இலங்கை அரசு போர்நிறுத்தத்தை நிராகரித்துள்ளதால் எதுவுமே செய்ய முடியாது :நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு

mp-200நெதர்லாந்து அரசு ஐரோப்பிய ஒன்றியத்தினூடாக உடனடிப் போர்நிறுத்தத்தை இலங்கை அரசிடம் சிலநாட்களுக்கு முன் வலியுறுத்தியிருந்தது. ஆனால் அதை மகிந்த அரசு நிராகரித்து விட்டது. இதனால், நெதர்லாந்து அரசு இது விடயத்தில் எதுவுமே செய்யமுடியாத நிலையில் இருக்கின்றது.”


இவ்வாறு தம்மைச் சந்தித்த தமிழ் மாணவர்களிடம் தமது கவலையைத் தெரிவித்தார் நெதர்லாந்து வெளிநாட்டமைச்சின் உறுப்பினரும் ஆளும் கூட்டணி அரசின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான மார்த்தன் காபர் காம்ப் .

மார்த்தன் காபர் காம்பை நெதர்லாந்துப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் சிலர் சந்தித்து கலந்துரையாடினர். நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியிலிருந்து 3.00 மணிவரை நாடாளுமன்ற வளாகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது தமிழ் மாணவர்கள் வன்னி மக்களின் இன்றைய அவல நிலைபற்றி கூறிய விடயங்கள் பலவற்றையும் அவதானமாகக் கேட்டறிந்துகொண்ட மார்த்தன் காபர் காம்ப்,

“நெதர்லாந்து அரசு ஐரோப்பிய ஒன்றியத்தினூடாக உடனடிப் போர்நிறுத்தத்தை இலங்கைஅரசிடம் சிலநாட்களுக்கு முன் வலியுறுத்தியது. ஆனால் அதை மகிந்த அரசு நிராகரித்துவிட்டது. இதனால், நெதர்லாந்து அரசு எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருக்கின்றது” என்றார்.

வன்னியிலுள்ள மக்களில் பலர் பட்டினியால் இறந்துள்ளதாகவும் மேலும் பலர் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ளதால், அவசர மனிதாபிமான உதவிகளான உணவு, மருந்து வகைகளை இம்மக்களுக்கு உடனும் அனுப்பி உதவுமாறும் மேற்படி மாணவர்கள் கோரினர்.இதற்குப் பதிலளித்த காபர் காம்ப்,

“இலங்கை அரசாங்கம் இதற்கு ஒத்துழைக்க மறுக்கின்றது. உணவு வகைகளைக் கொண்டு செல்லும் எமது உறுப்பினர்களின் உயிருக்குப் பாதுகாப்பில்லை. எனவே தற்போதைய நிலையில் நாம் எதுவும் செய்ய முடியாது”எனத் தெரிவித்தார்.
இலங்கையை 138 வருடங்களாக ஆட்சிபுரிந்த நெதர்லாந்து அரசுக்கு (டச்சுக்காரர்), தற்போதைய போரை நிறுத்தி தமிழின அழிப்பைத் தடுக்கும் தார்மீகப் பொறுப்பு உண்டென இச்சந்திப்பின் போது தமிழ் மாணவர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.