சிறிலங்கா சிறையில் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாநிலைப் போராட்டம்: ஒருவர் மருத்துவமனையில்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலுள்ள மகஸின் சிறைச்சாலையில் கடந்த மூன்று நாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒன்பது பேரின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கின்றது.

இவர்களில் ஒருவரது உடல்நிலை மோசமடைந்தமையால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்திருக்கின்றது.

விசாரணைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள 98 தமிழ் அரசியல் கைதிகளே இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை கடந்த சில நாட்களாக நடத்திவருகின்றார்கள்.

தம்மை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், அல்லது விடுதலை செய்ய வேண்டும் என நீண்டகாலமாக இவர்கள் விடுத்துவந்த கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காததையடுத்தே இந்த உண்ணாநிலைப் போராட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

உண்ணாநிலையில் இருப்பவர்களில் ஒன்பது பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக இன்று வியாழக்கிழமை காலை கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் தேவதாசன் என்பவர் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டார்.

உண்ணாநிலையைத் தொடரும் தமிழ்க் கைதிகள் நீதியமைச்சர் மிலிந்த மொற கொட தங்களை நேரில் வந்து சந்தித்து, தமது கோரிக்கைகள் தொடர்பாக உறுதி வழங்கினால் மட்டுமே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் எனவும் இல்லையேல் சாகும்வரையான தமது போராட்டம் கைவிடப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை, தங்களை விடுவிக்கக் கோரி இலங்கை முழுவதிலுமுள்ள அரசியல் கைதிகள் நேற்றைய தினம் போராட்டத்தில் குதித்துள்ளனர் என்றும் அறிய முடிகின்றது.

நேற்றையதினம் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜயலத் ஜயவர்த்தனா, மேல்மாகாண சபை உறுப்பினர் பிரபா கணேசன் ஆகியோர் மகஸின் சிறைச்சாலையில் உண்ணாநிலையை மேற்கொண்டுவரும் 98 தமிழ் அரசியல்கைதிகளையும் சென்று சந்தித்துப் பேசினார்கள்.

சிறைச்சாலைக்குள் இருந்துகொண்டே மருத்துவர் ஜயலத் ஜயவர்த்தன தொலைபேசி மூலமாக அமைச்சர் மிலிந்த மொரகொடையுடன் இது தொடர்பாகப் பேசியுள்ளார்.

அத்துடன் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள கைதிகளின் நிலைமையையும் கோரிக்கையையும் சிறிலங்கா நீதியமைச்சரிடமும், சட்டமா அதிபரிடமும் முன்வைத்துள்ளனர்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.