தமிழர் போராட்டமும் வன்னி சமர்க்களமும்

ltteதமிழீழ விடுதலைப் போராட்டம் கடந்துபோன 30 ஆண்டுகளில் பல்வேறுபட்ட நெருக்கடிகளையும், பின்னடைவுகளையும், பிராந்திய வல்லரசுகளின் அழுத்தங்க ளையும், சர்வதேச நாடுகளின் நெருக்குதல்களையும் சந்தித்து அவற்றிற்கெல்லாம் ஈடுகொடுத்து அது தனது பாதையினை காலத்திற்குக் காலம் நெறிப்படுத்தி முன்னோக்கி நகர்த்தியிருந்தது.

வன்னிச்சமரில் தாம் எதிர்கொண்டிருக்கின்ற நெருக்கடிகளை உடைத்தெறிவதற்காக யாரும் எதிர்பார்க்காத வித்தியாசமான முடிவுகளை புலிகள் எடுத்திருக்கின்றனர் என்பது தெரிகிறது.

இதன் விளைவாக ஏற்படுத்தப்பட்ட இராணுவச்சம நிலையும், அதனால் உருவாக்கப்பட்ட சமாதான உடன்படிக்கையும் புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை ஒரு விசப்பரீட்சையாகவே கருதப்பட்டிருக்க வேண்டும்.

ஏனெனில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அதன் பேரம் பேசும் சக்தி தமிழர்களின் இராணுவ பலமே. இதனாலேதான் விடுதலைப் போராட்டத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்கு அப்பால் இராணுவ நடவடிக்கைகளுக்கே புலிகள் இயக்கம் ஆரம்ப காலம் தொட்டு முன்னுரிமை கொடுத்து வந்திருக்கின்றது. பலமுள்ளவன் வாழ்வான் என்ற யதார்த்தத்தினை அடிப்படையாகக் கொண்டு புலிகள் இயக்கம் கடைப்பிடித்த இராணுவக் கொள்கை விடுதலைப் போராட்ட களத்தில் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற நிலையை எய்துவதற்கு வழிசமைத்திருந்தது.

அந்தவகையில் ஈழ விடுதலைக்காக புறப்பட்ட ஈழ மைந்தர்கள் தம்முள் முட்டி மோதிக்கொண்டு வழிதவறிப்போய் போராட்டக்களத்தில் காணாமல் போய்விட கூர்ப்புக் கோட்பாட்டின் தந்தையான சாள்ஸ் டார்வினின் பரிணாம வாதக் கோட்பாட்டின் படிமுறைகளான இயற்கைத்தேர்வு, தக்கன பிழைத்தல் என்பவற்றினடிப்படையில் விடுதலைப் போராட்ட களத்தின் சூழலுக்கும், தன்மைக்கும் இயைபாக தம்மை இசைவாக்கிக் கொண்டு செயற்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கம் இயற்கைத் தேர்வு என்ற படிநிலையை சரியாக நிலைநிறுத்தி அடுத்த கட்டப் படிநிலையான தக்கன பிழைத்தல் என்ற பரிணாமவளர்ச்சியின் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்தனர்.

மூன்று தசாப்த காலகட்டங்களின் தமிழீழ விடுதலைப் போராட்ட களத்தின் உட்சூழலுக்கும், வெளிச் சூழலுக்கும் ஏற்றவகையில் தனது பாதையை நேர்வழிப்படுத்தி அதன் வளைவு சுழிவுகளை எல்லாம் தாண்டி இருபக்க இராணுவ பலச்சமநிலையை புலிகள் இயக்கம் நிறுவியது என்றால் அதை டார்வினின் கோட்பாட்டியல் ரீதியில் கூறுவோமானால் அவர்களுடைய “இயற்கைத் தேர்வு’ என்ற படிநிலையில் அவர்கள் எடுத்த முடிவுகளே எனலாம். ஆனால், இற்றைவரை சமபல நிலையில் இருந்த அரசியல் இராணுவ பலம் தற்போது ஒரு பின்னடைவை சந்தித்திருக்கிறது என்றால் இதற்கு காரணம் 2002 இல் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கையும், அதனால் ஏற்பட்ட சமர் ஓய்வுமேயாகும். சமரசப் பேச்சுவார்த்தைகளின் நீட்சியானது வீணே ஐந்துவருடங்களை விழுங்கிவிட்டது.

