பழைய விவகாரங்களைக் கிண்டிக்கிளறும் வகையில் அமையப்போகும் ஜனாதிபதித்தேர்தல் பிரசாரக்களம்

அனைவரதும் கவனத்தைத் திசைதிருப்பியிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்துவது என்ற ஜனாதிபதியின் தீர்மானத்தோடு ஒரு முடிவுக்கு வந்தது.அதேபோன்று சூடுபிடித்த பொது வேட்பாளர் என்ற விவகாரம் முன்னாள் பாதுகாப்புப்படை பிரதானி சரத் பொன்சேகாவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கெதிரான பொது வேட்பாளராக நிறுத்துவது என்ற படிப்படியான கட்சிகளின் தீர்மானம் மூலமாக முடிவுக்கு வந்துவிட்டது எனலாம்.

SarathFonsekaஇதுவரையில் ம.வி.மு.,சு.க.மக்கள் பிரிவு ஆகியன வெளிப்படையாக பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத்துவது தொடர்பில் தத்தமது விருப்புரிமைகளை வெளியிட்டுள்ளன. தொடர்ந்து ஐ.தே.க.வும் பொதுவேட்பாளராக சரத்பொன்சேகா நிறுத்தப்படுவதை ஆமோதித்துவிட்டது. ஸ்ரீ.மு.காங்கிரஸ் ஜ.ம.மு. ஆகிய கட்சிகள் கூட சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க முன்வரலாம் எனக் கூறப்படுகின்றது.

அதேவேளையில்,ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவோ இலங்கை மக்களின் பொதுவான எதிர்பார்ப்பும் பொது வேட்பாளரும் நானே என்று கூறியுள்ளார்.பிரதான 3 கட்சிகளை வைத்துக்கொண்டு ஐ.தே.மு.என்று கூறப்படுவதை எள்ளி நகையாடிய ஆளும் கூட்டணி தமது கூட்டணியில் அடங்கியுள்ள கட்சிகளின் மொத்த எண்ணிக்கையை வெளியே காட்டி உண்மையான பொதுவேட்பாளர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே என்று சுட்டிக்காட்டத்தவறவில்லை.

அந்த வகையில் இருமுனைப் போட்டிக்காக இதுவரையில் சமிக்ஞை செய்து கொண்டிருக்கின்ற ஜனாதிபதித்தேர்தல் களம் மூன்றாம்,நான்காம், ஐந்தாம் வேட்பாளர்களையும் கொண்டு வருமோ, இல்லையோ தற்போதைக்கு மகிந்த ராஜபக்ஷ எதிர் சரத்பொன்சேகா என்று கூறுகின்ற அதே நேரத்தில், பொது வேட்பாளர் எதிர் பொதுவேட்பாளர் என்று அரசியல் கண்ணோட்டத்தில் கூறலாம்.

பதவியிலிருக்கும் ஜனாதிபதியைத் தோற்கடிக்க முடியுமா என்ற ஒரு பாரிய கேள்விக்கு மத்தியில் சமகால அரசியல் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது.பதவியிலுள்ள ஜனாதிபதிகள் அரசியலமைப்பின் மூன்றாவது திருத்தத்தை முக்காடு போன்று ஆக்கிக்கொண்டு முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தல் நடத்துவது வெற்றியை நிச்சயமாக்கிக் கொள்வதற்கேயன்றி தோற்றுப்போவதற்கல்ல என்ற கோட்பாட்டையும் நினைத்துப் பார்க்காமலிருக்க முடியாது.அரசியலமைப்புக்கான மூன்றாவது திருத்தமென்பது தீர்மானம் எடுக்கின்ற மக்களின் காலஅவகாசத்தை சூறையாடுவதற்கும் சூறையாடிச் செல்வதற்கும் ஒப்பானது.இதுகுறித்த மக்களின் கால அவகாசத்தை சூட்சுமமான முறையில் காலஞ்சென்ற ஜனாதிபதி ஜே. ஆர்.ஜெயவர்த்தன நேர் முன்பதான ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றோர் முக்காடாக்கிக் கொண்டதற்கு நான்மட்டும் என்ன விதிவிலக்கா? எனக்கேட்பது போன்றதே மகிந்த ராஜபக்ஷவினதும் முன்கூட்டியே ஜனாதிபதித்தேர்தலை நடத்துவது என்ற விருப்புரிமையும் வெளிப்பாடுமாகும்.

எது எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலுக்கான களம் தனது திரையை விலக்கி பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே குறித்த களம் மறந்துபோன பழைய பழைய விவகாரங்களை கிண்டிக்கிளறி வெளியே இழுத்துப்போடுவது போன்று அமையுமாற்போல் தற்போதே புடம் போட்டுக் காண்பிக்கின்றது. வரும் ஜனாதிபதித்தேர்தல் சிங்களப் பெரும்பான்மை வாக்குகள் ரீதியான சவாலைத்தான் கொண்டுவரும் என நோக்கர்கள் கூறிக்கொண்டிருந்தாலும் வார்த்தைகளிலும் சவால் மிக்கதாகவே அமையும் போல் தென்படுகின்றது.

வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் ,சமூக அபிவிருத்தி ஜனநாயகம்,நல்லாட்சி,பொருளாதார முன்னேற்றம்,பாராளுமன்ற ஜனநாயகம், ஆரோக்கியமான சர்வதேச உறவு, அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள், போன்ற விவகாரங்கள் உணர்த்தப்படுவதற்கும் உரையாற்றுவதற்கும் இருந்து கொண்டிருப்பினும் பிரபாகரனைக் கொன்றொழித்து பயங்கரவாதத்தைப் பூண்டோடு ஒழித்துக்கட்டியமைக்கு உரிமையாளர் யார் என்ற கேள்விக்கு விடை தேடுவதாகவே ஜனாதிபதித்தேர்தல் பிரசாரக்களம் இருக்கப்போகின்றது.

