மகிந்த விடுத்த அழைப்பை யாழ் வேலையற்ற பட்டதாரி மாணவர்கள் புறக்கணிப்பு
-
இவ் விடயம் 10. 01. 2010, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 17:57க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
தமக்காக தேர்தல்ப் பரப்புரையில் ஈடுபடுமாறு சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளினை யாழ்.மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேரடியாக நிராகரித்துள்ளனர்.
யாழ்.குடாநாட்டிற்கான பயணத்தினை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச ஈபிடிபியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் யாழ். ஆரியகுளம் பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் வேலையற்ற பட்டதாரிகளைச் சந்தித்தார்.
இதன் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கான தேர்தல்ப் பரப்புரையில் ஈடுபடுமாறும் அவ்வாறு ஈடுபட்டால் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் மகிந்த ராஜபக்ச பட்டதாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த பட்டதாரிகள் ஏற்கனவே தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கருத்தில்க்கொண்டு தங்களுக்கு வாக்களிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ள நாங்கள் எவ்வாறு தேர்த்தல் பரப்புரைகளில் உங்களுக்குச் சார்பாகச் செயற்படமுடியும் என்று நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் மகிந்த ராஜபக்சவும், டக்ளஸ்தேவானந்தாவும் கடும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இன்று யாழ்.குடாநாட்டிற்கான பரப்புரை நோக்கில் அமைந்த பயணத்தினை மகிந்த ராஜபக்ச மேற்கொண்டிருந்தார். இதனால் இன்று சில மணி நேரம் பிரதான வீதிகளின் போக்குவரத்துக்கள் முற்றாக இடைநிறுத்தப்பட்ட அதேவேளை, நல்லூர் முருகன் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக இன்று காலை முதல் சென்ற பக்தர்கள் அனைவரும் கடும் சோதனைக் கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.