எங்கள் மடியில் அமர்ந்து எங்கள் அன்னைக்கே துரோகம் செய்யும் உங்களை நாங்கள் மன்னிப்போமா!!

தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தில் வெற்றிடமாக இருந்த அரசியல் தலைமையினை ஈடுசெய்யும் வண்ணம், தமிழீழ தேசியத் தலைமையினையும் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப்புலிகளே என்ற கருத்தொற்றுமையின் அடிப்படையில் ஒன்றிணைந்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம்பெற்றமையும், அது மக்களால் சனநாயக முறைப்படி தேர்தல் மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 22 பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

முள்ளிவாய்கால் துயரத்திற்கு பின்னர், அரசியல் அனாதைகளாக்கப்பட்டுள்ள தமிழர்களுக்க தலைமை ஏற்று வழிநடாத்த வேண்டிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினது செயற்பாடுகள் தடுமாற்றம் நிறைந்ததாக காணப்படுகின்றது. சிறிலங்காவின் சனாதிபதி தேர்தலில் தமிழர்களை கரம் பிடித்து சரியான பாதையில் அழைத்துச் செல்லவேண்டிய நிலையில் அவர்களுக்குள்ளேயே கழுத்தறுப்புக்களும் காட்டிக் கொடுப்புக்களும் இடம் பெற்றுவருவது ஆரோக்கியமானதல்ல என்பதை இவர்கள் உணர வேண்டும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினது தலைமைப்பொறுப்பில் இருந்து முடிவெடுப்பவர்கள் தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்களின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது. தமிழீழ தேசியத் தலைமையினை ஏற்றுக்கொண்டு ஒரே குடையின்கீழ் ஒன்றிணைவதற்கு முன்னர் வேண்டுமானால் நீங்கள் உங்கள் எண்ணப்படி செயற்பட முடியும். ஆனால் தற்போது தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் தலைமைப் பொறுப்பில் உள்ளீர்கள் என்பதனை மறந்துவிடாதீர்கள்.

இந் நிலையில், கடந்த 2006ம் ஆண்டு தமிழக வார ஏடான ஆனந்த விகடனிற்கு செவ்வி வழங்கிய மாவை.சேனாதிராசா அவர்கள் தெரிவித்த கருத்தானது இதன் முற்றிலும் உணர்தி நிற்கின்றது.

“எங்களுக்குத் தேவை விடுதலை. அதை தனித்தனியாக நின்று பெற முடியாது. 2002 மக்களவைத் தேர்தலில், ‘விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து, விடுதலைக்கான முயற்சியில் ஈடபடுவோம். வாக்களியுங்கள்’ என்று கேட்ட எங்கள் கட்சிக்குப் பெரும் வெற்றியைத் தந்து, இணைந்து போராடும்படி ஆணை பிறப்பித்திருக்கார்கள் மக்கள்!”.

“போர் தேவை என்று எந்த நாகரிகச் சமூகமம் சொல்லாது. அதிலும், இரண்டு தலைமுறைகளை யுத்தத்தால் தொலைத்த ஈழம் போரை எப்படி விரும்பும்? ஆனால், போர் எங்கள் மீது திணிக்கப்படுகின்றது. தமிழர்கள் ஆயுதம் தரிப்பது யாரையும் தாக்குவதற்காக அல்ல, தற்காத்துக் கொள்ளவே! உலக நாடுகள் கருணையோடு உதவ முன்வந்த போதும், அதைப் பெற்றுத் தர இலங்கை அரசுக்குச் சம்மதம் இல்லை. புலிகள், மக்களுக்காக இறங்கிவந்து அரசுடன் இணைந்து மீட்டுபு நடவடிக்கையில் ஈடுபட உடன்பட்டபோதும், இலங்கை அரசு தமிழர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. போரில்லாமல் தீர்வு கிடைத்தால், எங்களைவிட வேறு யாரும் அதிகம் மகிழ முடியாது!”
“உயிருக்கும் உடமைக்கும் எவ்வித உத்திரவாதமும் இன்றி, அகதியாக ஒரு நாளேனும் வாழ்ந்து பாருங்கள் எங்கள் வலி என்னவென்று உங்களுக்கப் புரியும்!”.

இவ்வாறு தமிழர்களது உரிமைப்போராட்டத்தினை பற்றியும் அதற்காண தோற்றுவாய் பற்றியும் தெள்ளத் தெளிவாக கருத்துக் கூறிய மாவை.சேனாதிராசா கூட இன்றும் முக்கிய நிலையிலையே தமிழத் தேசியக் கூட்டமைப்பில் நீடித்திருக்கின்றார். இவர்களைப் போன்றவர்கள் தெளிந்த பார்வையுடன் வழிநடாத்துவதற்கு இருக்கும் போது ஏன் இவ்வாறு தடுமாறுகின்றனரோ தெரியவில்லை!

எது எவ்வாறாயினும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், தமிழீழ தேசியத்தலைமயுடன் இணைந்து பயணிப்பதற்கு தமிழீழ மக்கள் தெளிவான ஆணையினை வழங்கியிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  தமிழர்களுக்கு விரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவது துரோகமாகவே அமையும்.
‘சுதந்திர தமிழீழ தனியரசு’ அமைவதே எமது மக்களிற்கான நிரந்தர தீர்வாக அமையும். அதனை வலுப்புடுத்தும் வண்ணம் நீங்கள் செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதுவே தாயக மண் மீட்புச் சமரில் வித்தாகிய மாவீரர்களுக்கும் துணைநின்று சாவடைந்த மக்களுக்கம் நீங்கள் செய்யும் மரியாதையாகும்.

- இரா.மயூதரன்

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.