ராம் வெளியிட்ட மாவீரர் தின உரை இலங்கை அரசின் கொள்கைப் பிரகடனமா?

இந்த ஆய்வு அதிர்வு இணையதளத்தால் எழுதப்பட்டது. இதில் குறிப்பிடப்பட்ட கூற்றுக்கள் சரியாக இருப்பதால் நெருடலும் இதை ஆதரித்து வெளிவிடுகின்றது.

ram1விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகளில் ஒருவரான ராம் அவர்கள் இன்று மாவீரர் தின உரை ஒன்றை ஒலிவடிவில் வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் இலங்கை இராணுவத்தின் பிடியில் இருந்து செயல்படுவதாக பல செய்திகள் வெளிவந்தது. இருப்பினும் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்தறிவதே மெய் என நாம் பொறுமை காத்தோம். இருப்பினும் இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை மூலம் அவர் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவது போலான தோற்றப்பாடு வலுத்திருக்கிறது.

  1. முதலாவதாக அவர் வெளியிட்டுள்ள மாவீரர் தின உரையில் பின் புலத்தில் குயில் கூவுவதுபோல ஒரு ஒலி எழுப்பப்பட்டு அவர் காட்டில் இருப்பதைப் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயன்றுள்ளனர் சிலர். அவர் ஆற்றிய உரையின் 30 நிமிடமும், அந்தக் குயில் பின் புலத்தில் தொடர்ந்து ஒரே சீராகக் கூவிக்கொண்டிருப்பதை கேட்கக்கூடியதாக உள்ளது. அத்துடன் குயில் கூவுவதை பதிவுசெய்து அதனை மீண்டும் மிண்டும் பின் புலத்தில் ஒலிபெருக்கியுள்ளனர் சிலர்.
  2. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இறந்ததாக ஒப்புக்கொள்ளும் அவர், இலங்கை இராணுவத்தின் இக் கூற்றை ஏற்றுக்கொள்கிறார். ஏற்கனவே இலங்கை புலனாய்வுப் பிரிவினர் இத்தகைய தோற்றப்பாட்டை வெளிப்படுத்த விரும்பியிருந்தனர் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்.
  3. இனியும் எமது இலக்கான தமிழீழத்தை அடைய தொடர்ந்தும் போராடுவோம் என ஒரு இடத்தில் கூட அவர் கூறவில்லை. முடிவில் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் எனக் கூறி முடித்துள்ளார்.
  4. உரையில் மே 17 ம் திகதி தன்னைத் தொடர்புகொண்ட தேசிய தலைவர் தன்னையே பொறுப்பை ஏற்று வழி நடத்துமாறு கூறியதாக தெரிவித்துள்ளார். அப்படியாயின் கே.பி என்று அழைக்கப்படும் பத்மநாதன் அவர்களும் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தம்மையே தலைவராக இருக்கும்படி தேசிய தலைவர் கூறியதாகத் தெரிவித்திருந்தார். இதனை நோக்கும் போது தேசிய தலைவர் அவர்கள் 2 பேரை விடுதலைப் புலிகளின் தலைவராக இருக்கும் படி கூறியிருக்க மாட்டார். இரண்டில் ஒருவர் பொய்யுரைப்பது, புலனாகின்றது. கே.பி அவர்கள் தம்மை தலைவர் என பிரகடனப்படுத்தும் போது ராம் ஏன் எதிர்க்கவில்லை?
  5. தாமும் சில தளபதிகளும் காட்டில் காலூன்றி இருப்பதாகக் கூறும் ராம் அவர்கள் போராட்டத்தைப் பற்றியோ அல்லது வருங்கால நடவடிக்கைகள் குறித்தோ எதுவும் கூறாமல், புலம் பெயர் மக்கள் தொடர்ந்தும் நிதியளிக்க வேண்டும் எனக் கூறுகிறார். காட்டில் காலூன்ற இவருக்கு நிதி அவசியமாக உள்ளதா? அதாவது பெரும் தொகையான நிதி?
  6. உரையில் தேசிய தலைவர் உறுதியாக இறுதிவரை போராடியதால் தான் மக்கள் தற்போது முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டு கிடக்கிறார்கள் என்பதுபோன்ற சாயலில் தனது உரையை நிகழ்த்தியது மட்டுமல்லாது, வெளி நாடுகள் வேகமாக வந்து உதவவேண்டும் என்றும் கோரியுள்ளார். அதாவது போராட்டம் ஏதும் இன்றி வெளிநாடு ஒன்று தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டுமாம்.

ராம் அவர்கள் இராணுவத்தின் பிடியில் இல்லை என்று ஒரு கணம் நாம் வைத்துக்கொண்டால் கூட, ஒரு தூர நோக்கும், தெளிவற்ற சிந்தனையும், போராட்டத்தை முன்னெடுக்கத் திறனும் இன்றி இவர் இருப்பது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. இப்படியான ஒருவரிடம் தமிழீழப் போராட்டத்தை எவ்வாறு கையளிப்பது?. தேசிய தலைவர் ஒருபோதும் புலம்பெயர் மக்களிடம் நிதி உதவி கேட்டது இல்லை. மாறாக மக்களே மனமுவந்து நிதி அளித்தனர். காரணம் அங்கு நடைபெற்ற தாக்குதல்கள். இலங்கை இராணுவம் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களே காரணம்.

தளபதிகளுடன் தாம் காட்டில் கால் பதித்துள்ளோம் என, ஏதோ இமயமலையில் கால் பதித்தது போல இவர் கூறுவதை எவரும் நம்பத் தயாரில்லை. இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவினருடன் இவர் சேர்ந்து இயங்குகிறார் அல்லது இயங்கவில்லை என்பதை விட இவர் போராட்டத்தை கொண்டு நடத்தக்கூடிய திறன் அற்றவர் என்பதே இன்றைய தினம் தெளிவாகியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.