அமெரிக்க தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் புறக்கணிப்புப் போராட்டம்

அமெரிக்காவின் மிக முக்கியமான நகரங்களில் சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட ஆயத்த ஆடை புறக்கணிப்புப் போராட்டம் நேற்று சனிக்கிழமை தமிழர்களால் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது.

நியூ யோர்க், வோஷிங்டன் டி.சி., அட்லாண்டா, மியாமி, சான்பிரான்சிஸ்கோ, டலஸ், போஸ்டன் ஆகிய முதன்மையான நகரங்களில் ஒரே நேரத்தில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

VS8சிறிலங்காவில் ஆடைகள் தயாரித்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்து விற்கும் முதன்மை நிறுவனங்களான – Victoria’s Secret மற்றும் GAP ஆகிய நிறுவனங்களின் சில்லறை விற்பனைக் கடைகள் முன்றலிலேயே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

சிறிய அளவில் – சில மாதங்களிற்கு முன்னதாக – ஓரிரு நகரங்களில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் – இப்போது, அமெரிக்காவின் பல நகரங்களிற்கும் விரிவாக்கம் பெற்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அமெரிக்கத் தமிழ் அரசியல் செயல் அவை -யின் [United States Tamil Political Action Committee – USTPAC] “சிறிலங்கா தயாரிப்புக்கள் புறக்கணிப்புப் போராட்டக் குழு” [Sri Lankan Products Boycott Committee] இந்தப் போராட்டங்களை ஒழுங்கமைத்து முன்னெடுத்து வருகின்றது.

“எமது கோரிக்கை தெளிவானது. இந்தக் கடைகளிற்குச் சென்று உடைகள் எதனையுமே வாங்க வேண்டாம் என நாங்கள் வாடிக்கையாளர்களைக் கோரவில்லை; ‘தயாரிப்பு நாட்டுப் பட்டியைப் பாருங்கள். “Made in Sri Lanka” என்று இருந்தால் உடனேயே கீழே வைத்து விடுங்கள்’ எனக் கோருகின்றோம்” எனப் போராட்ட ஒழுங்கமைப்பாளர்களுள் ஒருவரான சிவா நாதன் புதினப்பலகை -யிடம் கூறினார்.

சிறிய அளவில் செய்யப்படும் இந்தப் போராட்டங்களால் பெரிய அளவில் பயன் எதுவும் கிடைக்காது என்று சொல்லப்படும் கருத்தை அவர் அடியோடு மறுத்தார்.

“சிறிலங்கா அரசு செய்த தமிழினப் படுகெலையை நாம் படங்களாகக் காட்டுகின்றோம்; இலட்சக் கணக்கான தமிழர்கள் இராணுவத் தடுப்பு முகாம்களுக்குள் இன்னும் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை நாம் ஆதாரங்களோடு அறியத்தருகின்றோம்; பதாகை அட்டைகளைப் பிடிப்பது மட்டும் இல்லாமல், எல்லா விபரங்களையும் சிறிய பிரசுரங்களாக அச்சிட்டு வாடிக்கையாளர்களின் கைகளில் கொடுக்கின்றோம். இவை எல்லாம் அவர்களைச் சிந்திக்கத் தூண்டும்.

சாதாரணமாக ஒரு உடையை வாங்குவதன் ஊடாக அவர்கள் கொடுக்கும் பணம், ஒரு மனித சமுதாயத்தின் அழிவுக்குச் செலவிடப்படுகின்றது என்பதை விளக்குகின்றோம். இவையெல்லாம் – சாதாரண குடி மகனின் இதயத்தைக் கட்டாயம் உலுக்கும்; நிச்சயமாக உலுக்குகின்றது” என்றார் சிவா நாதன்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தம்மைப் பார்த்துப், பேசி, கடந்து கடைகளுக்கு உள்ளே சென்ற பல அமெரிக்கர்கள் – தமக்குப் பிடித்திருந்த பல உடைகளில் “Made in Sri Lanka” என்ற பட்டி இருந்ததால் அவற்றை வாங்காமல் விட்டுச் செல்வதாக வெறுங்கையோடு திரும்பி வந்து எம்மிடம் சொல்லி விட்டுச் சென்றனர் என்றார் மருத்துவர் சோம இளங்கோவன்.

“நடப்பவை எல்லாம் தமக்குத் தெளிவாகத் தெரியும் எனவும், இனி எப்போதும் சிறிலங்கா தயாரிப்பு உடைகளை தாம் வாங்கப் போவதில்லை எனவும் அவர்கள் எம்மிடம் உறுதி கூறினர்” என்று அவர் மேலும் சொன்னார்.

இது போன்ற சம்பவங்கள் பல சந்தர்ப்பங்களில், போராட்டம் நடைபெற்ற பல இடங்களில் நடந்துள்ளன.

“அரசியல் உயர் பீடங்களிலும், வணிக முகாமைத்துவ உயர் மட்டங்களிலும் இருப்பவர்கள் தமது நிறுவனங்களின் நலன் சார்ந்து மட்டுமே இயங்குவர். ஆனால், தெருவிலே போகின்ற சாதாரண மனிதனின் மனச் சாட்சியைத் தொடுவது சுலபம்.

