இரு தரப்புகளும் அனுமதித்தால் மட்டுமே வன்னி மக்களை வெளியேற்றலாம் : அமெ.தெற்காசிய விவகாரச் செயலாளர் பவுச்சர்

richard_boucher“இலங்கையில், வன்னிப் பகுதியில் சிக்குண்டுள்ள மக்களை அமெரிக்க பசுபிக் கட் டளை அணியின் உதவியுடன் வெளியேற்றுவதற்கான அனுமதி அளிக்கும் சூழல் வரும் வரை, இரண்டு தரப்புகளும் சம்மதம் தெரிவிக்கும் வரை அந்தச் செயற்பாட்டில் நாம் ஈடுபடமுடியாது.”

இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணைச் செயலாளர் றிச்சார்ட் பவுச்சர். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எந்தெந்த உதவிகளை எங்களால் செய்ய முடியுமோ அவற்றைச் செய்வதற்கு முயற்சிப்போம் என்றும் அவர் கூறினார்.

போர்ப் பிரதேசத்தில் சிக்குண்டுள்ள மக்களை அமெரிக்கப் பசுபிக் கட்டளை அணியின் உதவியுடன் வெளியேற்றி இலங்கை அரசிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தது தெரிந்ததே. துணைச் செயலாளர் றிச்சர்ட் பவுச்சர் நேற்று நடத்திய தொலைபேசியூடான செய்தியாளர் மாநாட்டில் மேற்படி விடயம் குறித்துக் கேட்கப்பட்டது. அப்போதே அவர் அத்தகைய ஒரு செயற்பாட்டுக்கு அனுமதியளிக்கும் சூழல் ஒன்று உருவாகும் வரை மக்களை அப்புறப்படுத்தும் விடயத்தில் அமெரிக்கா ஈடுபட முடியாது என்று சொன்னார்.

சிக்குண்டுள்ள பொதுமக்களை முன்னர் குறிப்பிட்ட திட்டத்தின் பிரகாரம் வெளியேற்றுவதற்கு இரண்டு தரப்பபுக்களும் அனுமதிக்க வேண்டும் என்றும் றிச்சர்ட் பவுச்சர் குறிப்பிட்டார்.

வன்னியில் உள்ள நிலைமை குறித்து ஆராய்ந்து எந்தெந்த வகைகளில் அப்பகுதி மக்களுக்கு உதவ முடியும் என்ற சாத்தியக் கூறுகளை அடையாளம் காண எமது அதிகாரிகள் சிலரை அனுப்புகின்றோம். அப்பகுதியில் அவலப்படும் பொதுமக்களுக்கு எந்தெந்த உதவி செய்யமுடியுமோ அதைச்செய்ய முயல்வோம் என்றும் துணைச் செயலாளர் கூறினார். இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு சம உரிமைகளை கொடுத்து அவர்களைக் கௌரவத்துடன் நடத்துவதற்கு ஏற்பாடு செய்வது அவசியம்.

இத்தகைய சூழ் நிலையில் விடுதலைப்புலிகள் பொது மக்களை தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மக்களுக்கு மேலும் சிரமத்தையே கொடுக்கும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.