தமிழ் இனத்தின் பிளவுகளும், அதனைச் சீர்செய்ய வேண்டிய அவசியமும்..

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாறு மற்றொரு பிளவைத் தற்பொழுது சந்தித்து நிற்கின்றது. இலங்கை என்ற மேடையில் நின்றபடி தமிழ் மக்களின் அரசியல் தேவைகளைச் சந்திக்கும்படியாக மிகுந்த பிரயத்தனங்களின் பின் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற தளம் கிட்டத்தட்ட நாலாக உடைந்துபோயுள்ளது.

சிவாஜிலிங்கம்-சிறிகாந்தா போன்றவர்கள் ஒருபக்கம் சென்று அரசியல் நடாத்த, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் கஜேந்திரன், பத்மினி போன்றவர்கள் மற்றொரு பக்கம் சென்று அரசியல் செய்ய, கிஷோர், தங்கேஸ்வரி, கனகரட்ணம் போன்றவர்கள் மகிந்தவின்  இலங்கை சுதந்திரக் கட்சியில் சேர்ந்து விட, மிகவும் பரிதாபமான நிலையில் த.தே.கூட்டமைப்பு இந்தத் தேர்தலைச் சந்திக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இலகுவானவர்கள் அல்ல. கஜேந்திரன், பத்மினி போன்றவர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழில் அதிக விருப்பு வாக்குகளை எடுத்து முதல் இரண்டு இடங்களைப் பெற்றவர்கள்.

அதேபோன்று கனகசபை, தங்கேஸ்வரி போன்றவர்கள் மட்டக்களப்பில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று முதலிரண்டு இடங்களைப் பெற்றவர்கள். கனகரட்ணம் வன்னியில் இரண்டாவது அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவர். இவர்களது வெளியேற்றம் கூட்டமைப்புக்குப் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்றே நோக்கர்கள் கருதுகின்றார்கள்.

இந்த வெளியேற்றங்கள், பிரிவுகள், பிளவுகள் போன்றனவற்றிற்கு பல காரணங்கள், நியாயப்படுத்தல்கள் கூறப்பட்டாலும், இந்த பிளவு என்பது ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழ் இனத்திற்கு ஏற்பட்ட மிகப் பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை.

அதிலும் குறிப்பாக இன்று ஈழத் தமிழினம் இருக்கின்ற சூழ்நிலையைப் பொறுத்தவரையில், அவர்கள் முன் இன்று இருக்கின்ற சவால்களைப் பொறுத்தவரையில், இந்தப் பிளவு என்பது ஒரு மிகப்பெரிய பின்னடைவை ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்படுத்தியிருக்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தப் பிளவானது, ஈழத் தமிழர்களின் அடிப்படை அபிலாசைகளான தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் போன்றனவற்றை மிக மோசமாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இன்னும் தெளிவாகக் கூறுவதானால், ஒரு பிளவை எதிர்கொள்ளும் நிலையில், ஈழத் தமிழினம் இன்று இல்லை.

ஒரு பிளவைத் தாங்கிக் கொள்ளும் சக்தியும் ஈழத் தமிழினத்திற்கு இன்று கிடையாது.

இந்தப் பிளவு என்பது வரலாற்றுத் தேவை என்று சிலர் கூறுகின்றார்கள். ஆனால் என்னதான் காரணம் கற்பித்தாலும் எம்மிடையே ஏற்பட்ட பிளவுகள் எங்களைப் பலவீனப்படுத்தியதுதான் வரலாறு.

