இந்தியாவின் நலன்களுக்காக அடிபணிவு அவலத்தை தமிழினம் சுமக்க முடியாது

அம்பாறை மாவட்டத்தில் பொதுத்தேர்தல் வேட்பாளர் பட்டியலை தயாரித்தவர்கள் அதிர்ச்சியடைந்து விட்டார்கள் அதன் நீளம் நான்கு அடியை தாண்டி விட்டதாம். அதனை போலவே எல்லா மாவட்டங்களிலும் வேட்பாளர் தொகைகள் மிக மிக அதிகம். சிறீலங்கா முழுவதிலும் 196 ஆசனங்களுக்கு 7,620 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வேட்பாளர்களின் தொகைகளை கண்டு வாக்காளர்கள் அஞ்சவில்லை, அவர்களில் தரமானவர்களை கண்டறிவது தான் கடினமானதாக உள்ளதாக யாழ் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதால் தென்னிலங்கையில் தேர்தல் வன்முறைகளில் எதிர்க்கட்சிகள் தப்பிக் கொண்டன. ஆளும் கட்சி கூட்டணிக்குள் தான் அதிக மோதல்கள் இடம்பெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிக வாக்குகளை பெற்று அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவின் சலுகைகளையும், நிதி அன்பளிப்புக்களையும் யார் பெறுவது என்ற போட்டிகள் அது.

தமிழ் மக்களின் தாயகத்திலும் முன்னர் ஒரு குடையின் கீழ் அணிவகுத்து நின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற கட்சி நான்கு குழுக்களாக பிரிந்துள்ளது. இந்த பிரிவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் தான் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இருந்தபோதும் அதனால் தமிழ் மக்கள் நெருக்கடிகளை சந்திக்கலாம் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் எப்போது விடுதலைப்புலிகள் அமைப்பு கலைந்துபோனதான ஒரு தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டதோ அப்போதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் மறுசீரமைக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டிருந்தது. ஆனால் அதனை நாம் அன்று உணரவில்லை என்பது தான் யதார்த்தம். தற்போது அதற்கான சந்தர்ப்பம் கனிந்துள்ளது.

தமிழ் மக்களை பொறுத்தவரையிலும் அவர்கள் ஒரு உரிமைக்காக போராடும் இனம். எனவே அவர்களின் உரிமைகளுக்காக துணிச்சலாக குரல்கொடுக்க வேண்டிய பிரதிநிதிகளே இன்றைய சூழலில் தேவை. எனவே தற்போது பிளவுகளை சந்தித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் உருவாகியுள்ள புதிய அமைப்புக்களில் தேசியத்திற்கு ஆதரவான, தெளிவான கொள்கைகளை உடைய கட்சியை தெரிவுசெய்ய வேண்டியது தமிழ் மக்களின் கடமை.

தமது கொள்கைகளை தெளிவுபடுத்த வேண்டியதும் கட்சிகளின் கடமை. நான் கடந்தவார பத்தியில் குறிப்பிட்டது போல தமது சுயஇலாபங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முற்றாக புறம்தள்ளப்பட்டு ஒரு தெளிவான அரசியல் கொள்கையும், செயல்திறன் மிக்கவர்களும் தெரிவுசெய்யப்பட வேண்டும்.

எனினும் யாழ் மக்களின் முன் பல வெற்றுக்கோசங்கள் எதிர்வரும் ஐந்து வாரங்களும் முன்வைக்கப்படப் போகின்றன என்தை நான் இங்கு கூறத்தேவையில்லை. அதனை யாழ் நகரத்து பொதுமகன் ஒருவரே தெரிவித்துள்ளார். அதாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஒரு தேர்தல் சுவரொட்டியில் “ஊடகத்துறை முதலாளி ஒருவர் ஊடகப்போரளியாக” சித்தரிக்கப்பட்டுள்ளதை நினைத்து தான் கண்ணீர் விட்டு அழுததாக அவர் கூறினார்.

இவ்வாறு பல மயைத் தோற்றங்கள் வடபகுதி தமிழ் மக்களை சூழந்து கொள்ளலாம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்றால் இந்தியாவுடனான பேச்சுக்களுக்கு அனுகூலமானது என்றும் கூறப்படுகின்றது. ஆனால் உண்மை என்பது மறுதலையானது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் யார் வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றாலும் அவர்களுடன் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பில் இந்தியா பேசத்தான் போகின்றது.

