காங்கிரஸ் இளங்கோவன் வீடு மீது குண்டு வீச்சு: சீமான் ஆதரவாளர்கள் 3 பேர் கைது

முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் வீடு சென்னை அடையார் இந்திரா நகர் 10வது குறுக்குத் தெருவில் உள்ளது.  நேற்று முன்தினம் இளங்கோவன் குடும்பத்தினருடன் ஈரோட்டில் உள்ள வீட்டுக்கு சென்றார். சென்னை வீட்டில் காவலாளி மோசஸ் மட்டுமே இருந்தார்.

e-v-k-s-elangovanநேற்றிரவு 11.30 மணிக்கு காவலாளி மோசஸ் முன்பக்க கதவை பூட்டிவிட்டு தூங்கச் சென்றார். நள்ளிரவு 12 மணி அளவில் இளங்கோவன் வீட்டுக்கு 3 மர்ம மனிதர்கள் வந்தனர். அவர்கள் இளங்கோவன் வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினார்கள்.
 
அது வீட்டு முன்பக்க அறை வாசலில் விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்தது. அங்கு போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் தீ பிடித்து எரிந்தன. ஆள் உயரத்துக்கு நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது.
 
சத்தம் கேட்டு காவலாளி மோசஸ் முன் பக்க கதவை திறந்து பார்த்தார். அப்போது மர்ம மனிதர்கள் மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள்.
 
இதுபற்றி ஈரோட்டில் உள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு காவலாளி மோசஸ் தகவல் கொடுத்தார். பிறகு அடையார் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார்.
 
அடையார் போலீசார் விரைந்து சென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். பிறகு மர்ம நபர்கள் குறித்து 50 க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
 
குற்றவாளிகளை கண்டுபிடிக்க 2 தனிப்படை உருவாக்கப்பட்டது. போலீசாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக 3 பேர் சிக்கினார்கள். அவர்கள் சீமானின் உதவியாளரும் டைரக்டருமான மித்ரன், அருண், மணி என்று தனிப்படை போலீசார் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் மூவரும் டைரக்டர் சீமான் தொடங்கி உள்ள நாம் தமிழர் அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.
 
பிடிபட்ட 3 பேரிடமும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அப்போது அவர்கள் வியஜகுமார் தலைமையில் வந்து நாங்கள் பெட்ரால் குண்டு வீசினோம் என்றும், அதோடு பெட்ரோல் குண்டு தயாரிக்கவும் பயன்படுத்தவும் உதவி செய்தவர்கள் பற்றிய விபரங்களையும் போலீசாரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.
 
கைதான 3 பேர் மீதும் வெடி மருந்து சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் சில பிரிவுகள் மிக கடுமையான பிரிவுகளாகும். பெட்ரோல் வெடிகுண்டு வீச உதவி செய்த மற்றவர்களை பிடிக்க தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். எனவே இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலர் கைது செய்யப்படு வார்கள் என்று தெரிகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.