ஜெனரல் சரத் பொன்சேகா யுத்த காலத்தின் இராணுவ இரகசியங்களை வெளியிடக்கூடாது: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கோரிக்கை

கூட்டுப்படைகளின் முன்னாள் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா, யுத்த கால இராணுவ நடவடிக்கைகளின் இரகசியங்களை வெளியிட முற்படக்கூடாது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கோக்கை விடுத்துள்ளது.

gunadasaஎதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய மீள்குடியேற்றம் நடைபெறுமானால் அது மீண்டும் ஒரு பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையுமே தோற்றுவிக்கும். இதுவே அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும். இந்த சர்வதேச சதி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு தேசிய நூலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவ்வியக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தேர்தலில் தோற்கடித்து அவரது அரசாங்கத்தை கவிழ்த்துவிட வேண்டும் என்பதே அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேசத்தின் திட்டமாகும். ஈராக்கில் சதாம் ஹுசைனை சிறைப்படுத்தி அழித்துவிட்ட அமெரிக்கா தற்போது அங்கு தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது.

அதே வகையில் இலங்கையிலும் ஆக்கிரமிப்பை நடத்துவதற்கு சதிகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு உள்ளூரிலும் தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படுகின்றன.

முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகாவை தனது வலைக்குள் விழுத்திய அமெரிக்கா அவரையே தற்போது ஜனாதிபதி வேட்பாளராகவும் நிறுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சதிகாரர்களின் சூழ்ச்சிகளுக்கமைய ஜெனரல் சரத் பொன்சேகா நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதாகவும் மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்துவதாகவும் கூறி வருகின்றார்.

நிறைவேற்று அதிகாரம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பது பிரதமர் தலைமையிலான அதிகாரம் கொண்ட அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பதும் அமெரிக்காவின் விருப்பம் ஆகும்.

ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவின் குடியுமையை எதிர்பார்த்திருப்பவர் என்ற காரணத்தினால் அவர் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு உட்பட்டே நடந்து கொள்கிறார் என்பது தெளிவாகின்றது.

அதேபோல் மீள்குடியேற்றம் என்று கூறிவிட்டு தற்போது எதிர்க் கட்சிகளின் யோசனையின் பிரகாரம் அது நடைபெறுமானால் மீண்டும் ஒரு பயங்கரவாதம் உருவாவதற்கே அது வழிவகுக்கும்.

பயங்கரவாதம் பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதனை இராணுவத்தினரோ அல்லது இராணுவத் தளபதியோ நிறைவேற்றி வைக்கவில்லை. நாட்டின் மக்கள் சக்தியே இந்த பயங்கரவாதத்தை தோற்கடித்தது. பிரிவினைவாதத்தை முறியடித்தது.

இந்த மக்கள் சக்தி பிரபாகரனை ஒழித்துக் கட்டியதிலும் பார்க்க எமது நாட்டுக்கு எதிரான சர்வதேச சதித்திட்டங்களை முறியடிப்பதே முக்கியமானதாகும்.

இங்கு கருத்து தெரிவித்த இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் டாக்டர் பியசேன திசாநாயக்க,

ஜெனரல் சரத் பொன்சேகா எமது நாட்டு இராணுவ இரகசியங்களை வெளியிட்டு வருகின்றார். இவ்விடயம் கடந்த சில நாட்களாக அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளன.

அண்மையில் ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்கா சென்றிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் கடந்தகால யுத்த நடவடிக்கைகள் சம்பந்தமான இரகசியங்களை இவர் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலர் ரொபர்ட் ஓ. பிளேக் தான் ஜெனரல் சரத் பொன்சேகாவை இயக்கிக் கொண்டிருக்கின்றார்.

இவர்களது நோக்கமே யுத்தக் குற்றவியல் நீதிமன்றத்தில் எமது நாட்டுத் தலைவர்களை நிறுத்திவிடுவதற்கும் சதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை முறியடிக்கப்பட வேண்டியவை” என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.