அது தான் தற்போது இந்தியாவின் முன் உள்ள ஒரே தெரிவு. ஆனால் இந்தியாவுடன் நடைபெறப்போகும் இந்த பேச்சுக்களில் பங்குபற்றும் தமிழ் மக்களின் பிரநிதிகள் ஒரு அடிபணிவு அரசியலை விடுத்து பேரம்பேசும் நிலையில் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும் என்பது தான் தமிழ் சமூகத்தின் விருப்பம். சிறீலங்காவை பொறுத்தவரையிலும் அது தற்போது மீளமுடியாத ஒரு பூகோள அரசியல் சிக்கலில் சிக்கிக்கொண்டுள்ளது. சீனா – ரஸ்யா – ஈரான் என்ற கூட்டுக்குள் அது நிரந்தரமாக அமிழ்ந்து போயுள்ளது. போரின் போது சிறீலங்கா படையினரை சீனா நவீனமயப்படுத்தி வந்தது, ஆனால் போரின் பின்னர் அதனை ரஸ்யா தனது கையில் எடுத்துள்ளது.

சீனாவின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி உதவிகளுடன் தற்போது ரஸ்யாவும் மெல்ல மெல்ல இணைந்துள்ளது. சிறீலங்காவுக்கான எண்ணை விநியோகத்தை ரஸ்யாவின் முன்னனி நிறுவனமான கஸ்போரம்  (Gazprom) மேற்கொள்ள முன்வந்துள்ளது. அரச தலைவர் தேர்தலின் பின்னர் ரஸ்யா சென்ற சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா இதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தார்.

ரஸ்யாவின் எண்ணை உற்பத்தி நிறுவனங்களில் கஸ்போரம் மற்றும் றொஸ்நெப்ஃற் (Rosneft)) ஆகியன முன்னிலையில் உள்ளன. கடந்த வருடம் ஏப்பிரல் மாதம் இந்த நிறுவனங்களுடன் சீனாவும் 15 பில்லியன் டொலர் உடன்பாட்டை மேற்கொண்டிருந்தது.

மேலும் கஸ்போரம் நிறுவனம் நையீரியாவின் எண்ணை வளத்தை தன்வசப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொண்ட 2.5 பில்லியன் டொலர் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக எதிர்த்துள்ளது.

நையீரியாவின் எண்ணைவளம் உலகில் ஏழாவது பெரிய எண்ணைவளமாகும். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தேவையான எரிவாயுவில் அரைப்பங்கை அது பூர்த்தி செய்கின்றது. இந்த நிலையில் அங்கு ரஸ்யாவின் நிறுவனம் மேற்கொள்ளும் முதலீடானது தமது வினியோக வழிகளை கட்டுப்படுத்தும் முயற்சியாகவே ஐரோப்பிய ஒன்றியம் நோக்குகின்றது.

சிறீலங்கா தற்போது எடுத்துவரும் நிலைப்பாடானது, சிறீலங்காவுக்கும் மேற்குகத்திற்கும் இடையிலான விரிசல்களை அதிகரித்து வருகின்றது. கடந்த மாதம் 24 ஆம் நாள் பிரித்தானியாலில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியா பிரதமர் உட்பட பெருமளவான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டதும், அதனை தொடாந்து சிறீலங்கா அரசு பிரித்தானியா தூதரகத்தின் முன்னாள் தனது ஆதரக் கட்சிகளை கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதும் அதனை தான் பிரதிபலிக்கின்றது.

சிறீலங்காவுக்கும் மேற்குலகத்திற்கும் இடையிலான இந்த இடைவெளியை அதிகரிக்கச் செய்வதும், மேற்குலகத்துடன் ஈழத்தமிழ் மக்கள் தமது உறகளை வலுப்படுத்துவதும் தான் எமது இராஜதந்திர நகர்வுகளின் தற்போதைய தேவையாக உள்ளது.

புலம்பெயர் தமிழ் சமூகம் – தயாகத்து அரசியல் நகர்வுகள் – மேற்குலகத்துடனான உறவுகள் இந்த மூன்று காரணிகளும் ஒருங்கிணையும் போதே ஈழத்தமிழ் மக்கள் தமது உரிமைகள் தொடர்பான பேரம்பேசும் பலத்தை தக்கவைக்க முடியும்.

- அருஷ்
நன்றி: ஈழமுரசு

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.