இந்த ஐந்து வருடங்களில் போராளிகளினதும், மக்களினதும், போராட்ட உணர்வும் அதன் வீரியமும், மழுங்கடிக்கப்படுவது இயல்பானதே. போர்ச் சூழலற்ற நிலையில் போராளிகளின் இடைவிலகல் தவிர்க்க முடியாததாகின்றது. அத்தோடு இயங்கு நிலையிலிருந்த போராளிகள் தொடர்ச்சியான ஓய்வில் இருக்கின்ற போது அவர்களுடைய எண்ணங்களும் சிந்தனைகளும் வேறு திசைகளுக்கு திருப்பப்படுவது பொதுவானதே. ஆனால் அரசபடைகள் அவ்வாறானதல்ல. இடைவிலகல் என்ற பேச்சுக்கு அங்கு இடமில்லை. தொடர்ச்சியாக படைச்சேர்ப்புக்கள் இடம்பெறுவதுதான் வழக்கம். ஆகவே அரச படை என்பது ஆயுதஆளணி வளங்கள் தொடர்ச்சியாக பெருக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவே இருக்கும்.

ஆனால், விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபடுகின்ற இயக்கங்களின் உறுப்பினர்கள் யாவரும் சேவையினடிப்படையில் தொழிற்படுகின்றனர். எனவே இவர்களுக்கு நீண்டகால சமரோய்வினை ஏற்படுத்துவதன் மூலம் போராட்டத்தில் அவர்களுடைய வினைத்திறனையும், பற்றுறுதியையும் சிதைத்துவிட முடியும் என்ற யதார்த்தத்தினை அடக்குமுறை அரசுகள் சர்வதேச சக்திகளின் ஆதரவோடு நீண்ட சமாதானப் பேச்சு வார்த்தைகளை உருவாக்கி காலத்தை இழுத்தடித்து போராட்டங்களை ஒடுக்கிய வரலாற்றினை கொலம்பியாவிலிருந்து பாலஸ்தீனம் வரை நாம் பார்க்க முடிகின்றது. கொலம்பிய விடுதலைப் போராட்டத்தில் நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சமர் ஓய்வும், நீண்டகாலச் சமரசப் பேச்சுக்களும் மிகப்பெரும் கால இடைவெளியை விழுங்கிவிட கொலம்பிய விடுதலைப் போராளிகளின் தொகையும், பலமும் வீழ்ச்சியடைந்து போக தக்க தருணம் பார்த்து கொலம்பிய அரசு பேச்சுவார்த்தைகளை முறித்து இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள இதற்கு ஈடுகொடுக்க முடியாமல் போராளிகள் அந்தீஸ் மலைத்தொடர்க் காடுகளில் ஒதுங்க வேண்டிய நிலையை அவர்களுக்கு ஏற்படுத்திற்று. இதே வகையிலான ஒரு இராஜதந்திரவியூகமே இலங்கையிலும் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் நீடித்த சமர் ஓய்வும் இயல்பு நிலையும், மக்கள் மத்தியில் புனர்நிர்மாணத்திற்கான உந்துதலை ஏற்படுத்தியதனால் மக்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்றவாறு புலிகள் இயக்கமும் மிகப்பெருமெடுப்பிலான நிர்மாணப் பணிகளை மேற்கொண்டதனால் வன்னி துரிதகதியில் வளர்ச்சியடைந்தது பெருமைக்குரியதே. இவ்வாறு புனர்நிர்மாணத்திற்கு முன்னுரிமை கொடுத்த புலிகள் இயக்கம் தமது படையணிக் கட்டமைப்பிற்கான வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கவில்லையா? என்ற கேள்வியும் எழுகின்றது. உண்மையில் முன்பு சொன்னதுதான் நடந்திருக்கிறது என்றே கருதலாம். அடுத்து தற்போதைய வன்னிக் களநிலையை நோக்குவோமானால் மிக அபாயகரமான ஒருகட்டத்தை அடைந்திருக்கிறது. புலிகளின் ஆளுகைக்குட்பட்ட நிலம் மிகவும் சுருங்கி எஞ்சியிருப்பது இரண்டு மூன்று கிராமங்கள் என்ற நிலையை அடைந்துவிட்டது. இதனால் வன்னியில் வாழும் பலஇலட்சம் மக்கள் மிகக்குறுகிய நிலப்பரப்பிற்குள் மாத்தளன், புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், இரணைப்பாலை ஆகிய பகுதிகளுக்குள் மிகச் செறிவாக ஒடுக்கப்பட்டிருப்பதனால் மேற்கொள்ளப்படுகின்ற மூர்க்கமான எறிகணை வீச்சினுள் அகப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தைத் தொட்டு நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்கள் போக காயமடைந்தவர்களின் நிலை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத அளவிற்கு சென்றுவிட்டது. அன்றாடம் ஒருநேர உணவைக்கூட சமைக்க முடியாமல் பதுங்கு குழிக்குள்ளேயே மக்கள் வாழ வேண்டிய நிலை அங்கு ஏற்பட்டிருக்கிறது. வன்னியில் உடையார் கட்டு, விசுவமடுப்பகுதிகளின் தென்புறக் காட்டுச்சண்டையில் ஈடுபட்ட விசேடபடையணி களான 2 மற்றும் 3 ஆகியன பின்னகர்த்தப்பட்டு ஓய்வில் விடப்பட்டிருக்கின்றன. இவர்களுடைய இடத்திற்கு விசேட படையணி 4 முன்னகர்த்தப்பட்டு தற்போது தேவிபுரத்தில் நிலைகொண்டுள்ளன. அத்தோடு மன்னாரிலிருந்து பூநகரி பரந்தன் என தொடர்ச்சியான கரையோரச் சண்டைகளில் ஈடுபட்ட 58 டிவிசன் இங்கும் களமுனையில் முன்னகர்த்தப்பட்டு அம்பலவன் பொக்கணைப் பகுதியில் தற்போது நிலைகொண்டுள்ளன. ஆனால் கிளிநொச்சிக்கான சண்டையில் ஈடுபட்ட 57ஆவது படையணி தற்போது கிளிநொச்சியின் கிழக்குப் புறம் ஓய்வு நிலையில் நிலைகொண்டுள்ளது. நாகர் கோவிலில் இருந்து முன்னகர்ந்த 55ஆவது படையணி சாலையிலிருந்து மாத்தளன் பகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஆகமொத்தத்தில் புலிகளின் இறுதித் தளமாக இருக்கும் புதுக்குடியிருப்பை விழுத்துவதற்கான இராணுவ வியூகத்தில் வடக்கே 55 ஆவது டிவிசன், சாலையிலிருந்து மாத்தளன் நோக்கி நகர வேண்டுமானால் சிறிய கடல்நீரேரித் தொடுவாயைக் கடக்க வேண்டும். அவ்வாறே முல்லைத்தீவில் உள்ள 59ஆவது டிவிசன் முள்ளிவாய்க்கால் நோக்கி நகரவேண்டுமானால் நந்திக்கடலையும், இந்துசமுத்திரத்தையும் தொடுக்கும் ஏரியின் மேலான வட்டுவாகல் பாலத்தைக் கடக்கவேண்டும்.

