யேர்மன் வாழ் தமிழீழ மக்களே! தைமாதம் 24ம் திகதி வீறுகொண்டெழுவோம் வென்றுகாட்டுவோம்
-
இவ் விடயம் 08. 01. 2010, (திங்கள்),
தமிழீழ நேரம் 5:05க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர் செய்திகள்
யேர்மன் வாழ் தமிழீழ மக்களே!
நாங்கள் என்ன ஆயுதம் எடுக்கவேண்டுமென்பதை எதிரிதான் தீர்மானிக்கின்றான். தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் கட்டியெழுப்பப்பட்ட இன உணர்வுடன்கூடிய ஒற்றுமை உணர்வுடன் ஒன்றுபட்டு, ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தாகத்தை இந்த உலகத்தின் முற்றத்தில் முரசறைந்து சொல்வோம்.
காலம் காலமாக சிங்கள அரச ஒடுக்குமுறைக்கு ஆளாகிய நாம், ஓர் சமுதாயம் என்ற ரீதியில் எமது அரசியல் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்வோம். ஈழத்தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் அடங்கியுள்ள தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழீழத் தனியரசைப் பெற்றிடுவதற்கு புதிய எழுச்சியுடனும், புதிய உத்வேகத்துடனும், திட சங்கற்பத்துடனும், யேர்மன்வாழ் தமிழீழ மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிப்போம்.
நாங்கள் அடங்கிப்போகும் ஆட்டு மந்தைகள் அல்ல, ஆண்ட பரம்பரையின் அக்கினிக்குஞ்சுகள். யேர்மன் மண்ணில் தைமாதம் 24ம் திகதி நடை பெறவுள்ள தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள அனைத்துத் தமிழீழ மக்களும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரித்து, ஒற்றுமையுடன் வாக்களித்து எங்கள் தமிழீழத் தனியரசு எனும் வேள்வித் தீயினை இன்னும் கொழுந்துவிட்டு எரியச் செய்வோம்.
தமிழீழக் கனவோடு சாவினைத் தழுவிய மாவீரர்கள் புதைகுழிகளிலும், கடல் அலைகளிலும் துயில் கலைந்து விம்மி அழுகின்றனர். இறுதிவரை மக்களுக்காகப் போராடிக் களப்பலியான தளபதிகள் கலங்கிநிற்கின்றனர். அவர்களின் கனவுகள் நிறைவேற வீறுகொண்டெழுவோம் வென்று காட்டுவோம்.
யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்.
யேர்மனி.
மின்னஞ்சல்: german-tamil-eluththaalar-sangkam@hotmail.com