இன்னொரு ஈழப்போருக்கு தயாராகும் சக்திகள் ராஜபக்சே சொல்கிறார்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ளது. ஆளும் ஜனாதிபதி மகிந்த ராஜக்சேக்கும், முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகாவுக்கும் தேர்தலில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று மகிந்த ராஜபக்சே தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் இலங்கையை வலிமையான நாடாக்கப் போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

சிங்களர்களை கவரும் வகையில் பல வாக்குறுதிகளை அதில் ராஜபக்சே வெளியிட்டுள்ளார். தமிழர்களிடம் செல்வாக்கு கிடைக்காத காரணத்தால் சற்று பயந்து போய் இருக்கும் ராஜபக்சே, மீண்டும் ஈழப்போருக்கு சிலர் தயாராகி வருவதாக ஒரு தகவலை வெளியிட்டார். அவர் மேலும் கூறியதாவது:- 2005-ல் நான் ஆட்சிக்கு வந்த இந்த நாட்டில் பொருளாதார பிரச்சினை கடுமையாக இருந்தது. அதை மீட்டு எடுத்துள்ளேன்.

விடுதலைப்புலிகளை ஒடுக்க நான் எடுத்த முயற்சிகளுக்கு சில நாடுகள் முட்டுக்கட்டை போட்டன. அந்த நாடுகளுக்கு நான் அடிபணியவில்லை. அவை அனைத்தையும் தூக்கி வீசி விட்டேன். விடுதலைப்புலிகளுக்கு எதிராக போரை நிறுத்த முயன்று தோற்றுப் போனவர்கள் இப்போது ஒருங்கிணைந்து எனக்கு எதிராக செயல்படுகின்றனர். அவர்கள் மூலம் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றன. இன்னொரு ஈழப்போராட்டத்துக்கு வழி அமைக்க அந்த சக்திகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.

இவ்வாறு மகிந்த ராஜபக்சே கூறினார். தோல்வி பயம் காரணமாக ராஜபக்சே இப்படி புலம்பி உள்ளதாக எதிர்க் கட்சியினர் கிண்டலடித்துள்ளனர். இதற்கிடையே தோல்வி பயம் காரணமாக கோதபய ராஜபக்சேயின் மனைவி கோடிக்கணக்கான பணம், தங்க நகைகளுடன் வெளி நாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.