பக்குவமாக எமது உள்ளத்துக் குமுறலை நாம் விளக்கிச் சொல்லும் போது சாதாரண மனிதனின் மனது இளகியே தீரும். இரத்தக் கறை படிந்த ஆடைகளை உடுத்த அவன் தயங்கினால் – உயர் மட்டங்களில் இருப்பவர்கள் தமது வியாபாரக் கொள்கைகளை மாற்றியே ஆக வேண்டி வரும்” என்று புதினப்பலகை-யிடம் கூறினார் இன்னொரு ஒழுங்கமைப்பாளரான பாலன் பாலசிங்கம். “அது தான் எமது இலக்கு,” என்றார் அவர்.

நாள் பார்த்து – நேரம் குறித்து – மும்முரமாக வியாபாரம் களைகட்டும் தருணங்கள் பார்த்து பதாக அட்டைகளோடு அவர்களது வாசல்களை நாம் முற்றுகையிடுவது – இந்த வியாபார நிறுவனங்களின் உயர் நிர்வாக பீடத்தினரை சினப்படுத்தவே செய்கின்றது.

மிக உயர்ந்த இடங்களில் இருக்கும் நிர்வாகிகளே இறங்கி வெளியே வந்து தமது வியாபாரத்தைப் பாதிக்காமல் விலகிச் செல்லுமாறு கெஞ்சுகின்றனர்; அது தான் எமது வெற்றியின் ஆரம்பம்.

ஆனால், அப்போது நாம் அவர்களுக்குச் சொல்லுகின்ற செய்தி புரிந்து கொள்ளுவதற்கு மிகவும் இலகுவானது: ‘சிறிலங்காவில் நீங்கள் செய்யும் அனைத்து வியாபார முதலீடுகளையும் திரும்ப எடுங்கள்; அவ்வளவு தான்,’ என்றார் அமெரிக்க தமிழ் அரசியல் செயல் அவை-யின் துணைத் தலைவர் மருத்துவர் எலீன் ஷாண்டர் [Dr. Ellyn Shander].

“இந்தப் போராட்டங்களால் பெரிய பயன் கிடைக்காது என்ற கருத்து ஒரு புறம் இருப்பது உண்மை தான்; ஆனால், மிகச் சிறிய அளவில் ஆரம்பித்து, இப்போது மெல்ல மெல்ல இதனை விரிவாக்கிச் செல்லும் போது பல உருப்படியான விளைவுகளை நாம் ஏற்கெனவே பார்க்கின்றோம்,” என்றார் அமெரிக்க தமிழ் அரசியல் செயல் அவை-யின் தலைவர் கலாநிதி எலையஸ் ஜெயராஜா.

“இப்போது இருக்கின்ற புறச்-சூழலில் – விளைவுகளை அடையக் கூடியவையாக உள்ள மிகச் சில போராட்ட வடிவங்களுள் ஒன்றாக, இந்த ஆயத்த ஆடை புறக்கணிப்புப் போரை தமிழர்கள் கருதுகின்றார்கள்.

ஆரம்பத்தில் ஒரு சில தமிழர்களோடு, அமெரிக்காவின் ஒரு சில நகரங்களில் மட்டும் நடாத்தப்பட்ட இந்தப் “புறக்கணிப்பு”ப் போராட்டங்கள் இப்போது பல இடங்களில் ஏராளமான தமிழர்களது பங்களிப்போடு முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் புறக்கணிப்புப் போராட்டம் தொடர்ந்தும் வியாபித்துச் செல்லுகின்றது.

தமது வியாபாரம் பாதிக்கப்படும் போது, இந்த வியாபார நிறுவனங்களின் உயர் நிர்வாகத் தலைமையகங்களில் இருப்போர் எம்மோடு பேச நிர்ப்பந்திக்கப் படுகின்றார்கள். நாமும், வெறுமனே கடைகளின் வாசல்களில் நின்று பதாகை பிடிப்பதை மட்டும் செய்யவில்லை; உயர் தலைமையக நிர்வாகிகளுடனும் நாம் பேச இருக்கின்றோம்.

சிறிலங்காவில் ஆடை தயாரிக்கும் சில வியாபார நிறுவனங்களின் உயர் நிர்வாக பீடங்களோடு நாம் ஏற்கெனவே தொடர்பை ஏற்படுத்தி விட்டோம். எமது போராட்டங்களின் பயனை நாம் ஏற்கெனவே பார்க்க ஆரம்பித்து விட்டோம். முழுமையான பயனை அடைய வேண்டுமானால் நாம் தொடர்ந்தும் இந்தப் போராட்டத்தை வளர்த்துச் செல்ல வேண்டும்,” என்று மேலும் சொன்னார் ஜெயராஜா.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் – இத்தகைய போராட்டங்கள் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டியவை எனக் குறிப்பிட்டார். உதாரணமாக – அமெரிக்காவில் Victoria’s Secret மற்றும் GAP நிறுவனங்கள் போல, பிரித்தானியாவில் Marks & Spencer நிறுவனம் சிறிலங்காவுடன் மிக உயர் நிலை ஆடை தயாரிப்பு வியாபார உறவுகளைப் பேணுகின்றது. உலகம் முழுவதும் உள்ள அப்படியான இடங்களில் எல்லாம் இத்தகைய போராட்டங்கள் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.