வன்னியிலிருந்து வெளியேறும் மக்கள் வடிகட்டும் புலனாய்வுத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

2009-02-24t001135z_01_nir35_rtridsp_2_sri-lanka-war-frontline_articleimageவன்னிப் பகுதியில் தொடரும் மோதல்கள் காரணமாக அங்கிருந்து வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் பிரவேசிக்கும் பெருமளவிலானோரை வடிகட்டும் நடவடிக்கைகளை இலங்கைப் புலனாய்வுத் துறை முடக்கி விட்டிருப்பதாக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாப்பிரதேசங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக யாழ்க் குடாநாட்டில் கடமையாற்றிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் குழுவொன்று தென்மராட்சிப் பகுதிக்கும் வவுனியாவிற்கும் நகர்த்தப்பட்டிருப்பதாக புலனாய்வு மட்டங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும் இடர்களுக்கு மத்தியில் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசிக்கும் மக்கள் முதலில் விசேட விசாரணை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு 3 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்பே தற்காலிக தடுப்பு முகாம்களிற்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசேட புலனாய்வு விசாரணை முகாம்களில் மேற்கொள்ளப்பட்ட வடிகட்டல்களின் பின் தம்முடன் சென்ற பலர் காணாமல் போயிருப்பதாக அந்த மக்கள் தெரிவித்திருப்பதனை பெயர் குறிப்பிட விரும்பாத உள்ளுர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே வன்டனியில் இருந்து குடாநாட்டிற்குள் பிரவேசித்தவர்களில் மிருசுவில் ரோமன் கத்ததோலிக்க பாடசாலையில் 1130 பொதுமக்களும் கொடிகாமம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் 570 பொதுமக்களுமாக 1700 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஜிரிஎன்னிற்கு தகவல் கிடைத்துள்ளது. இவர்களுடன் வந்த பலர் காணாமல் போன நிலையில் தற்பொழுதும் இவர்களுக்குள் வடிகட்டல் தொடர்வதாக அங்கு சென்று திரும்பிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக நேற்றைய தினம் யாழ் குடாநாட்டினுள் வடமராட்சியூடாக பிரவேசித்த 92 பேரை பாதுகாப்புத்தரப்பினர் கைது செய்துள்ளதாக ஊடக தகவல்மையம் தெரிவித்திருந்தது. எனினும் இந்தச் செய்தி எழுதப்படும் ஐரோப்பிய நேரம் மாலை 4 மணிவரை இவர்களில் 5 பேர் மட்டுமே குடாநாட்டு முகாம்களுக்குள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக ஜிரிஎன்னிற்கு தகவல் கிடைத்துள்ளது.

எஞ்சியோர் இதுவரை குடாநாட்டிலுள்ள நீதிமன்றங்களிலோ அல்லது காவற்துறை மையங்களிலோ ஆஜர்ப்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் வெளியாகவில்லை. இது குறித்து நீதிமன்றத் தரப்புக்களிடம் வினவிய போது அவ்வாறு எவரும் அஜர்ப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் நாளாந்தம் 5 முதல் 10 வரையிலானவர்கள் சிறுசிறு பிரிவினராக குடாநாட்டிற்குள் பிரவேசித்து வரும் நிலையில் இவர்களில் பலர் எவருக்கும் தெரியாத நிலையில் காணாமல் போவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதே போன்றே வவுனியாவிற்குள் பிரவேசிக்கும் சிறுசிறு தொகையினரில் இருந்து பலர் வடித்தெடுக்கப்பட்டு கொண்டு செல்லப்படுவதாகவும் அவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பது குறித்து சுயாதீனத் தகவல்களைப் பெற முடியவில்லை எனவும் தொண்டு நிறுவன முக்கியஸ்தர்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தொடருகின்ற இந்த ஆபத்துக் குறித்து உள்நாட்டு மற்றும் சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கள் தொண்டு நிறுவனங்கள் சர்வதேச சமூகத்தினர் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்காவிடின் வன்னியிலிருந்து வெளியேறும் மக்களில் பெருந்தொகையானோர் இலங்கைப் படையினராலும் புலனாய்வுத் துறையினராலும் காவு கொள்ளப்படுவது தவிர்க்க முடியாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.