ரகசிய வாக்கெடுப்பு
-
இவ் விடயம் 18. 01. 2010, (சனி),
தமிழீழ நேரம் 19:10க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், விசேட செய்தி
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் குறித்த ரகசிய வாக்கெடுப்பு ஒன்றை இந்த மாத ஆரம்பத்தில் பாராளுமன்ற ஆய்வாளர்கள் நடத்தியுள்ளனர். அதன்பிரகாரம் சிறிய வித்தியாசத்தில் சரத் பொன்சேகாவுக்கே வெற்றிக்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
சண்டே டெலிகிராஃப் வெளியிட்டுள்ள இந்த வாக்குகளின் எண்ணிக்கைப்படி 5,373,751 வாக்குகள் தற்போதைய ஜனாதிபதி மஹிந்தவுக்கு கிடைத்துள்ளது. இது மொத்த வாக்குகளில் 48.3 வீதமாகும். சரத் பொன்சேகாவுக்கு 5.493,809 வாக்குகள் அதாவது 49.4 வீதம் கிடைத்துள்ளது. தமக்கே கிராமப்புற மக்களில் வாக்குகள் அனைத்தும் கிடைக்கும் என மஹிந்த தரப்பு கூறி வந்தாலும் அம்மக்களும் சரத் பக்கம் ஆதரவு தெரிவித்திருப்பதாக இந்த வாக்கெடுப்பு காட்டியுள்ளது.
இதில் கிட்டத்தட்ட 12.5 வீதமாகவுள்ள தமிழர்களின் வாக்குகளே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப் போகின்றது எனக் கூறியுள்ளது சண்டே டெலிகிராஃப். எனினும் தமிழ் மக்களைக் கொன்று குவித்தவருக்கா அல்லது கொல்லும்படி உத்தரவு கொடுத்தவருக்கா தமது வாக்குகளை அளிப்பது என்ற இரு தேர்வுகளே தமிழ் மக்களுக்கு உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பீட்டளவில் குறைந்த பாதிப்புடைய சரத் பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் அநேகரின் வாக்குகள் கிடைக்கும் எனவும் எதிர்பார்ப்பதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.