ஈழவிடுதலைப் போராட்டம் ஆரம்பமானபோது அந்தப் போராட்டத்தில் தமிழ் பேசும் சமூகம் என்கின்ற பெயரில் வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களும் இணைந்திருந்தார்கள். 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்படும் பொழுது, அந்த தீர்மானத்தில் முஸ்லிம்களும் பங்கு பற்றியிருந்தார்கள். „தமிழீழத்தை அமிர்தலிங்கம் கைவிட்டாலும் நான் கைவிடமாட்டேன்“ என்று கல்முனைக் கூட்டமொன்றில் அஷ்ரப் பேசிய பேச்சு முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக இருந்தது. ஆனால் கால ஓட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் என்ற அடையாளத்தில் இருந்து முஸ்லிம்களை முற்றாக ஒதுக்கும் சதியை  இலங்கைத் தலைமை செய்தது. அந்தச் சதிக்கு தமிழ் சமூகமும் முஸ்லிம் சமூகமும் துணைபோய் தங்களைப் பலவீனப்படுத்திக் கொண்டன. தமிழ்-முஸ்லிம் சமூகங்கள் என்று பிளவுபட்ட காரணத்தால் ஈழ விடுதலைப் போராட்டம் பலத்த, ஈடுசெய்ய முடியாத இழப்புக்களைச் சந்தித்தது. ஈழம் கேட்ட அஷ்ரப் ஒரு கட்டத்தில் கிழக்கில் தனி முஸ்லீம் அலகு கேட்கும் அளவிற்கு, எம்மத்தியில் ஏற்பட்ட பிளவு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அன்று ஏற்பட்ட பிளவை சீர்படுத்த முடியாமல் இன்றுவரை இழப்புக்களுடன் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் சமூகங்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

இதேபோன்று, ஒரு சந்தர்ப்பத்தில் வடக்கு கிழக்கில் ஒரே குறிக்கோளுக்காக போராடிக் கொண்டிருந்த விடுதலைப் போராட்ட அமைப்புக்கள் மிகவும் ஒற்றுமையாக நின்று போராடிக்கொண்டு இருந்தன. யாழ் கோட்டையில் இருந்து புறப்படும்  இலங்கை இராணுவத்தை ஒருபக்கம் விடுதலைப் புலிகள், மறுபக்கம் புளொட், இன்னொரு முனையில் ஈ.பி.ஆர்.எல்.எப்., மற்றொரு பக்கம் என்று பொது எதிரிக்கு எதிராக தமிழ் இனம் மூர்க்கமாகப் போடிக்கொண்டிருந்த காலம் அது.

ஆனால், தமிழ் போராட்ட அமைப்புக்கள் மத்தியில் இந்தியாவினால் ஏற்படுத்தப்பட்ட பிளவுச் சதிக்கு நாங்கள் தெரிந்துகொண்டே பலியானதன் பலனை இன்றுவரை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

இதேபோன்று, கருணாவின் பிரதேசவாதத்தால் ஏற்பட்ட பிளவு என்பதும், சொல்லமுடியாத வலியையும், தாக்கத்தையும் ஈழத் தமிழினத்திற்கு ஏற்படுத்தவிட்டுள்ளது. கருணா தனி மனிதன், அவன் ஒரு துரோகி என்று என்னதான் வெளியே கூறினாலும், கருணாவின் பிளவினால் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு என்பது ஈடுசெய்ய முடியாததாகவே இருக்கின்றது. கருணாவின் பிளவு காரணமாக ஏற்பட்ட பிரதேசவாதப் புயலுக்குள் சிக்குப்பட்டு, இன்றுவரை மீள முடியாதவர்களாக பலர் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

வடக்கையும் கிழக்கையும் பிரித்து தமிழர்களின் தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற பாதைக்கு முட்டுக்கட்டை போடும் எதிரியின் சதிகளுக்கு நாம் தெரிந்துகொண்டே பலியாகிப்போன மற்றொரு சந்தர்ப்பம் இது.

அதுபோன்று, ஒற்றுமையாக நின்று வன்னி அவலங்களுக்காக வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்த ஈழத் தமிழர் மத்தியில் ஏற்பட்ட பிளவு என்பது, இன்று இணையத்தளங்களில் ஒரு தரப்பின் மீது மற்றத் தரப்பு வாந்தியெடுத்துக் கொண்டிருக்கின்ற அளவிற்கு கேவலமான நிலமையைத் தோற்றுவித்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் சம்பவத்தைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழ் சமூகத்தின் மத்தியில் ஏற்பட்ட பிளவானது, நாடுகடந்த தமிழீழ அரசு என்று ஒரு பிரிவாகவும், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று மற்றொரு பிரிவாகவும் புலம்பெயர் தமிழர்களை நிரந்தரமாகவே பிரித்துவிட்டுள்ளது.

