தமிழகத்தில் எழுச்சியோடு நடந்த மாவீரர் தினம்

வைகோ, நெடுமாறன், நாஞ்சில் சம்பத், உள்ளிட்ட தமிழீழ ஆதரவாளர்கள் எவருக்குமே புலம்பெயர் நாடுகளுக்குச் செல்ல விசா மறுக்கப்பட்டதால் அவர்களால் திட்டமிட்டபடி புலம்பெயர் நாடுகளில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்ள இயலவில்லை.

tamilnadu-tamileelam-nerudalஅதனால் தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டது.தமிழகமெங்கிலும் மாவீரர் நாள் பொதுக்கூட்டங்கள் பெரும் எதிர்பார்புடன் நடந்து முடிந்துள்ளது. சென்னையில் திருமாவளன், வைகோ, நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகம், தமிழக மாணவர் பேரவையினர் என ஏராளமான தமிழ் அமைப்புகளும் வீரவணக்க நிகழ்வுகளை அரங்க நிகழ்வுகளாகவும், பிரமாண்ட பொதுக்கூட்டங்களாகவும் நடத்தினர்.
 
சென்னை திநகரில் மதிமுக சார்பில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார். அவர் தமிழக முதல்வர் கருணாநிதியை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
 
 ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள அழிவு பத்திரிகை முடக்கம். தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளது பத்திரிகை உலகம். இதனால் ஈழத் தமிழர்களைப் பற்றிய கருத்துகளைக் கூற முடியாத சூழல் உள்ளது. இதில் தினமணி நாளிதழ் மட்டுமே கருத்துகளைச் சுதந்திரமாக வெளியிட்டிருந்தது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
 
சென்னையில் மதிமுக சார்பில் மாவீரர்கள் தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது ஈழத் தமிழர்களைப் பற்றிய குறுந்தகட்டை வெளியிட்டு வைகோ பேசுகையில் இந்த குறுந்தகடு எல்லா தமிழக மக்களிடமும் கிடைக்க வேண்டும். நம் இனம், எவ்வாறு அழிந்துக் கொண்டிருப்பதை மக்கள் பார்க்க வேண்டும், உணர வேண்டும்.முதல்வரைப் பற்றி தனிப்பட்ட முறையில் நான் விமர்ச்சிக்கவில்லை. சட்டமன்றத்தில் போர் நிறுத்தம் பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவரால் போரை நிறுத்த முடிந்ததா? ஆனால், மத்தியில் அதிக அளவில் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்டு, நம்மின மக்கள் அழிவதை வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது. அவரால் என்ன சாதிக்க முடிந்தது.புலி பதுங்குகிறது என்றால் பாய்வதற்காகத்தான். அடுத்த கட்டப் போரில் தனி ஈழம் உருவாகும் என்றார் அவர்.

அகதி முகாமில் பறந்த புலிக் கொடி
 
ஈழ மக்கள்  நவம்பர் 27‐ம் நாளை மாவீரர் வீர வணக்க நாளாக அனுசரிப்பதையொட்டி கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வெள்ளிக்கிழமை விடுதலைப் புலிகளின் கொடியேற்றப்பட்டும், கருப்பு கொடியேற்றப்பட்டும், தீபமேற்றப்பட்டும் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
விடுதலைப் புலிகள் ஆண்டுதோறும் அதன் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26‐க்கு மறுநாள் நவம்பர் 27‐ம் நாளை மாவீரர் வீரவணக்க நாளாக அனுசரிப்பார்கள். இந்த ஆண்டு இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை தொடர்ந்து முதல் முதலாக வீரவணக்க நாள் வருவதால் அதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்று போலீஸார் விழிப்புடன் இருந்தனர்.
 
இந்நிலையில் கும்மிடிப்பூண்டியில் இலங்கை அகதிகள் முகாமில் வெள்ளிக்கிழமை காலை முகாம் மக்கள் கூடும் பெரிய ஆலமரத்தின் உச்சியில் புலிச்சின்னம் தாங்கிய விடுதலைப் புலிகளின் கொடியேற்றப்பட்டிருந்தது. முன்தினம் நள்ளிரவே முகாம் பகுதியைச் சேர்ந்த யாரோ சிலர் விடுதலைப் புலிகளின் கொடியை ஆல மர உச்சியில் கட்டியிருக்கிறார்கள்.
 
