விடுதலைப் புலிகள் குறித்த சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு அரசாங்கம் அதிருப்தி

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்திற்கு அரசாங்கம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தவர்களும் தமக்கு வாக்களிக்க முடியும் என ஜெனரல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார் எனவும், இது ஓர் பாரதூரமான கூற்று எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

srilanka-governmentதேர்தலில் யார் ஆதரவு வழங்கினாலும் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதாகவும், விடுதலைப் புலி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பிரபாகரனின் பெற்றோர் ஆதரவு வழங்கினாலும் ஏற்றுக்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
நாட்டை விடுதலைப் புலிகளிடமிருந்து பாதுகாத்ததாகத் தெரிவித்துக் கொள்ளும் ஓர் இராணுவ ஜெனரலிடமிருந்து இவ்வாறான ஓர் கூற்றை எதிர்பார்க்கவில்லை எனவும், ஜனாதிபதியோ அல்லது மக்களோ இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.
 
ஜெனரல் பொன்சேகாவின் கொள்கை இதுவென்றால் மிகவும் ஆபத்தான ஓர் நிலையை ஏற்படுத்தக் கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பீனிக்ஸ் பறவைக்கு நிகரானது எனவும், மீண்டும் உயிர்த்தெழ சந்தர்ப்பம் பார்த்து காத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இவ்வாறான ஓர் நிலைமையின் கீழ் ஜெனரல் சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளுக்கு ஒட்சிசன் வழங்க முயற்சிக்கின்றாரா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
சரத் பொன்சேகாவின் இந்தக் கூற்று பல்வேறு தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் செய்த ஆயிரக் கணக்கான படைவீரர்களுக்கு இழைக்கும் துரோகமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களிடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்வது சட்டத்திற்கு முரணானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இவ்வாறான கொள்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் ஆதரவு வழங்குமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.