அமெரிக்காவின் கூற்றில் அர்த்தமிருப்பதாக தெரியவில்லை – அரசாங்கம் கருத்து

விடுதலைப் புலிகளிடம் சிக்கியுள்ள மக்களை மீட்க அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம்உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். அதனை விடுத்து இலங்கையின் நிலைமை கவலையளிக்கிறது என அமெரிக்கா கூறுவதில் அர்த்தமிருப்பதாகத் தெரியவில்லை என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

மீட்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு அரசாங்கம் அனைத்து உதவிகளையும் செய்கின்றது. கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருந்து வரும் மக்களுக்கு தேவையான வசதிகளை அரசாங்கம் வழங்கி வருகிறது எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

இலங்கையின் தற்போதைய நிலைமை கவலையளிக்கின்றது என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ரொபட் வூட் தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

தற்போதைய நிலைமையில் அரசாங்கம் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டுக் கொண்டிருக்கின்றது. இதன்போது பொது மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்திற்காகவே அரசாங்கம் பாதுகாப்பு வலயங்களை உருவாக்கியுள்ளது. இந் நிலையில் விடுதலைப் புலிகளிடமிருந்து மக்களை மீட்பதற்கு அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இலங்கையின் தற்போதைய நிலைமை கவலையளிக்கின்றது என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ரொபட் வூட் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது. தற்போதைய நிலைமையில் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. மாறாக அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதனை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

இதேவேளை இதுவரை மீட்கப்படாத பிரதேசங்களிலிருந்து வருகின்றமக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.