சிறிலங்காவின் போர்க் குற்றங்கள்: 11 நீதிபதிகள் கொண்ட சிறப்பு மக்கள் நீதிமன்றம் ஐயர்லாந்தி்ல் விசாரிக்கின்றது
-
இவ் விடயம் 08. 01. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 18:30க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்
மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அதன் ஆயுதப் படைகள் மீது பல போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ன.
அவை தொடர்பாக – அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளினில் 11 நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு நீதிமன்றம் ஒன்று விசாரணை செய்யவுள்ளது.
விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக நடத்தப்பட்ட வன்னிப் போரின் போது அப்பாவிப் பொது மக்கள் மீது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை இழைத்ததாக சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அதன் ஆயுதப்படைகள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.
மனிதாபிமானத்துக்கு எதிரான இந்தக் குற்றங்கள் தொடர்பாக – மிகவும் மதிப்பு மிக்கதும், மிலன் நகரினைத் தளமாக் கொண்டதுமான ‘மக்களின் நிலையான நீதிமன்றம்’ [Milan based Permanent Peoples’ Tribunal - PPT] விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 14 ஆம்,15 ஆம் திகதிகளில் அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரில் உள்ள ட்றினிற்றி கல்லூரியில் [Trinity College, Dublin, Ireland] இந்த நீதிமன்றம், குறி்ப்பிட்ட இந்த வழக்குத் தொடர்பாகக் கேட்டறியும்.
இதன் பின்னர் – மறுநாள் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் தாம் கேட்டறிந்த விடயங்கள் தொடர்பாகத் தற்காலிகமான கருத்தை நீதிமன்றம் வெளியிடும்.
இந்த நீதிமன்றத்தை – அயர்லாந்திலுள்ள டப்ளின் ரினிற்றி கல்லூரியின் ஐரிஸ் பொருளாதாரப் பாடசாலை மற்றும் டப்ளின் சிற்றி பல்கலைக்கழகத்தின் சட்ட மற்றும் அரசுத்துறைப் பாடசாலை [Irish School of Ecumenics, Trinity College Dublin and the School of Law and Government, Dublin City University, Dublin, Ireland] ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.
சிறிலங்காவில் அமைதிக்கான ஐரிஸ் அமைப்பு [Irish Forum for Peace in Sri Lanka - IFPSL].
இந்த நிகழ்வுக்கான ஒழுங்குகளைச் செய்துள்ளது.
இந்த நீதிமன்றத்தில் -
- சகிப்புத்தன்மை மற்றும் வன்முறைகளுக்கு எதிரான யுனெஸ்கோ விருது பெற்றவரும், பொருளாதார வீழ்ச்சி தொடர்பான ஐ.நா. ஆணைக் குழுவின் உறுப்பினரும், பெல்ஜியம் லுவெய்ன் பல்கலைக்கழகத்தின் [University of Louvain, Belgium] பேராசிரியருமான பிரான்சுவா ஹுராட் [Francois Houtart],
- புதுடெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரும், இந்தியாவில் முஸ்லிம்களின் சமூகப் பொருளாதாரக் கல்வி நிலை தொடர்பாக ஆராய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்-கினால் நியமிக்கப்பட்ட சச்சார் ஆணைக்குழுவின் தலைவருமான ராஜிந்தர் சச்சார் [Rajinder Sachar],
- எகிப்திய எழுத்தாளரும், பயிற்சி பெற்ற மருத்துவரும், எகிப்தில் பெண்கள் உரிமைகள் தொடர்பாக குரல் கொடுப்பவரும், ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் பெண்களுக்கான திட்டங்கள் தொடர்பான ஐ.நா.வின் ஆலோசகராக இருந்தவருமான நவல் அல் சடாவி [Nawal al Saadawi],
- பௌத்த அமைதிப் பிரசாரங்களை மேற்கொள்பவரும், எழுத்தாளரும், தாய்லாந்தில் சமூக மனிதாபிமான அமைப்புகளின் செயற்பாட்டாளரும், மாற்று-நொபேல் பரிசு பெற்றவருமான [Alternative Nobel Prize - Right Livelihood Award] ளருமான சுலக் சிவரக்ஸா [Sulak Sivaraksa],
- ஐ.நாவின் முன்னாள் உதவிச் செயலாளரும், ஈராக்கிற்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புச் சபை பொருளாதாரத் தடைகளை விதித்த போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தனது 34 ஆண்டு கால பணியில் இருந்து விலகியவரும், காந்தி சர்வதேச அமைதி விருதை [Laureate of the Gandhi International Peace Award] பெற்றவருமான டெனிஸ் ஹலிடே [Denis Halliday],
- மிலன் நிலையான மக்கள் நீதிமன்றத்தின் செயலாளர் நாயகம் கியானி ரொக்னோனி [Gianni Tognoni],
