மட்டையில் ஊறிய குட்டைகள் போடும் நாடகங்கள் அறிக்கைகள் தாங்க முடியவில்லை!பணம் பதவி

jeya-karunanithiதமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை, போர் என்று வந்தால் மக்கள் கொல்லப்படுவது சகஜம் தானே என்று இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாகப் பேசிய ஜெயலலிதா இப்போது அந்த ராணுவத்தை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது தேர்தலையொட்டி நடத்தும் நாடகம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுகவினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,இலங்கையில் போர் நிறுத்தம் கோரி அதிமுக மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும், அந்தக் கட்சியின் தலைவி சென்னையிலே அவரே தலைமை வகிக்கப் போவதாகவும் ஓர் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது அனை வரும் வரவேற்கக் கூடிய செய்தியாகும்.

 

எதற்காக வரவேற்க வேண்டுமென்றால்- இலங்கைத் தமிழர் பிரச்சினையில் திமுக ஆட்சியிலே என்ன நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டது என்பதை தெரிந்து கொள்வது தேவையான ஒன்று தானே!.

ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்திலே கடந்த 3.11.1995 அன்று பேரவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்.

பேரவைத் தலைவர்: பரிதி இளம்வழுதி (திமுக உறுப்பினர்) இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்டு வருகின்ற போர் காரணமாக தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள��
� என்கிற அந்தப் பிரச்சினையை இந்தப் பேரவையில் எழுப்புவதற்காக பேரவையின் இதர அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும்” என்று ஓர் அறிவிப்பைக் கொடுத்திருக்கிறார்.

இந்தப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் இந்த அரசோ, இந்த அவையோ நேரடியாக விவாதித்து ஒரு முடிவுக்கு வரக் கூடிய சூழ்நிலை இல்லை என்பதை அனைத்து உறுப்பினர்களும் அறிவீர்கள். இதில் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றாலும், இந்திய அரசு தான் இலங்கை அரசோடு பேசி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

எனவே இதை விவாதப்பொருளாக இங்கே விவாதிக்க பேரவையின் இதர அலுவல்களை ஒத்தி வைக்க வேண்டுமென்று கொடுத்த அந்த அறிவிப்பு என்னால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் அவர்களுடைய உணர்வை இந்தப் பேரவைக்குத் தெரிவிக்கின்ற வகையில் அவர் கொடுத்துள்ள அந்த அறிவிப்பை மட்டும் இங்கே வாசிக்கலாம்.

பரிதி இளம்வழுதி: இந்தப் பேரவைக்கு இறுதி நடவடிக்கை எடுக்கக் கூடிய அதிகாரம் இல்லை என்றாலும் கூட, இந்திய அரசாங்கத்தை கேட்டுக் கொள்ள இந்தப் பேரவைக்கு உரிமை இருக்கிறது.

பேரவைத் தலைவர்: இந்திய அரசாங்கத்தின் கையில் இல்லாத பிரச்சினையில் போய் தலையிட முடியாது. இந்திய அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பிரச்சினை என்றால் நாம் இந்திய அரசாங்கத்தை கேட்கலாம். இது அவர்களுடைய ஆளுகைக்கு உட்பட்ட பிரச்சினை கூட அல்ல. இன்னொரு நாட்டினுடைய பிரச்சினை.

ஆகவே இதை பேரவை விதி 56ன் கீழ் ஒத்தி வைத்து விவாதப்பொருள் ஆக்கக் கூடாது. நீங்கள் கொடுத்த அறிக்கையை நானே படித்து விடுகிறேன்.

இந்தப் பிரச்சினையிலே விவாதிப்பதற்கு ஏதுமில்லை. அரசின் நிலையை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது குறித்து இலங்கை வாழ் தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்புக் கொடுப்பது பற்றி இந்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இது குறித்து தமிழக அரசும் இந்திய அரசுடன் தொடர்பு கொள்ளும்.

பரிதி இளம்வழுதி: இந்தப் பேரவையின் மூலம் இந்திய அரசை நிர்ப்பந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரவைத் தலைவர்: அரசாங்கம் கேட்டுக் கொள்ளும் என்று முதல்வர் தெரிவித்து விட்டார். இதற்கு மேல் வேண்டாம்.

உடன்பிறப்பே, இலங்கையில் உள்ள அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்று வதற்காக அதிமுக ஆட்சியிலே எடுக்கப்பட்ட நிலை இதுவாகத்தான் இருந்தது. ஆனால் 2006ம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு இந்த மூன்றாண்டு காலத்தில் மட்டும் 7.12.2006 அன்றும், 23.4.2008 அன்றும், 12.11.2008 அன்றும், 23.01.2009 அன்றும் நான்கு முறை சட்டப்பேரவையிலே இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

உடன்பிறப்பே, இவ்வாறு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி தம்பி பரிதி இளம்வழுதி ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு சென்றபோது, அவரை அங்கே விரிவாகப் பேசுவதற்குக் கூட அனுமதிக்காமல், அவருடைய தீர்மானத்தைப் பேரவைத் தலைவரே படித்து, முதல்வர் இரண்டே வரிகளில் “இந்திய அரசு தான் ஏற்பாடு செய்யும், அதை மாநில அரசு வலியுறுத்தும்” என்பதோடு முடித்து விட்டார்.