அதே போல கும்மிடிப்பூண்டியில் இருந்து முகாமுக்கு வரும் வழியில் முகாமின் நுழைவாயிலில் ஒரு பனை மரத்தில் வாழை மரம் கட்டி அதில் தீபம் ஏற்றப்பட்டு கருப்பு கொடி கட்டப்பட்டு இருந்தது. அந்த பனை மரத்தில் ஒட்டப்பட்டிருந்த துண்டு பிரசுரத்தில் மாவீரர் நாள் என்று எழுதப்பட்டும், யூதர்களின் அர்ப்பணிப்பில் விடிந்தது இஸ்ரேல், தமிழர்களின் அர்ப்பணிப்பில் விடியும் தமிழீழம் என்று எழுதப்பட்டிருந்தது.
 
அதே போல கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமை சேர்ந்த முகாமில் சில மாதங்களுக்கு முன்பு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற போரின் போது அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட முத்துக்குமரன;, முருகதாசு, இராஜா, அமரேசன், பாலசுந்தரம்,கோகுல், ராஜசேகர், எழில்வேந்தன்,இரவிசந்திரன், தமிழ்வேந்தன்இ, சீனுவாசன், தமிழ்வேந்தன், சிவபிரகாசம், இரவி ஆகிய 14 பேர்களின் படங்களை தாங்கி பதாகை வைக்கப்பட்டு அதன் முன்பே வாழை மரம் நடப்பட்டு அதன் உச்சியில் தீபம் ஏற்றப்பட்டிருந்தது.
 
இராமேஸ்வரத்தில்…

போரில் உயிரிழந்த விடுதலைப் புலிகளுக்கு ராமேசுவரத்தில், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வெள்ளிக்கிழமை நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.  இலங்கையில் போரில் உயிரிழந்த புலிகளுக்கு நவ.27‐ம் தேதி விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வீரவணக்கம் செலுத்துவார்.  பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இறந்து விட்டதாக செய்யப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இதனையடுத்து புலிகளுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட உலகத்தில் உள்ள தமிழர்கள் வெள்ளிக்கிழமை நினைவஞ்சலி செலுத்தினர்.
 
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் மலரஞ்சலி செலுத்தினர்.  பின்னர் ஊர்வலமாகப் புறப்பட்டு திட்டகுடி தெருவில், உயிரிழந்த புலிகளுக்காக நினைவு தீபம் ஏற்றி நினைவஞ்சலி செலுத்தி உரையாற்றினர்.  இதில் மதிமுக மாநில இளைஞரணி செயலர் கராத்தே பழனிச்சாமி தலைமை வகித்தார். மதிமுக மண்டபம் ஒன்றிய செயலர் பேட்ரிக், நகர் செயலர் பாஸ்கரன், நாம் தமிழர் இயக்க மாவட்ட குழு டோமினிக்ரவி, மாநில மீனவர் பேரவை இளைஞரணி செயலர் செரோன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மதிமுக நகர் இளைஞரணி செயலர் கண்.இளங்கோ வரவேற்றுப் பேசினார். மதிமுக மாணவரணி செயலர் சுகநாதன் நன்றி கூறினார்.
 
மதுரையில்…..
 
இலங்கை உள்நாட்டு போரில் உயிர்நீத்தவர்களுக்கு வீரவணக்க நாள் நிகழ்ச்சி மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  ஜான்சிராணி பூங்கா அருகிலிருந்து தொடங்கிய பேரணியில் மதிமுக மாநகர் மாவட்டச் செயலர் புதூர் பூமிநாதன், கட்சியின் மாநில தொழிற்சங்க நிர்வாகி மகபூப்ஜான், தமிழத் தேசிய இயக்கத்தின் ந.கணேசன், முற்போக்கு கவிஞர் பேரவை தமிழ்க்கூத்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  பின்னர் மேலமாசி வீதி‐ வடக்குமாசி வீதி சந்திப்பில் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
அஞ்சலி
 
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஈழ ஆதரவு வழக்கறிஞர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.  விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் மதுரை நகர் மாவட்டச் செயலர் பாண்டியம்மாள் தலைமையில் அண்ணா பஸ் நிலையம் அருகில் அஞ்சலி செலுத்தப்பட்டது.  இதேபோல, கட்சியின் புறநகர் மாவட்டச் செயலர் எல்லாளன் தலைமையில் தல்லாகுளம் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.  தமிழர் தேசிய இயக்கம் சார்பில் அதன் மாநிலப் பொறுப்பாளர் எம்.ஆர்.மாணிக்கம் தலைமையில் மதுரை மாநகர் தலைவர் வித்தை கணபதி உள்ளிட்டோர் மேலச்சித்திரை வீதியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தினர்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினால் இன்று சென்னையில் அனுஷ்டிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம்
 
விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினால் இன்று சென்னையில் அனுஷ்டிக்கப்பட்டது. தென் சென்னை மாவட்டத்தின் தியாகராயர் நகர் பிரதேசத்தில் நடைபெற்ற இந்த மாவீரர் நினைவு வைபவத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச்  செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.