மகிந்த ராஜபக்ச – நிருபமா ராவ் இன்று சந்த்திப்பு
-
இவ் விடயம் 07. 03. 2010, (திங்கள்),
தமிழீழ நேரம் 18:29க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயத்தை பிரதமர் மன்மோகன் சிங் எதிர்பார்த்திருப்பதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் சிறிலங்கா ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் அலரி மாளிகையில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய போதே பிரதமர் மன்மோகன் சிங்கின் விருப்பம் குறித்து தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு வாழ்த்துத் தெரிவித்த நிருபமா ராவ், தான் உயர்ஸ்தானிகராக இருந்த காலத்தை விட தற்போது சிறிலங்காவின் முன்னேற்றங்களுக்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை அவதானித்ததாகவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மீள் வெற்றியானது நம்பிக்கையைத் தந்திருப்பதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்குரிய சந்தர்ப்பத்தையும் வழங்கியுள்ளதாக இச்சந்திப்பில் நிருபமா ராவ் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதிச் செயலகம் தெரிவித்துள்ளது.
இச்சந்திப்புக் குறித்து சிறிலங்காவின் ஜனாதிபதிச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு – கிழக்கு உட்பட ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் போட்டியிடுவது அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீது இருக்கின்ற ஆர்வத்தைத் காட்டுவதாகவும் இத்தகைய போக்கு சிறிலங்காவில் சமாதானத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் எனவும் நிருபமா ராவ் குறிப்பிட்டார்.
சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்திய பின்னர் நாடு தழுவிய ரீதியில் நடாத்தப்படும் பொதுத் தேர்தலில் பங்குபற்றுவதற்கு மக்கள் ஆர்வமுடன் முனைப்புக் காட்டி வருவதாகவும், வடக்கு – கிழக்கு உட்பட இத்தேர்தலில் வெற்றயீட்டுவார்கள் என எதிர்பார்க்கின்ற பல புதிய முகங்களுடன் பணியாற்றுவதை தான் எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி நிருபமா ராவிடம் தெரிவித்துள்ளார்.
போரினால் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் மீளக்குடியமர்த்தி இருப்பது குறித்து நிருபமா ராவ் திருப்தி கொண்டுள்ளதாகவும் இத்தகைய மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் எனவும் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்குக்கான தொடருந்துப் பாதைகளுக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கும் இந்தியா உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் நிருபமா ராவ் குறிப்பிட்டார்.
அதேவேளை, கடல் பிராந்தியத்தில் இரு நாடுகளின் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், திருகோணமலையில் அமைக்கப்படவுள்ள நிலக்கரி எரிசக்தி திட்டம், பொருளாதார மற்றும் சூழல் பாதுகாப்பு குறித்த இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பில் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா, சிறிலங்கா ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்று வெளிவிவகாரச் செயலாளர் ரொமேஸ் ஜெயசிங்க ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, இச்சந்திப்புக் குறித்த விபரங்கள் இந்தியத் தரப்பால் இதுவரை வெளியிடப்படவில்லை.
சிறிலங்கா உறுதியளித்த படி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு சுமுகமான தீர்வினை உடனடியாக முன்வைக்கும் படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் வலியுறுத்துவார் என டில்லி வட்டாரங்கள் தெரிவித்திருந்த போதிலும், அதுகுறித்த விபரங்கள் ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இரண்டாவது தடவை பதவியேற்ற பின் சிறிலங்காவுக்கு விஜயம் செய்யும் முதல் இந்திய உயர்மட்ட அதிகாரி நிருபமா ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.