தேசத்தின் குரலே வணங்குகின்றேன்

தமிழுக்கு உய்ய வழி தேடி வையத்துள் வாழ்ந்தாருள்.. ஈழத் திரு நாட்டின் பரந்துயார்ந்த தத்துவனே
தம்பியின் தலைமையை ஏற்ற தனையனே.. வெந்துயர் கொண்டோம் எங்கள் அண்ணன் பாலாவே..
செந்தணல் பூத்துக் கிடக்குது எங்கள் திருநாடு.. அங்கெல்லாம் புதைந்து போயினர் எங்கள் மாவீரர்..
வந்தெங்கள் வாசல் வரை நீங்கள் பொங்குங்கள் என்று கூறியதை புறம் தள்ளிவிட்டு புலம்புகின்றோம் அண்ணா…

balaannai03

தமிழ்த் தாய் வருந்த பிள்ளை நான் வெகு தூரம் வாழ்தல் நல்லதன்று.. நீங்கள்
தமிழ்த் தேசத்தின் மேல் கொண்ட நேசத்தின் மிகுதியால்
தங்கள்; வாழ்வின் பாசத்தின் பெருந் துணை ஏற்ற சிங்கார பெண்ணையும்
வந்தாடு களம் என்று கையுடன் அழைத்துச் சென்று
கானகத்துள் வெந்தாடும் வேங்கை மறத் தலைவனுக்கு நல்ல தமயனாக நின்றீரே..
தன்னலமற்ற தத்துவத்தின் மேதையே.. இதைவிட ஏதும் தேவையில்லை உங்கள் தியாகத்தைச் சொல்லஃ தேசத்தின் குரலே உங்களை வணங்குகின்றேன்

மிக்க  துன்பம் கொண்டு கொடுநோய் உடல் வதைக்க..திக்கு அனைத்தும் சென்று தெளிவாக
குறுக்கில் முளைத்திட்ட சிங்களவன் குடிவரவில் செருப்பின்றி நாம் நடந்த புண்ணிய பூமி தமிழ் மக்கள் குருதிச் சேற்றில் அழுந்தியிருக்கும் நிலை காட்டி தமிழர் நீதியின் அறம் உலகார் செவியேற வைத்த மறவனே
கொல்லா நோன்பு கொண்ட புத்தனின் சீடரும் கொலை மலிந்த நாட்டின் அரசியல் பீடம் நின்று புத்த நெறியை வீழ்த்தி
கொல்லடா தமிழனை என்று அரசியல் முழங்க நீதி நிலை பெற வேண்டி நீண்ட பயணமாய் புத்தனிடம் சென்றீரோ
 
நாம் பிறந்து வளர்ந்த நல்ல வள ஈழநாடு.. ஆங்கிலேயன் ஆட்சியில் சீரழிந்து.. சிங்களவன் சிறுநரித் தந்திரத்தில் அடிமையாக கிடக்குதிங்கே..
நாமொன்றாகி நாடுகாண வேண்டுமென்று அயராது தமிழ் நாடெங்கும் திரிந்து நல்லிணக்கம் கண்டு
குமிழ் போல் வாழ்வு முடியும் முன்னே விரைந்து உலகெல்லாம் ஓடி வாழ்வை தமிழர் நெஞ்சத்தில் முடித்தவரே 
 
தட்டிக் கொடுத்து தன் பேச்சு நடையில் தத்துவத்தை விளக்கி சுட்டிப் பயலாக திரிந்த தமிழ் செல்வங்களை அரசியல் வித்தகராக்கி
உலக வட்ட மேசைகளுக்கு அழைத்து வந்து செப்பனிட்டு புத்தறிவு கொடுத்த பெருமகனே
விடுதலைத் தேனை உயிர் விலை கொடுத்து வாங்கும் விடுதலைப் புலிப் பாசறையின் அரசியல் வித்தகரே
உங்கள் புகழுடம்பை தமிழர் நாம் இதயத்துள் புதைத்தோம் எத்தனை யுகங்கள் ஆனாலும் தமிழ் வாழும்.. அத்தனை காலமும் உங்கள் புகழும் வாழும்
 
தேசத்தின் குரலே  வையத்து தலைவர் யாரும் உங்கள் நினைவை மறக்கிலார்..
அக் கையெல்லாம் எமைக்காக்க குவிந்திடும் ஓர் நாள் பொய்யெல்லாம் உருக் கொண்டுள்ள பகைவர்  எம்தேசத்தை விட்டு ஓடியே ஒழிவார்
நலம் தேடுவோம.;. உடலோம்புவோம.;. தேசத்தின் குரலாய் நாமோங்குவோம்
நரம்போடும் தமிழ் மானம் காத்து தமிழீழம் கண்டு மறவர் கனவை நனவாக்குவோம்..
 
- நெருடலுக்காக மணிவண்ணன்

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.