- இனப் படுகொலைகள் பற்றிய கல்வி நிலையத்தின் [Centre for Genocide Studies at the Universidad Nacional de Tres de Febrero] பணிப்பாளரும், ஆர்ஜென்ரீனாவின் புவனஸ்அயர்ஸ் பல்கலைக்கழகத்தின் இனப்படுகொலைகள் பீடத்தின் [Faculty of Genocide at the University of Buenos Aires] விரிவுரையாளருமான டானியல் பியேஸ்ரன் [Daniel Feierstein],
- டப்ளினில் உள்ள மனித உரிமைகளைக் காப்போரின் பாதுகாப்புக்கான அமைப்பின் [Director, Front Line – The International Foundation for the Protection of Human Rights Defenders] முன்னிலைப் பணிப்பாளரான மேரி லோலர் [Mary Lawlor],
- அனைத்துலகச் சட்டங்கள் தொடர்பான நிபுணரும், பிலிப்பைன்சில் மேற்கொள்ப்பட்ட சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய மக்கள் நீதிமன்றத்தின் [People’s Tribunal on extra-judicial killings and violations of human rights in the Philippines] உறுப்பினருமான ஒய்ஸ்ரென் ரிவெற்றர் [Oystein Tveter],
- குர்திஸ் சட்டத்தரணியும், துருக்கியின் மனித உரிமைச் செயற்பாட்டாளரும், இஸ்தான்புல் மனித உரிமைகள் அமைப்பின் [Human Rights Association, Istanbul.] உதவித் தலைவருமான எரென் கெஸ்கின் [Eren Keskin],
- இத்தாலியின் முன்னாள் செனெட் உறுப்பினரும் அரசு சார்பற்ற அமைப்புகளின் முன்னணிச் செயற்பாட்டாளருமான பிரான்சிஸ்கோ மார்ரோன் [Francesco Martone]
ஆகியோர் இந்த நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பொறுப்பு வகிக்கின்றனர்.
இந்த மக்கள் நீதிமன்றம் சிறிலங்கா அரசு மற்றும் அதன் படைகளுக்கு எதிரான அனைத்துப் போர்க் குற்ற மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணைகள் நடத்தும்.
2002 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த போர் நிறுத்த உடன்பாடு முறிவடைந்த பின்னர் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தக் குழு பரிசீலனை செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவைச் சேர்ந்த பல மனித உரிமை அமைப்புகள், ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. சபை ஆகியனவும் – மனித நேயத்துக்கு எதிரான போர்க் குற்ற மற்றும் அமைதிக்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலான அறிக்கைளைச் சமர்பிக்கத் திட்டமிட்டுள்ளன.
அதே வேளை, லண்டனில் உள்ள சிறிலங்காவின் தூதுவர் நிகால் ஜெயசிங்கவுக்கும் இந்த நீதிமன்றத்தின் அமைப்பாளர்களால் அழைப்பு அனுப்பட்டுள்ளது.
ஆனால் – அவரிடம் இருந்து எந்தப் பதிலும் இன்னும் வரவில்லை.
எனினும் – சிறிலங்கா அரசின் சார்பில் சட்டவாளர் ஒருவர் நேரடியாகச் சமூகமளித்து இந்த விசாரணையை அவதானிக்கவுள்ளார்.
போர்க் குற்றங்கள் தொடர்பான தனிப்பட்ட மற்றும் குழுச் சாட்சியங்கள் முதலில் கவனத்தில் எடுக்கப்படும்.
ஐ.நா.வின் உட்சுற்று ஆவணங்களின் படி – 2009 ஏப்ரலில், வான் மற்றும் தரை வழி கனரக ஆயுதத் தாக்குதல்களின் போது அண்ணளவாக 116 பொது மக்கள் பலியானதாகக் கூறப்பட்டுள்ளது.
போரின் கடைசி வாரங்களில் சிறியதொரு பகுதிக்குள் முடங்கிப் போயிருந்த நூறாயிரக்கணக்கான பொது மக்கள் மீது சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட பீரங்கித் தாக்குதல்களின் போது 20 ஆயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டதாக பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய ஊடகங்கள் கூறியிருந்தன.
2008 டிசம்பர் 8ஆம் நாளுக்கும் – 2009 மே 2 ஆம் நாளுக்கும் இடையில் 30 தடவைகள் மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக மனித உரிமைகள் காப்பகம் [Human Rights Watch] அறிக்கையிட்டிருந்தது.
அதே வேளை – பிரெஞ்சு மருத்துவக் குழுவின் தகவல்களின் படி – ‘வெள்ளை பொஸ்பரஸ்’ இரசாயணங்கள் மற்றும் கொத்துக் குண்டுகள் [cluster munitions and white phosphorous] என்பன பொது மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
சித்திரவதை, படுகொலைகள், பாலியல் வன்முறை, மற்றும் உணவு மற்றும் குடிநீர் போன்றவற்றை ஆயுதமாகப் போரில் பயன்படுத்தியது போன்ற ஊடக ஆதாரங்கள் கூட இருப்பதாகவும் சிறிலங்காவில் அமைதிக்கான ஐரிஸ் அமைப்பு கூறியுள்ளது.
இது இவ்வாறு இருக்க – அனைத்துலக சமுதாயத்தின் இந்த விசாரணை நடவடிக்கைகள், தமது நாட்டின் இறையாண்மைக்கு விரோதமான செயல் என்று சிறிலங்காவின் அமைச்சரான கெஹலிய ரம்புக்கெவல விசனம் வெளியிட்டுள்ளார்.