முதல் தடவையாக அயர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள் உண்ர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது

அயர்லாந்து தலைநகர் டப்ளின் ( Dublin) இல் நேற்று பிற்பகல் 27.11.2009, வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் இலங்கையில் சிங்கள அரசினால் இதுவரை காலமும் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும், எமது தாயக விடிவிற்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களையும் நினைவுகூறும் தேசிய நினைவெழுச்சி நாள் இடம்பெற்றது.

முதலில் பொதுச்சுடரினை தாயகத்தில் இருந்து வருகைதந்த அருட்தந்தை ஏற்றிவைத்தார் தொடர்ந்து பொதுச்சுடரினை மாவீரன் கதிர்ச்செல்வன் அவர்களின் சகோதரன் ஏற்றினார் அவரைத் தொடர்ந்து பொதுச்சுடரினை தேசிய நினைவெழுச்சி நாள் ஒருங்கமைப்பாளர் ஏற்றிவைத்தார். தொடர்ந்து எமது தாயக விடிவிற்காக தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த அனைத்துப் போராளிகளுக்காகவும், மற்றும் மானச் சாவினைத் தழுவிக்கொண்ட மக்களுக்காகவும் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தேசிய நினைவெழுச்சி நாளில் கலந்து கொண்ட அனைவரும் கைகளில் ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தியதுடன் மலர் வணக்கத்தையும் செலுத்தினர்.
 
இதனைத் தொடர்ந்து தாயகத்தில் இருந்து வருகைதந்த அருட்தந்தை சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் எமது தாயக விடிவிற்காக வித்தான மாவீரர்களையும் மற்றும் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களையும் அவர்கள் செய்த தியாகங்களையும் எடுத்துக் கூறியதுடன் தற்பொழுது எமது மக்களுக்கு இலங்கை அரசினால் இழைக்கப்படும் துரோகச் செயல்களையும் எடுத்துக்கூறினார், அத்துடன் வவுனியா இடைத்தங்கல் முகாமில் எமது மக்கள்படும் துயரங்களையும் எடுத்துரைத்ததுடன் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களும், தமிழக தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்து நின்று தாயக மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தொடர்ந்து இலங்கை சமாதானத்திற்கான அயர்லாந்தின் அமைப்பின் முக்கிய உறுப்பினர் உரை நிகழ்த்தினார். இவர் தனது உரையில் தாயகத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையை விபரித்துக் கூறியதுடன் தாயக மண்மீட்புப் போரிற்காய் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை பற்றியும் எடுத்துக் கூறினார்.
 
இதனைத் தொடர்ந்து, அயர்லாந்தில் இருந்து வவுனியா இடைத்தங்கல் முகாமிற்குச் சென்று அங்குள்ள எமது மக்களுக்கு சேவை ஆற்றிவிட்டுத் திரும்பிய அருட்சகோதரி உரையாற்றினார், இவர் தனது உரையில் வவுனியா முகாம்களில் உள்ள எமது மக்கள்படும் வேதனைகளை எடுத்துக் கூறியதுடன், அவர்களின் இன்றைய உடனடித்தேவையையும் விபரித்துக் கூறினார், தொடர்ந்து உரையாற்றிய அருட்சகோதரி நாங்கள் எந்த வழியில் முகாம்களில் உள்ள மக்களிற்கும் மற்றும் தங்கள் சொந்த இடங்களுக்கு மீளச்சென்ற மக்களுக்கும் உதவமுடியும் எனவும் கூறினார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய தேசிய நினைவெழுச்சி நாள் ஒருங்கமைப்பாளர் எமது தாயக விடிவிற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களையும் அவர்கள் செய்த தியாகங்களையும் மற்றும் அவர்களை பெற்றெடுத்த குடும்பத்தாரையும் அத்துடன் இதுவரை காலமும் படுகொலை செய்யப்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும் பற்றி எடுத்துக்கூறியதுடன், புலம்பெயர்ந்து இங்கு வாழும் நாங்கள் எமது மக்களுக்காகவும், எமது தேச விடுதலைக்காகவும் ஒற்றுமையாக குரல் எழுப்புவதுடன் அவர்களுக்கு உதவுவது எமது தலையாய கடமையாகும் எனக் கூறியதுடன் அதற்காக இன்றைய நாளில் நாம் உறுதியுரை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
 
தொடர்ந்து உணர்வுமிக்க கானங்களும் மாவீரர் கானங்களும் அரங்கத்தில் ஒலிக்கவிடப்பட்டது. இந்த தேசிய நினைவெழுச்சி நாள் ஒன்று கூடலில் பலதரப்பட்ட வயதினரும் மற்றும் பல்லின சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.

Maveerar-ayar

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.