அதற்கு முன்னோடியாக சரத் பொன்சேகா மெய்ப்பாதுகாவலாளர்களின் எண்ணிக்கை பற்றி பேசியுள்ளமை வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு, நீதிமன்றப்படிக்கட்டுகளில் ஏறி இறங்கியுள்ளமை ஓய்வு பெற்ற தனது துறை சார்ந்தோருக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு “ராஜபக்ஷ%27களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பின் வலிமை,தான் ஒரு பொது வேட்பாளராக களமிறங்குவது தொடர்பிலுள்ள சம்பந்தப்பட்டவர்களது எதிர்ப்பு மற்றும் பொறாமை பற்றிய பிரஸ்தாபம், பிரபாகரனை ஒழித்துக்கட்டி பெறப்பட்ட இராணுவ வெற்றிக்கு தனி மனிதர் உரிமை கோரமுடியாது என்ற ஆதங்க வெளிப்பாடு, ஒரு குற்றவாளியைக் கைது செய்வதற்கு வந்தமை போன்று இராணுவ உத்தியோகத்தர்கள் அச்சுறுத்த வந்ததாக அவரே கூறியமை போன்ற முக்கியவிடயங்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக்களத்தின் அவலட்சணத்தை எதிர்வு கூருகின்றது.

அது ஒருபுறமிருக்க இராஜாங்கத் தரப்பிலிருந்தும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக்களம் அவலட்சணமானதாகவே இருக்குமென்பதற்கு சான்று பகரக்கூடிய சங்கதிகள் வெளிவராமலுமில்லை. விரும்பத்தகாத நடவடிக்கைகளுக்கு அந்த விருப்புரிமை கொண்ட இராஜாங்க முக்கியஸ்தர் ஒருவர் இராணுவ வெற்றியின் உரிமை சேரவேண்டிய விதம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், பிரபாகரனையும் அவரது சகபாடிகளையும் கொன்று குவித்து யுத்தத்தை வெற்றி கொண்டபோது சரத்பொன்சேகா சீனாவில் இருந்தார். அப்படியானால் அவரைத் தவிர ஏனைய வீரர்களுக்கே யுத்த வெற்றியின் கௌரவம் சென்றடையவேண்டும் என்று குறிப்பிட்டார்.வெளிநாட்டிலிருந்த ஜனாதிபதியோ ஓடோடி வந்து சேர்ந்ததையும் குறித்த முக்கியஸ்தர் ஞாபகமூட்டத் தவறவில்லை.

இதுவரையில் அரசியலில் ஈடுபட்டு அமைச்சர் பதவிகளிலோ அல்லது வேறு உயர்பதவிகளிலோ சரத்பொன்சேகா இருக்கவில்லை. அப்படிப்பட்ட ஒருவருக்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்க முடியுமா?என்று கேள்வி எழுப்புகின்ற பலரிடையே இராணுவ அதிகாரி ஒரு வருடத்தில் ஜனநாயக மக்களாட்சியை ஒப்படைப்பது எவ்வாறு என்று கேள்வி எழுப்புகின்ற சிலரும் உள்ளனர். இதனிடையே யுத்த வெற்றியின் கௌரவத்தை ஜனாதிபதிக்கு வழங்கமுடியுமெனினும் யுத்தம் என்ற ஆட்டத்தின் நாயகன் சரத் பொன்சேகாவே என்று எதிரணியினர் கூற அரச அணியினரோ ஆட்டநாயகன் சரத் பொன்சேகா தான் என்றாலும் ஆட்டத்தை வழிநடத்திய தலைவன் மகிந்த ராஜபக்ஷவே என்று பதிலடி கொடுக்கின்றனர். அதற்கு எதிரணியினரின் மாற்றுப் பதிலடியில் அணியின் தலைவர் பலவீனமானவராக இருந்தால் தெரிவாளர்கள் குறித்த தலைவனை மாற்றுவதைப் பற்றியும் சிந்திப்பர் தானே என்று கூறுகின்றனர்.

ஆக மொத்தம் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக்களம் மக்கள் அறிந்திராத யுத்த தந்திரோபாயங்கள், இரகசியங்கள், இராஜாங்கத்தவர்களின் குறைபாடுகள், பலவீனங்கள் போன்ற தெரியாத விடயங்களை தெரியப்படுத்துகின்ற பாணியிலேயே அமையப்போகின்றது.

அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலுக்காக 200 கோடி ரூபாவை செலவிடப் போவதாகவும் பொதுவேட்பாளர் 100 கோடி ரூபாவை செலவிட உத்தேசித்துள்ளதாகவும் ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்ற அதேவேளை, தேர்தல் திணைக்களமும் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிடத் தயாராகிக் கொண்டிருக்கின்றது.பணபலம்,அதிகாரபலம், ஆட்பலம் என முப்பரிமாணத்தைக் கொண்டுள்ள ஜனாதிபதியுடன் பேச்சாற்றலில்லாத முன்னர் அரசியல் அதிகாரத்தில் இருந்திராத உத்தியோகபூர்வ ஆடை களைந்த பின்பு குன்றிப்போன ஆளுமை கொண்ட சரத்பொன்சேகா போட்டியிடுவது சவால் நிறைந்ததே.

– தினக்குரல்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.