போராடும் ஒரு இனத்தில் ஏற்படுகின்ற பிளவுகள் என்பது, எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்தப் போராட்டத்திற்கு உதவப்போவதில்லை. பிளவுகள் அந்தப் போராட்டத்தை பலவீனமாக்கும் காரணிகளாக இருந்ததே வரலாறு.

இந்த இடத்தில் ஒரு விடயத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

வழமையாகவே எதிரிகள்தாம் எம்மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி வந்திருந்தார்கள். ஆனால் தற்பொழுது எம்மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் தரப்பாக நாமே இருக்கின்றோம் என்பதுதான் கவலை அளிக்கும் விடயமாக இருக்கின்றது.

ஆம், இம்முறை தமிழ் இனத்தில் பிளவுகளை புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள்தாம் ஏற்படுத்தியுள்ளன. த.தே.கூட்டமைப்பையும், அதன் தலைவர் இரா.சம்பந்தனையும் தொடர்ந்து துரோகிகள் என்று திட்டமிட்டு குற்றம் சுமத்தி வந்ததுடன், கூட்டமைப்பைத் சிதறடிக்கும்படியான காரியங்களை தொடர்ந்து மேற்கொண்டபடியே நாம்; இருந்தோம். இறுதியில் பிரித்தும் விட்டோம்.

தமிழ் இனம் ஒற்றுமையாக நின்று தன் முன் வரும் சவால்களைச் சந்திக்கவேண்டும் என்று விருப்பம் கொண்டு செயற்படும் பலருக்கு எம்மத்தியில் ஏற்பட்டுள்ள பிளவானது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகின்ற ஒரு விடயமாக இது இருக்கின்றது.

த.தே.கூட்டமைப்பு ஒரு புனிதமான கட்சி என்றோ அல்லது த.தே.கூட்டமைப்பு செய்வதெல்லாம் சரி என்றோ நான் வாதிடவில்லை. ஆனால் த.தே.கூட்டமைப்பை உடைப்பதற்காக காலம் இதுவல்ல என்பதே எனது அபிப்பிராயம்.

த.தே.கூட்டமைப்பு என்பது ஈழத் தமிழினம் பெற்றெடுத்த ஒரு குழந்தை. அந்தக் குழந்தை ஏதாவது தவறுவிட்டால் அந்தக் குழந்தையை திருத்தி நல்ல வழியில் பயணிக்க வைப்பதுதான் நாம் செய்யவேண்டியதாக இருக்கின்றதே தவிர, எமது குழந்தையை நாமே அழித்துவிடும்படியான காரியத்தைச் செய்வது நல்லதல்ல. அது முறையும் அல்ல. மிருக ஜாதிகள்தாம் இதுபோன்று செய்வது. மனித இனம் இப்படியான ஒரு காரியத்தை ஒருபோதும் செய்யாது.

தற்பொழுது எம்மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற பிளவானது, நீண்டகாலத் தாக்கத்தை எமது அபிலாசைகளுக்கு ஏற்படுத்தக் கூடியது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடக்குடன் இணைவதா இல்லையா என்கின்ற ஒரு கருத்துக்கணிப்பை வெகுவிரைவில் கிழக்கு மாகாணம் சந்திக்க இருக்கின்ற நேரத்தில், எம்மத்தியில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு என்பது, எமது தேசிய அபிலாசைகளை வெகு மோசமாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தப் புதிய பிளவுகளினால் எம்மத்தியில் தோன்றியுள்ள குத்துவெட்டுக்களும், தனிநபர் போட்டிகளும், தமிழ் தேசிய ஆதரவுத் தளத்திலும் நாம் பிரிந்து நிற்பதற்குக் களம் அமைத்துவிட்டுள்ளது.