ஆனால் தற்போது 23.1.2009 அன்று இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என்ற தலைப்பில் தமிழக அரசின் சார்பாகவே நான் தீர்மானம் கொண்டு வந்து, அதற்கு அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டபோது- ஜெயலலிதா கட்சியின் சார்பில் பேசிய பன்னீர்செல்வம் என்ன பேசினார்?

உண்ணா நோன்பு உள்பட பல போராட்டங்கள் நடத்தினீர்கள், மனித சங்கிலி நடத்தினீர்கள், பிரதமரைச் சென்று சந்தித்தீர்கள், இவ்வளவு நடத்தியதற்குப் பின்னாலும், என்ன நடந்தது?. மத்திய அரசில் யார், யாரெல்லாம் பொறுப்பில் இருக்கிறீர்கள்?. அந்தப் பொறுப்பை தட்டிக்கழித்து விட்டு மத்திய அரசு பார்த்துக் கொள்ளும், இந்தியப் பேரரசு பார்த்துக் கொள்ளும் என்று சொன்னால் அந்த மத்திய அரசில் அங்கமாக நீங்கள் ஏன் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றார் பன்னீர்செல்வம்

அவர்களின் ஆட்சிக் காலத்திலே ஒரு ஒத்தி வைப்புத் தீர்மானத்தைக் கூட அவையிலே எழுப்பி பேசுவதற்கு அனுமதி கொடுக்க மறுத்து, பேரவைத் தலைவரே அதைப் படித்து, முதல்வராக இருந்த ஜெயலலிதா “அது இந்திய அரசின் பொறுப்பு, அவர்களை வலியுறுத்துவோம்” என்று மட்டுமே கூறி பிரச்சினையை முடித்து விட்டவர்கள்; தற்போது “நீங்கள் எப்படி மத்திய அரசைக் காட்டி பிரச்சினையைத் தட்டிக் கழிக்கலாம், ஏன் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று நம்மைப் பார்த்து கேட்கிறார்கள்.

கேட்பதோடு மட்டுமல்ல, அந்தத் தீர்மானத்தையே நாங்கள் நடத்தும் நாடகம் என்று கூறிவிட்டு அவையிலிருந்து வெளிநடப்பே செய்தார்கள்.

அவர்கள் தான் இப்போது இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போகிறார்கள் என்றால் அதனை வரவேற்கத் தானே வேண்டும்!.

பத்திரிகையாளர்களுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டியில், “இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை, எந்தப் போரின் போதும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது போலத்தான் இலங்கையில் தற்போது நடக்கிறது.” என்று இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாக கூறியவர்- தற்போது அந்த இலங்கை ராணுவத்தை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போகிறார் என்றால் அது வரவேற்கத்தக்கது தானே?

“தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பை எதிர்க்கின்ற ஒரே தலைவர் நான் தான்” என்று ஜெயலலிதா அறிக்கையிலே கூறிக் கொண்டார். பிரபாகரனின் தலைமையில் விடுதலைப் புலிகள் சிங்கள ராணுவத்துடன் நடத்தும் போருக்கு இலங்கைத் தமிழர்களை கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

அந்தப் பிரபாகரனோடு தானும் அமர்ந்துள்ள புகைப்படத்தை ஜெயலலிதாவின் தோழமைக் கட்சியிலே உள்ள வைகோ வெளியிட்டு அதிலேயே பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

அந்த வைகோவையும் பக்கத்திலேயே வைத்துக் கொண்டு, ஜெயலலிதா உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது தானே?

இலங்கைப் பிரச்சினை மீண்டும் உருவெடுத்த 6 மாதங்களுக்குப் பிறகு “நாங்கள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம், ஜெயலலிதாவே இருக்கப் போகிறார்” என்றெல்லாம் அறிவித்திருப்பது உண்மையில் வரவேற்கத்தக்கது தானே?

ஜெயலலிதா 15.10.2008 அன்று விடுத்த அறிக்கையில் “இலங்கையில் தற்போது நடக்கும் உள் நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம், இந்திய அரசிடம் இல்லை என்பதை, ஐந்து முறை முதல்வரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது என்று குறிப்பிட்டவர்,

தற்போது உண்ணாவிரதம் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அறிக்கையில் “தமிழினத் தலைவர் என்று தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதியும், அவர் தாங்கி நிற்கும் மத்திய அரசும் இந்த இனப்படு கொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன” என்று கூறியுள்ளார்.

இவ்வாறு தனது கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.