வன்னியிலிருந்து படகில் சென்ற மக்கள் மீது பருத்தித்துறை கடலில் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி; மூவர் படுகாயம்

jaffna3முல்லைத்தீவு புதமாத்தளன் பகுதியிலிருந்து வடமராட்சிப்பகுதியை நோக்கி படகில் இடம்பெயர்ந்து சென்ற பொதுமக்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை பருத்தித்துறைப் பகுதி கடலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும், ஒரு ஆண் குழந்தையும் ஆடங்கியுள்ளதாகவும் அவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், மூவரின் சடலங்களும் பருத்தித்துறை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சடலங்கள் சிறிலங்கா கடற்படையினரால் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் பருத்தித்துறை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை மாலை பரு. வைத்தியசாலையில் கையளித்துள்ளனர்.

படுகாயமடைந்த மூவரும் எஸ்.ஜெனிஸ்ரன் வயது 20, மேரி வயது 37, ஜே. நியூட்டன் வயது 01 ஆகியோராவார். இவர்கள் மூவரும் பருத்தித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த, காயமடைந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.