தமிழ் மக்களின் அபிலாசைகளை சிதைத்து அதன் மூலம் சிங்கள மக்களின் ஆதரவுகளை பெறுவதற்கு இந்தியாவும், சீனாவும் போட்டியிடுகின்றன
-
இவ் விடயம் 04. 03. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 22:31க்கு பதிவு செய்யப்பட்டது
- கட்டுரைகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முற்றாக சிதைப்பதற்கு சிறீலங்கா அரசுக்கு உதவி செய்வதன் மூலம் சிங்கள மக்களின் ஆதரவுகளை பெறுவதற்கு இந்தியாவும், சீனாவும் போட்டியிட்டு வருவதாக தமிழ்நெற் இணையத்தளம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்தள்ளது.
அதன் தமிழ் வடிவம் வருமாறு:
மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் நிலங்களை சிறிலங்கா அரசு ஒய்வுபெற்ற படையினருக்கு வழங்கி வருகையில் சிறிலங்கா அரசின் இந்த முயற்சிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் சீனாவும், இந்தியாவும் போட்டி போட்டு உதவிகளை வழங்கி வருவதாக தமிழ் மக்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு சிறீலங்காவுக்கு அதிக உதவிகளை வழங்கிய நாடாக சீனா முன்னிலையில் உள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. வடபகுதிக்கான சீனாவின் உதவிகள் அங்கு சிறீலங்கா அரசு ஒரு இராணுவமயப்படுத்தலை உருவாக்க உதவியுள்ளது.
தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களின் தனித்துவத்தை சிதைக்கும் முயற்சிகளில் சிறீலங்கா அரசுக்கு இந்தியா உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. அதேசமயம் மேற்குலகத்தின் அழுத்தங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டு வருகின்றது.
சிறீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள வர்த்தக உடன்படிக்கைகளின் அடிப்படையில் சிறீலங்கா இந்தியாவுக்கு அதிகளவு புடவைப் பொருட்களை ஏற்றுமதி செய்யமுடியும் என சிறீலங்காவுக்கான இந்திய தூதுவர் தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் உதவித்திட்டத்துடன் வடக்கு – கிழக்கில் குடிசார் கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டால் அது தற்போது அந்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணக்கையை குறைக்கலாம் என தமிழர் தரப்பு தெரிவித்துள்ளது. அதனை மேற்கொள்ளுமாறு தென்னிலங்கையில் இருந்தும் குரல்கள் கொடுக்கப்படுகின்றன. 1981 ஆம் ஆண்டில் இருந்து தமிழர் தாயகப்பகுதிகளின் குடித்தொகை வீழ்ச்சி கண்டு வந்துள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.
ஈழத்தில் நடைபெறும் இனஅழிப்பு போரை விளங்கிக்கொள்ளாது மேற்குலகம் நடிப்பதுடன், அதனை இனஅழிப்பு போர் அல்ல என்பதையும் கூற முற்பட்டு வருகின்றது. ஒரு நாடு என்ற கோட்பாட்டின்கீழ் தீர்வு என அவர்கள் தம்மையும் குழப்பி ஏனையவர்களையும் குழப்பி வருகின்றனர்.
கண்துடைப்புக்காக மீள்குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதும், இராணுவத்தின் மேற்பார்வையில் அங்கு ஏழை மக்களை கொண்ட சமூதாயம் ஒன்று உருவாக்கப்படுகின்றது. படைகளில் இருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு காணிகளை ஒதுக்கீடு செய்வதை சிறீலங்கா அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. அதன் மூலம் தமிழ் மக்களை நிரந்தரமாக ஒரு மேற்பார்வையின் கீழ் கொண்டுவர அரசு முயல்வதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏறத்தாள இரு தசாப்தங்களாக யாழ்குடநாட்டில் தமிழ் மக்களின் வீடுகளில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா இராணுவம் அங்கு வாழும் மக்களை ஒரு திறந்த சிறைச்சாலையினுள் தள்ளியுள்ளது. அண்மையில் கைப்பற்றப்பட்ட வன்னிப் பகுதியில் எஞ்சிய நல்ல நிலையில் உள்ள கட்டிடங்களில் படையினர் நிலைகொண்டுள்ளனர். கொழும்பில் இருந்து சென்ற நிர்வாக அதிகாரிகள் கூட தமது விடுதிகளுக்கு செல்லமுடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.
இராணுவத்தினரல் கைப்பற்றப்பட்ட வடபகுதியில் உள்ள இராணுவ முகாம்களை சீனா நிர்மாணித்து வருவதாக சிறீலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜெயசூரியா கடந்த வருடம் கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார்.
2009 ஆம் ஆண்டு சீனா 1.2 பில்லியன் டொலர்களை உதவியாக சிறீலங்காவுக்கு வழங்கியுள்ளது. அது கடந்த வருடம் சிறீலங்கா அரசு பெற்றுக்கொண்ட வெளிநாட்டு உதவிகளில் அரை பங்கிற்கும் அதிகமாகும் என கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. சிறீலங்கா தற்போது சீனா, இந்தியா, ஈரான், யப்பான், மியான்மார் ஆகிய நாடுகளின் பின்னால் அணிதிரண்டுள்ளது.
கொழும்பு தொடர்பில் சீனா காண்பித்துவரும் ஈடுபாடுகளை இந்திய ஊடகங்கள் முதன்மைப்படுத்தி வருகின்றன, ஆனால் தமது இந்திய அரசு சிறீலங்காவில் என்ன செய்கின்றது என்பதை வெளிக்கொண்டுவருவதை அந்த ஊடகங்கள் தவிர்த்துவருகின்றன என தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்களின் சுதந்திர தாயகத்திற்கான கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை கூட ஏற்றுக்கொள்வதற்கு மேற்குலகமும் பின்னடித்து வருகின்றது. எனினும் சிறீலங்காவில் உள்ள தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டியது முதன்மையானது என்பதில் மேற்குலகம் அழுத்தமாக குரல் கொடுத்து வருகின்றது.
எனினும் கொழும்புடன் நெருக்கமான பிணைப்புக்களை ஏற்படுத்த இந்தியா முனைந்துவருவது சிங்கள மக்களின் அரசியல் பொருளாதார நலன்களை பெறுவதற்காக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிரந்தரமாக அழித்துவிடம் செயலாகும் என்தே தமிழ் மக்களின் மனங்களில் எழுந்துள்ள கேள்விகள். கடந்த ஆறு தசாப்தங்களாக இந்திய மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் இந்த சந்தேகத்தை வலுவடைய வைத்துள்ளது.
தமிழ் மக்களின் அபிலாசைகளை சிதைப்பதில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. சிங்கள மக்களின் ஆதரவுகளை பெறுவதற்காக அது அதனை மேலும் மேலும் மேற்கொண்டு வருகின்றது என தமிழ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தின் ஆளும் தரப்பும், அதன் ஊடகங்களும் தமது சொந்த நலன்களுக்காகவும், பணம் சேர்க்கும் நடவடிக்கைகளுக்காகவும் ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளை சிறுமைப்படுத்த முயன்று வருகின்றது என அவை மேலும் தெரிவித்துள்ளன.
சிறீலங்காவில் நடைபெற்ற இனஅழிப்பு போரை அனைத்துலக சமூகம் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த தவறியுள்ளதால் சிறீலங்காவில் பிரச்சனைகளும், அதிகார பேட்டிகளும், நீதி மறுக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து சென்றுள்ளதாக தமிழ் மக்கள் தரப்பு தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பு: ஈழவன்