எம்மத்தியிலான பிளவுகள், தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிதித்துவத்திலும் பலத்த பாதிப்புக்களை ஏற்படுத்திவிட்டுள்ளது.

தென் தமிழீழ மாவட்டங்களில், தமிழ் தேசியம் என்று கூறிக்கொண்டு பல கட்சிகள் களமிறங்கியுள்ளதால், வாக்குகள் சிதறி தமிழ் பிரதிநிதித்தும் இல்லாமல்போய் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தமிழ் மக்கள் பாரிய பாதிப்புக்களை எதிர்கொள்ளும் அபாயநிலை ஏற்படும் இதனால், அங்கு வாக்குகள் சிதறடிக்கக் காரணமான கட்சிகள் மீது கிழக்கு வாழ் தமிழ் மக்கள் விரோதம் கொள்ளும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் (தமிழீழம்) என்று கூறிப் போட்டியிடுகின்ற கட்சி மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் போட்டியிடவில்லை. எனவே இவை வடக்கை மாத்திரம் மையப்படுத்தும் பிரதேசவாதக் கட்சிகளாக அடையாளப்படுத்தப்பட்டு, கிழக்கு மக்களால் அன்னியப்படுத்தப்படுகின்ற கட்சிகளாக மாறும் அபாயமும் இருக்கின்றது.

இதுபோன்று இந்த பிளவும், அதன் வழி வந்த விளைவுகளும் களத்திலும் புலத்திலும் இருக்கின்ற தேசியத்தை நேசிக்கும் சக்திகள் மத்தியில் மாறாத வடுக்களை நீண்ட காலத்திற்கு உருவாக்கிவிடும் அபாயமும் இருக்கின்றது.

எப்படிப் பார்த்தாலும், என்ன காரணத்திற்காக நடந்திருந்தாலும், இன்று தமிழ் இனம் இருக்கின்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்ட அல்லது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட பிளவு என்பது, ஈழத் தமிழர்களின் தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை மிக மோசமாகப் பலமிழக்கச் செய்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற தமிழர்களின் அபிலாசைகளுக்கு இலங்கையின் அரசியல் தளத்தில் தொடர்ந்து ஒரு ஸ்தானம் இருக்கவேண்டும் என்று உண்மையிலேயே நாம் விரும்பினால், பிளவுபட்டுள்ள எமது அரசியல் சக்திகளை மிக அவசர அவசரமான ஒன்றிணைக்கும் பணியில் நாம் இறங்கவேண்டும். அதுவும் உடனடியாக நாம் இறங்கியாகவேண்டும்.

எதிர்வரும் ஏப்ரல் 8ம் திகதி தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் தமிழினம் தோற்றுப்போய் நிற்கும் ஒரு காட்சி அரங்கேறப் போகின்றது.

எம்மை ஒன்றிணைப்பதற்கான தருணம் அதுவே.

அதற்கு நாம் இப்பொழுதிருந்தே எம்மைத் தயார் செய்யவேண்டும்.

ஒரு இனத்தின் வரலாறு என்பது சில மாதங்களை மாத்திரம் அடிப்படையாக வைத்தோ, அல்லது சில சம்பவங்களை மாத்திரம் வைத்தோ தீர்மானிக்கப்படுவதில்லை. தற்பொழுது எம்மத்தியில் நிகழ்ந்த இந்தப் பிளவுகள் சில சம்பவங்கள் மாத்திரம்தான்.

எம்மத்தியில் மீண்டும் ஒரு ஒற்றமையைத் தோற்றுவிப்பதன் மூலம் நடந்த தவறுகளில் இருந்து எம்மை நாம் மீட்டுக்கொள்ளமுடியும்.

எனவே, புலம் பெயர் சமூகம் எமது அரசியல் சக்திகளை ஒற்றமைப்படுத்தும் பணிகளை செய்ய முன்வரவேண்டும். அதுவும் அதனை உடனே செய்ய முன்வரவேண்டும்.

Niraj David,
Journalist
[email protected]

இவ்விடயம் பற்றிய உங்கள் கருத்தை எழுதுங்கள்

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.