ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு இந்தியாவும், சரத்திற்கு அமெரிக்காவும் ஆதரவு: தென்பகுதியில் தேர்தல் பயம் கூடும் என இராஜதந்திரிகள் கருத்து

ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவுள்ள மகிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதில் இந்தியாவும், ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிப்பதில் அமெரிக்காவும் மறைமுகமாக ஈடுபட்டுள்ளதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவ்வாறு  யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் வலம்புரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

nerudal-tamil-news1எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு தமது பொதுவேட்பாளராக முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை நிறுத்தியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகவலை வெளியிடாமல் அமைதிகாத்த ஜெனரல் சரத்பொன்சேகா தற்போது தேர்தலில் தான் போட்டியிடுவதை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் போட்டியிடும் கள நிலைமை தென்பகுதியில் ஒருபோதும் இல்லாத தேர்தல் பயத்தை உண்டு பண்ணும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் வன்னி யுத்த வெற்றியுடன் சம்பந்தப்பட்ட இரு பெரும் முக்கியஸ்தர்கள் போட்டியிடுவதால் உள்நாட்டில் ஏற்படக்கூடிய தேர்தல் களேபரத்திற்கு அப்பால் இலங்கை தொடர்பில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான மறைமுகப் போட்டியில் எதிர் ஒலிப்புக்களும் ஜனாதிபதித் தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் என அரசியல் இராஜதந்திரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ வெற்றியடைய வேண்டும் என இந்தியா விரும்புகின்றது. அதேநேரம் ஜெனரல் சரத்பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைக்கூட இந்திய மத்திய அரசு விரும்பவில்லை என கூறப்படுகின்றது.

ஆனால் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போட்டியிடும். ஜெனரல் சரத் பொன்சேகா வெற்றி பெறுவதை அமெரிக்கா விரும்புவதாகவும் இதற்கான ஆலோசனைகள் ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவுக்குச் சென்ற போது வழங்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது. இவ்வாறு வலம்புரி நாளிதழ் தனது இன்றைய பதிப்பில் தெரிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.