பிரித்தானியாவிற்குள் புலிகள் ஊடுருவல்: சிறிலங்கா தூதுவர் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலர் பாதுகாப்புக் கருதி பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்து கோரும் அபாயம் காணப்படுவதாக பாகிஸ்தானுக்கான சிறிலங்காவின் உயர்ஸ்தானிகர் எயார் சீப் மார்சல் ஜெயலத் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாடு குறித்து ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் அரசியல் அந்தஸ்து கோரும் போர்வையில் பிரித்தானியாவுக்குள் ஊடுருவும் அபாயம் காணப்படுகிறது. விடுதலைப் புலிகள் இவ்வாறு ஊடுருவினால் அது பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பிரித்தானியா ஆதரவு வழங்கும் என நான் கருதவில்லை. ஆயினும் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் வேர்களாக பயங்கரவாத சக்திகள் பிரித்தானியாவில் அணிதிரள முயற்சித்தால் அது சிறிலங்காவுக்கு மட்டுமன்றி உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு அதன் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டும், கைது செய்யப்பட்டுமுள்ளனர். இந்நிலையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவது ஆபத்தானதாகும் எனவும் பாகிஸ்தானுக்கான சிறிலங்காவின் உயர்ஸ்தானிகர் எயார் சீப் மார்சல் ஜெயலத் வீரக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கலந்து கொண்டு உரையாற்றியமை மற்றும் பிரதமர் கோர்டன் பிரவுண் அவ்வமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்தமை குறித்து சிறிலங்கா கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

சிறிலங்காவுடன் நெருங்கிய உறவைப் பேணுகின்ற பிரித்தானியா உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் கலந்து கொண்டமை அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய இராச்சியத்துக்கான சிறிலங்காத் தூதுவர் நிஹால் ஜயசிங்க தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்களின் ஜனநாயகப் பாதைக்கு வலுச் சேர்க்கும் வகையிலேயே வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் கலந்து கொண்டதாக பிரித்தானியாவின் ஆசிய விவகார பிரதிப் பணிப்பாளர் Andrew Patrick சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.