கனடாவில் தமிழ் பற்றாளர் நா. சிவலிங்கம் காலமானார்
-
இவ் விடயம் 04. 03. 2010, (சனி),
தமிழீழ நேரம் 5:06க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர் செய்திகள்
கனடியத் தமிழர் தலைவர் என்று போற்றப்படும் தலைவர் நா.சிவலிங்கம் கடந்த முதலாம் திகதி திங்கட்கிழமை 01-03-2010 அன்று ரொறன்ரோவில் அமரரானார். கனடாவின் தமிழீழ சங்கத்தை ஆரம்பித்து வைத்த முன்னோடியான இவரின் இழப்பு கனடா தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பு என கனடா தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடா மண்ணில் தமிழ் சமூகத்தின் பிரதிநிதியாக பல்வேறு பணிகளை ஆற்றிய நா. சிவலிங்கம் அவர்கள் பற்றிய சில தகவல்கள் வருமாறு:
கட்டடக் கலையைப் பயில வேண்டும் என்று கனடா வந்து தமிழர் நலன்கருதி தனது செயல்பாடுகளை ஆரம்பித்தார். அய்ம்பதுகளில் தமிழர்கள் கனடாவிற்கு வருகைதர ஆரம்பித்தார்கள். அனைவரும் கல்விக்காகவே வந்தார்கள். பொதுநலவாய புலமைப் பரிசில் பெற்று படிக்க வந்தவர்களே அவர்கள்.
ஆயினும் பின்னால் இலங்கைப் பிரச்சினைகளில் அகப்பட்டோர் பலராக கனடாவில் பிரவேசித்தபொழுது , 1977ஆம் ஆண்டு இவரும் சில இளைஞர்களும் ஆரம்பித்த தமிழீழச் சங்கம், பின்னர் பெருமளவில் தமிழர்கள் இங்கு, கனடாவில் நுழைந்தபோது அவர்களுக்கான வதிவிடத் தகவல்களை வழங்குவதில் பெரும் பங்காற்றியது.
தமிழீழச் சங்கத்தின் முன்னோடி இவரே ஆவர். ஆண்டு தோறும் தமிழர் தகவல் ஆண்டு விழாவில் சிறப்புரை, ஆங்கில உரைகள் என ஏதோ ஒருவிதத்தில் பங்காற்றுவார். பெரிய பிள்ளையார் கோவில் எனப்படும் வேவியூ பிள்ளையார் கோவிலின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர்.
இன்னும் சமூக சமய நிகழ்வுகளின் வளர்ச்சியில் பங்காற்றிய பெருந்தகை அவர். அவரின் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு மாபெரும் இழப்பாகும் என்பதில் ஐயமில்லை.