நடேசன், புலித்தேவன் கொலை: விளக்கம் கோரிய ஐ.நா.வின் கடிதத்துக்குப் பதிலளிக்க அவகாசம் தேவை – றோகித போகொல்லாகம

ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரன் அனுப்பியிருந்த கடிதத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் பதில் அனுப்பியிருப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகா கூறியிருந்த கருத்துகளுக்கு விளக்கம் அளிக்குமாறு, நீதிக்குப் புறம்பானதும், தன்னிச்சையானதுமான மரண தண்டனை விவகாரத்தைக் கையாளும் ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரன் [Philip Alston, UN Special Rapporteur on Extrajudicial, Summary or Arbitrary Executions] சிறிலங்கா அரசிடம் விளக்கம் கோரியிருந்தார்.

இது தொடர்பாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருப்பதாவது:

“பிலிப் அல்ஸ்ரனின் கடிதத்துக்குப் பதில் அளிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் சிறப்புக் குழுவொன்றை நியமித்திருப்பதாகவும், கடிதத்தின் உள்ளடக்கத்தை நாம் ஆராய்ந்து வருவதாகவும் இந்தக் கடிதத்தில் அவருக்கு விளக்கியுள்ளோம்.
 
அந்தக் கடிதத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை விசாரிப்பதற்குச் சிறப்புக் குழுவொன்றை சிறிலங்கா அரசாங்கம் நியமித்துள்ளது என்பதையும் அவருக்குத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

பொன்சேகாவின் அறிக்கை சிறிலங்கா அரசுக்குத் தொடர்ச்சியான சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது.
 
எனவே சிறப்பு அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரனின் கடிதத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களுக்குப் பதிலளிக்க அதிகாரிகளுக்கு அதிக காலம் தேவைப்படுகிறது.

இந்தக் கடிதம் சிறிலங்கா அரசுக்கும், மக்களுக்கும், அடையாளம் வெளிப்படுத்தப்பட்ட சில படை அதிகாரிகளுக்கும் அதிகளவிலான மறைமுகத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இந்த விவகாரங்கள் சிலவற்றுக்கு உடனடியாக எம்மால் பதிலளிக்க முடியாது.
 
எமது நிலைப்பாட்டை நாம் தெளிவாக முன்வைத்துள்ளோம்.
 
ஆவணத்தை எமது குழு ஆய்வு செய்த பின்னர் வெளிவிவகார அமைச்சு தகுந்த பதிலை அனுப்பி வைக்கும்” என்றும் அமைச்சர் றோகித போகொல்லாகம மேலும் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.