முள்வேலி முகாம்களிலிருந்து தமிழர்கள் வெளியேறும் வரை போராட்டம் ஓயாது: விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சீமான் சீற்றம்

இலங்கையில் இன்னும் தமிழர்கள் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் முள்வேலி முகாமில் மிகவும் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களை உடனடியாக முகாம்களில் இருந்து விடுவித்து சொந்த ஊர்களில் குடியமர்த்த வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது இயக்குநர் சீமான் என்று கூறியுள்ளார்.

seeman1_inகனடாவின் ரொறன்ரோவில் நடந்த மாவீரர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுவதற்காக சென்றிருந்த இயக்குநர் சீமானை அந்த நாட்டு குடியேற்றத்துறை அதிகாரிகள் திடீரென கைது செய்தனர். பின்னர் நாட்டை விட்டு வெளியேறுமாறும் கூறினர். இதையடுத்து சீமான் சென்னை கிளம்பினார்.

இன்று அதிகாலை சென்னை வந்து சேர்ந்த சீமானுக்கு நாம் தமிழர் இயக்கத்தினர், தமிழ் உணர்வாளர்கள் என பெரும் திரளானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கைகளில் பிரபாகரன் படங்களையும், விடுதலைப் புலிகளின் கொடிகளையும் ஏந்தி வந்து சீமானை வரவேற்றனர்.

மேலும் ஈழத்திற்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும், பிரபாகரனை வாழ்த்தியும் கோஷமிட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,

ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் கொண்டாடப்படுகிறது. அதில் நான் எல்லா கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசி வருகிறேன். இந்த ஆண்டு கனடாவில் மாவீரர் தின நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள கனடா சென்றிருந்தேன்.

கனடா நாட்டில் உள்ள எனது சகோதரர் வீட்டில் நான் தங்கியிருந்த போது அந்த நாட்டு பொலிஸார் எனது அறைக்கு வந்தனர். என்னை கைது செய்வதாக தெரிவித்தனர்.

மேலும் மாவீரர் தின கூட்டத்தில் என்னைப் பேசக்கூடாது என்றும், உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும் என்றும் கூறி என்னை விமான நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

விடுதலைப்புலிகளை கூண்டோடு அழித்துவிட்டதாக கூறிக் கொள்பவர்கள் மாவீரர் தின நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுப்பது ஏன்? இலங்கையில் இன்னும் தமிழர்கள் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் முள்வேலி முகாமில் மிகவும் துன்புறுத்தப்படுகிறார்கள்.

அவர்களை உடனடியாக முகாம்களில் இருந்து விடுவித்து சொந்த ஊர்களில் குடியமர்த்த வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது என்றார் சீமான்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.