இந்தியா சம்பந்தப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் சூசகமாக தெரிவிப்பு

pak-flashஇலங்கை கிரிக்கெட் அணியினர் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியாவின் சம்பந்தத்தையும் நிராகரிக்க முடியாது என்று லாகூர் ஆணையாளர் குஷ்ரோ பேர்வைஸ் தெரிவித்திருப்பதாக வியோ தொலைக்காட்சியை மேற்கோள் காட்டி “ரைம்ஸ் ஒவ் இந்தியா’ பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது.

இலங்கை அணியினரை வெற்றிகரமான முறையில் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாத்துள்ளதாக பேர்வைஸ் கூறியதாகவும் ஜியோ தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாகிஸ்தானின் உளவுப் பிரிவான இன்ரர் சேவிஸ் இன்ரலிஜன்ஸின் (ஐ.எஸ்.ஐ) முன்னாள் தலைவர் ஜெனரல் ஹமீட் குல் கருத்துத் தெரிவிக்கையில்;

பாகிஸ்தானை பலவீனப்படுத்த இந்தியா முயற்சிப்பதாகக் கூறியுள்ளார்.

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக பிரகடனப்படுத்தவேண்டுமென இந்தியா விரும்புவதாகவும் இலங்கை அணி மீதான தாக்குதல் அந்தச் சதியுடன் தொடர்புபட்டதொன்று என்றும் குல், ஜியோ தொலைக்காட்சிக்கு தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத உள்சார் கட்டமைப்புகள் இல்லாமல் செய்யப்பட வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இல்லாவிடில் இத்தகைய குற்றச்செயல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார்.

சர்வதேசத்தின் கவனத்தைத் திசைதிரும்பும் முயற்சிகளில் பாகிஸ்தான் அதிகாரிகள் ஈடுபடக் கூடாதென நான் கோருகிறேன்.

இருகரத்தாலும் துணிவான நடவடிக்கை மேற்கொண்டு பயங்கரவாத கட்டமைப்புகளை அழித்துவிட வேண்டும் . குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதே இந்த மாதிரியான விடயங்களுக்கு உரிய முறையில் தீர்வு காணமுடியும் என்று முகர்ஜி கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.