இலங்கை அரசினை யுத்த மீறல்கள் தொடர்பாக விசாரிக்கவேண்டும்

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதியே யுத்தக் குற்றங்கள்  இடம் பெற்றமையை ஏற்றுக்கொண்டுள்ளதால் அதனை அடிப்படையாக வைத்து,  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும்,  அவரது அதிகாரிகளையும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சர்வதேச சமூகம் விசாரிக்கவேண்டும் என்று கனடா வின் தமிழ்க் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

CTCஇது குறித்து அந்த அமைப்பின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை இந்தோ ஆசிய செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளவை வருமாறு:

ஆரம்பத்திலிருந்தே இலங்கை இராணுவம் யுத்தக் குற்றங்களை இழைக்கின்றது என்பது எமக்குத் தெரியும். எனினும், சர்வதேச சமூகம் இதற்கான சாட்சியங்கள் உள்ளனவா என எம்மைக் கேட்டது. தற்போது இராணுவத்தின் தலைமையதிகாரியிடமிருந்தே இதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை ஜனாதிபதியையும் சகாக்களையும் நபர்களையும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்களுக்காக விசாரணை செய்வதற்கு வேறு என்ன ஆதாரங்கள் உலகத் தலைவர்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தேவை?

மஹிந்த ராஜபக்ஷ யுத்தக் குற்றவாளி. அவரை அது குறித்த விசாரணைகளுக்காக ஹேக் நீதிமன்றிற்குக் கொண்டு செல்லவேண்டும். இலங்கையைப்  போன்று எந்த நாடும் ஜெனிவா பிரகடனத்தினை அப்பட்டமாக மீறியதில்லை. சரணடைந்த எதிரியை எந்த நாடும் கொலை செய்ததில்லை.

சேர்பியாவின் மிலோசிவிக், சதாம் ஹுசைன் போன்றவர்களைப் போல மஹிந்த ராஜபக்ஷவையும் சர்வதேச சமூகம் கையாளவேண்டும். இலங்கை ஜனாதிபதியை விசாரணை செய்யுமாறு கோரி புலம்பெயர்ந்த தமிழர்கள் சர்வதேச நீதிமன்றிற்கும் ஐ.நாவிற்கும் உலகத் தலைவர்களுக்கும் மனு சமர்ப்பிக்கவுள்ளனர்.  எனத் தெரிவித்தார் அவர்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.