உலகப் பொருளாதார மந்தம் வறிய நாடுகளின் வயிற்றில் அடிக்கப்போகிறது ஐ.எம்.எப் கவலை !

imf-flash-2வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்ப இயலாத நிலை வருகிறது…
சிங்கள அரசை போருக்குள் இறக்கிவிட்ட புத்திசாலிகளுக்கு பெரு வெற்றி…
மீள முடியாத வறுமைக்குள் சிக்குப்படப் போகும் நாடுகளின் பட்டியல் வெளியானது..போரை நீடிக்கும் ஒவ்வொரு நாளும் ஒட்டு மொத்த இலங்கைக்கும் அபாயம்…
ஒபாமா ரஸ்யாவுக்கு அனுப்பிய கடிதம்…

தற்போது உலகளாவியரீதியில் இடம் பெறும் பொருளாதார மந்தம் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை தாக்கியது போல வறிய நாடுகளையும் ஓங்கியடிக்கும் பருவம் வந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம் அங்கு பணியாற்றும் வறிய நாடுகளின் மக்களின் வயிற்றிலும் அடித்துள்ளது. இதன் காரணமாக இவர்களை நம்பி வாழும் ஆசிய, ஆபிரிக்க நாட்டு மக்களுக்கு முன்னரைப் போல உதவ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வறிய நாட்டு பிரஜைகள் பெரும் நெருக்கடியை சந்திப்பார்கள் என்றும் அது கூறியுள்ளது.

 சர்வதேச நாணய நிதியம் ஆபிரிக்க வட்டகையில் 26 நாடுகளின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இந்த நாடுகள் பலத்த தாக்கத்தை சந்திக்க நேரும் என்றும் கூறுகிறது. வறிய நாடுகளில் பல இப்பொழுதே மேலை நாடுகளின் உதவி வழங்கும் பொருளாதாரத்தில்தான் காலம் ஓட்டி வருகின்றன. மேலை நாடுகள் வங்குரோத்தடைவதால் இவர்களுக்கு உதவி வழங்குவது சிரமமாக மாற்றமடையும். தற்போதைக்கு ஏழை நாடுகளை காப்பாற்ற 140 மில்லியாட் குறோணர்களை ஒதுக்க ஐ.எம்.எப் முன் வந்தாலும் கூட அது போதிய உதவியாக அமையாது. மொத்தம் 840 மில்லியாட் தொகை ஏழை நாடுகளை காக்க உடனடியாகத் தேவைப்படும் என்றும் அது கூறுகிறது.

 இந்த அவலமான நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இங்கிலாந்து பிரதமர் கோர்டன் பிரவுணும் இன்று சந்தித்துப் பேசுகிறார்கள். இந்த பொருளாதார சரிவில் இருந்து தமது நாடுகளையும், மற்றய நாடுகளையும் எப்படிக் காப்பதென உரையாடுகிறார்கள். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தம்மிடம் சரியான திட்டம் இருப்பதாக ஒபாமா தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதய நிலையில் மோசமான பங்குச்சந்தை வீழ்ச்சிகளை உலகம் சந்திக்கும் என்று பொருளியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

 அதேவேளை அமெரிக்க அதிபர் ரஸ்ய அதிபருக்கு சென்ற மாதம் நடுப்பகுதியில் அனுப்பிய கடிதமும் முக்கியம் பெறுகிறது. ஈரான் அணு குண்டு தயாரிப்பதை ரஸ்யா தடுத்தால் தாம் போலந்து, துருக்கி போன்ற நாடுகளில் ஏவுகணைகளை நிறுவும் திட்டத்தை கைவிடத் தயார் என்றும் கூறியுள்ளார். ரஸ்யா இதற்கான பதிலை இதுவரை வழங்கவில்லை. அமெரிக்கா ஏவுகணைகளுக்கு ஒதுக்கும் பணத்தையும் மீதம் பிடிக்க முயல்வதையே இந்தக் கடிதம் காட்டுகிறது.

 முன்னைய பொருளாதார நெருக்கடி ஈராக்கை சூறையாடியது போல இனி வேறு பல நாடுகளையும் சூறையாட இடமிருக்கிறது. இந்தவகையில் பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகள் மிக அவதானமாக இருக்க வேண்டிய பருவம் இதுவாகும். அதுபோல சிறீலங்கா அரசும் அவதானமாக இருக்க வேண்டிய புறச் சூழல் நிலவுவதை மறுக்க முடியாது. சிறீலங்காவில் நடைபெறும் போர் நிறுத்தப்படாமல் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் ஒட்டு மொத்த இலங்கைக்கும் ஆபத்தான நாட்களாகவே இருக்கும். வன்னியில் வந்த பட்டினியைவிட பெரிய பட்டினிக்குள் சிங்கள தேசம் சிக்குப்படும் அபாயத்தையும் நிராகரிக்க முடியாது. சிங்கள அரசை உசுப்பிவிட்டு போர்ச் சகதிக்குள் இறக்கியவர்கள் புத்திசாலிகளே.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.