தடுமாறாமல் முடிவு எடுக்கவேண்டிய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக் கப்பட்டுவிட்டது. இன்னும் இரண்டரை வாரத்தில் வேட்புமனுத் தாக்கல். அது முடிந்து நாற்பது நாள்களில் தேர்தல்.

இந்தத் தேர்தலை தமிழர்களுக்கு வாய்ப்பான விதத்தில் எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பில் தமிழ்க்கட்சிகள் இன்னும் தெளிவான முடிவுக்கு வரவில்லை. இரண்டுங்கெட்டான் நிலையில் அவை அந்தரிக்கின்றமை பகிரங்கமானது.

tnatamileelamquestionஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி, சித்தார்த்தனின் புளொட், கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்றவை மஹிந்த ராஜபக்ஷவை இத்தேர்தலில் ஆதரிக்கத் தீர்மானித்து விட்டன. இது அனேகமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலை தான் திரிசங்கு சொர்க்க நிலையில் இருக்கின்றது. அக்கூட்டமைப்பில் உள்ள கட்சிகளைப் பொறுத்த வரையில், தமிழர் தரப்பின் நலனுக்கு எது உகந்ததோ அதனைச் செய்யவேண்டியவையாக அவை உள்ளன.

ஆனால் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களின் ஊசலாட் டங்களைப் பார்த்தால் அவர்களும் தமது அரசியல் இருப்புக்கான விடயத்துக்கே முன்னுரிமை கொடுப்பவர்கள் போல ஒரு தோற்றம் தெரிகிறது. இந்தத் தேர்தல் மூலம் தென்னிலங்கை அதிகாரத் தரப்பில் ஏற்படக்கூடிய மாற்றம் அல்லது மாற்றமின்மை மூலம், தமிழர்களுக்கு கொஞ்சநஞ்ச அதிகாரத்தையா வதுவலிமையையாவதுஅரசியல் பலத்தையாவது பெற்றுத் தருவதற்கான முழு முயற்சிகளிலேயே இத்தரப்பினர் ஈடுபட வேண்டும். ஆனால் அதைச் செய் பவர்களாக அவர்களின் போக்குத் தென்படவில்லை என்ற குற்றச்சாட்டு மேலோங்கி வருகிறது.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வரக்கூடிய பொதுத் தேர்தலைத் தாம் எப்படி எதிர்கொள்வது, அதற்காகத் தங்கள் தேர்தல் மாவட்டங்களுக்குத் தங்குதடையின்றித் தாங்கள் சென்று வருவதற்கான உறுதிப்பாட்டை இந்த ஜனாதிபதித் தேர்தலை ஒட்டித் தாம் எடுக்கும் நிலைப்பாடு பாதிக்காமல் பார்த்துக்கொள்வது எப்படி, அந்தப் பொதுத் தேர்தலில் தத்தமது வெற்றியை உறு திப்படுத்துவதற்கான சூழல் பாதிப்புறாமல் பார்த்துக் கொள்வது எங்ஙனம் என்பனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரமுகர்களின் சிந்தனையோட்டத்தில் மேலோங்கி வருவதாகக் கருதப்படுகிறது.

ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாகத் தெரி வாகின்றமை நல்லதா? அல்லது சரத் பொன்சேகா தெரிவு செய்யப்படுகின்றமை உசிதமானதா? தமிழர் தரப்பின் முடிவும், தீர்மானமும் இந்தத் தேர்தலின் இறுதி முடிவை மாற்றச் செய்யுமா, இல்லையா? இத்தேர்தலைப் பயன்படுத்தித் தமிழர்களின் வலிமையை  பலத்தை  மேம்படுத்தச் செய்யும் இலக்குகளைப் பேரம்பேசி எட்டுவதற்கான வாய்ப்புகள் உண்டா? இல்லையா?  இதுபோன்ற விடயங்களைக் கவனத்தில் கொண்டு, முடிவுகளைத் தீர்மானிக்கவேண்டிய கடமை, பொறுப்பு தமிழ்க்கூட்டமைப்புக்கு உண்டு. அதனையே அவர்களுக்கு வாக்களித்த மக்கள் விரும்புகின்றார்கள்.

அதிகாரத் தரப்பாரையும் பகைக்காமல், அதேநேரம் மக்களுக்கு வெளிப்படையாக சரியான வழிகாட்டலைத் தாம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுத் தமக்கு எதிராகக் கிளம்பாமலும் பார்த்துக்கொள்வதில்தான் கூட்டமைப்புத் தலைமையின் சிரத்தை இருப்பதாகவும் மக்கள் மத்தியில் சந்தேகம் கிளம்புகிறது. 
இந்த ஆட்சியை நீடிக்க விடலாமா? மாற்றத்தைக் கொண்டு வரவேண்டுமா? அப்படிக் கொண்டு வர வேண்டுமாயின் அதில் தமிழர்கள் ஆக்கபூர்வமாகப் பங்களிக்க வழிவகை உண்டா? வாய்ப்புண்டா?  என்பவை பற்றியெல்லாம் சிந்தித்து, சரியான முடிவு எடுத்து, தமது மக்களை நேரான பாதையில் வழிநடத்த வேண்டிய முழுப்பொறுப்பும் தமிழ்க் கூட்டமைப்புக்கு உண்டு.
ஆனால், அதுபற்றியெல்லாம் ஆழமாக ஆராயப் படுவதாகத் தென்படவில்லை.

அதைவிடுத்து, போட்டியில் இருக்கும் இரு தரப் புகளையும் சமாளித்து நடந்துகொள்வது அல்லது ஒரு தரப்புடன் கைகோர்ப்பது என்ற நிலைப்பாட்டால் தமிழ் மக்களுக்கு எதனையும் ஈட்டிக்கொடுக்க முடியாது.

மக்களின் மனங்களை அறிந்து ஒரு முடிவை மேற்கொள்ள தமிழ் கூட்டமைப்பினர் முன்வர வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ, ஜெனரல் சரத்பொன்சேகா ஆகியோருக்கு மேலதிகமாக பொதுத் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்ற முயற்சியின் பின்னால் புதைந்து கிடக்கும் சூட்சுமம் இதுதான் எனக் கூறப் படுகின்றது.
இந்த ஆட்சியை நீடிக்க அனுமதிக்கலாமா? இல்லையா? மாற்றத்தான் வேண்டுமாயின் அதற்காகப் பொன்சேகாவைத் தெரிவு செய்ய இடமளிக்கலாமா?

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.