர் முனைப்பினால் வன்னயில் குறுகிய நிலப்பரப்பினுள் முடக்கப்பட்டுள்ள மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் அவலம் தொடர்பாக கடந்த சனிக்கிழமை ‘புதினம்’ செய்தி வெளியிட்டிருந்தது தெரிந்ததே.

அதன் தொடர்சியாக இன்று கிடைத்த செய்திகளின்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனையில் பட்டினி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்து 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.
 
சந்தனம் விசலாட்சி (வயது 72)
 
ஆறுமுகம் இராமையா (வயது 66)
 
சின்னையா தர்மலிங்கம் (வயது 65)
 
ஆகியோருடன் வீதியில் சென்று கொண்டிருந்த மேலும் இரண்டு வயோதிபர்கள் பட்டினிக் கொடுமையால் மயங்கி விழுந்து, உடனடியாக மாத்தளன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர்கள் அங்கே உயிரிழந்துள்ளனர்.
 
அடம்பன் கொடி உணவு
 
இதேவேளையில் பட்டினி காரணமாக அடம்பன் கொடியை கீரை என நினைத்து வறுத்து உண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மயக்கமுற்று விழுந்து உயிராபத்தான நிலையில் மாத்தளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
சி.வசந்தபவன் (வயது 46)
 
வ.பத்மதேவி (வயது 38)
 
வ.யசித்திரன் (வயது 14)
 
வ.சத்தியா (வயது 13)
 
வ.சமர்வேந்தன் (வயது 08)
 
வ.கீர்த்திகா (வயது 06)
 
ஆகியோரே இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
 
வயிற்றோட்ட நோய்
 
இதேவேளையில் வயிற்றோட்ட நோயும் தீவிரமாக வன்னியில் பரவி வருகின்றது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வயிற்றோட்ட நோய்க்கு 13 தமிழர்கள் உயிரிழந்துவிட்டனர்.
 
இப்போதுள்ள சூழ்நிலையில் – வயிற்றோட்ட நோயைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் எதுவும் மருத்துவமனைகளில் இல்லை என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.