கவிதை: மாறாப்பில்லா மானஸ்தர்

மானம் உண்டேல் அது எதற்கு
வீறாப்பை விட்டு விட்டு
மாறாப்பை விலக்கி விட்டோம்
தேசியம் தேய்ந்தாலும் தேசியக்
கூட்டமைப்பை தேயாது காத்திடவே

சிங்களமும் கிந்தியும் சேர்ந்து சித்தரிக்கும்
அடிமை தமிழன் மெகா தொடருக்கு
தமிழருக்கான
சங்கீத கதிரை போட்டி நடக்கிறது
தாயகத்தில்

இறந்தவர் போக இருப்பவர் வாருங்கள்
கற்பிளந்தோர் போக கற்புடையோர் வாருங்கள்
பொறுப்புடைய மாந்தரென
பொறுமை காப்போம் எருமை என
சிங்கள பாலியல் வல்லூறுகள்
பற்றாலியன் படையாய்
இருக்கட்டும் எம் மண்ணில்

பசி எடுக்கும் வேளையில்தான்
கொத்தித் தின்பார்கள் உங்கள் உடலை
ஆறில் போனாலென்ன அறுபதில் போனாலென்ன
போகும் உடல்தானே போகட்டும் மறந்திடுங்கள்

விடுதலைக்காக உயிரை விடோம்
கதிரைக்காக கால் பிடிப்போம்
பொன்னான வாக்குகளை
மண்ணாக்காது வாக்களியுங்கள்
ஆறுதல் பரிசுகளாக – எமக்கு
அமைச்சர் பதவி தருகின்றார்கள்

தேசியம் தேய்ந்தாலும் தேயவிடோம்
தமிழ் தேசிய கூட்டமைப்பை.

கவியாக்கம் – வல்வை சுஜேன்

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.