இலங்கையில் விவகாரத்தில் ஐ.நா தலையீடு செய்ய வேண்டும் ‐ டெஸ்மன் டுட்டு

desmond_tutuஇலங்கையில் இடம்பெற்று வரும் சிவிலியன் பேரவலத்தை தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகள் அமைப்பை பிரித்தானிய அரசு வலியுறுத்த வேண்டுமென நோபள் சமாதான விருதாளரும், பேராயருமான டெஸ்மன் டுட்டு உள்ளிட்ட புத்தஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையில் பிரித்தானியா வலியுறுத்த வேண்டுமென குறித்த புத்திஜீவிகள் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் நிரந்தர உறுப்பு நாடு என்ற வகையில் பிரித்தானியாவினால், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆயுத போராட்டங்களின் போது சிவிலியன் பாதுகாப்பு என்ற ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின் அடிப்படையில் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்ய முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பாரியளவு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சுயாதீன ஊடகவியலாளர்கள் யுத்த களத்திற்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக சரியான தகவல்களை அறிந்து கொள்வதில் சிக்கல்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் மனித உரிமை விழுமியங்களுக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும் எனவும், அதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு நெறிப்படுத்த வேண்டும் எனவும் குறித்த புத்தஜீவிகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.