தேர்தல் விதிகளை அரசியல் கட்சிகள் மதிக்காது விட்டால் நான் பணியை விட்டு விலகிவிடுவேன்: தேர்தல் ஆணையாளர் மிரட்டல்
-
இவ் விடயம் 13. 01. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 5:49க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
எதிர்வரும் அரச தலைவர் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குவிதிகளை அரசியல் கட்சிகள் மதிக்காது விட்டால் தான் பதவியில் இருந்து ஒதுங்கப்போவதாக சிறீலங்காவின் தேர்தல் ஆணையாளர் தயானந்தா திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
எதிர்வரும் 26 ஆம் நாள் நடைபெறவுள்ள அரச தலைவர் தேர்தலை தொடர்ந்து தென்னிலங்கையில் அதிக வன்முறைகள் உருவாகி உள்ளன. இதுவரை 400 இற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று அரசியல் கட்சிகளை சந்தித்த தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சிகள் தனது பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தவறினால் தான் பதவியை விட்டு விலகத்தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டவிதிகளை அரசு உதாசீனம் செய்வது குறித்து தான் அதிக வேதனையும், கவலையும் அடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் தேர்தல் ஆணையாளரின் நிபந்தனைகளை தாம் மதித்து நடப்பதாக அரசியல் கட்சிகள் உறுதிமொழிகளை வழங்கியதை தொடர்ந்து திஸாநாயக்கா தனது பணிகளை தொடர விருப்பம் தெரிவித்துள்ளார்.
அரச தரப்பு உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக தேர்தல் ஆணையாளர் மிகவும் அழுத்தங்களுக்கு உள்ளாகி இருப்பதாக ஐ.தே.க பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்துள்ளார்.
எல்லா கட்சிகளையும் அழைத்த ஆணையாளர் ஆதரவற்ற தனது நிலையை விளக்கியதுடன், அரச சொத்துக்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரசு பயன்படுத்துவது குறித்து குற்றம் சுமத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.