அல்லது புதுக்குடியிருப்பை வீழ்த்துவதற்கான சண்டைகள் மேற்குப் புறமாக தேவிபுரத்திலிருந்தும், அதன் கிழக்குப்புறமான கேப்பாபுலவிலிருந்தும், தெற்கே ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியிலிருந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட மூன்று பக்கங்களும் புதுக்குடியிருப்பு நகர மத்தியிலிருந்து ஒன்று தொடக்கம் 3மைல்கள் தூரத்தினுள்ளேயே படையினர் நிலைகொண்டுள்ளனர். எனவே படையினரின் கைக்கெட்டிய தூரத்திலேயே புதுக்குடியிருப்பு உள்ளது. இருப்பினும் புதுக்குடியிருப்பு நகரத்தை நோக்கிய சண்டைகள் வரும் வாரங்களில் மென்மேலும் இறுக்கமடைந்து செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. இவ்வாறு புலிகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதி மிகச் சுருங்கிய நிலையில் இருந்தும் கடந்த வாரம் வான் புலிகள் கொழும்பில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டிருப்பது மேலும் வான்தாக்குதல்களை நடத்துவதற்கான சக்தியை புலிகள் இன்னும் இழக்கவில்லை என்றே கருத வைக்கிறது.

மேலும் வன்னிச்சமரில் தாம் எதிர்கொண்டிருக்கின்ற நெருக்கடிகளை உடைத்தெறிவதற்காக யாரும் எதிர்பார்க்காத வித்தியாசமான முடிவுகளை புலிகள் எடுத்திருக்கின்றனர் என்பது தெரிகிறது. எனவே படையினர் மென்மேலும் இடங்களைக் கைப்பற்றுகின்ற போதும் புலிகளின் சிலமுக்கிய தளபதிகளும் படையணிகளும் நிலைகொண்டிருக்க, ஏனைய புலிகளின் படையணிகள் வேறு பிரதேசங்களுக்கு நகர்த்தப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. எவ்வாறெனில் ஒட்டுமொத்த அரசபடையினர் கிழக்கு வன்னியின் வட அரைப்பாகத்தை முற்றுகையிட்டு செறிவாக நிலைகொண்டிருக்க கடல் வழியாகவோ அல்லது தரைவழியாகவோ படைச்செறிவில் லாத வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளில் உள்ள காட்டுப் பகுதி களை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கலாம். இதற்காக கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட வரையறுக்கப் பட்ட ஊடறுப்புத் தாக்குதலை யும், கடற்புலிகளால் முல்லைத்தீவில் நடத்திய தாக்குதலையும் பயன்படுத்தி அந்தச் சண்டை இடைவெளிகளுக்குள் புலிகளின் படையணிகள் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியே சென்றி ருக்கலாம்.

எனவே புலிகள் இயக்கம் மீண்டும் இந்திய இராணுவ நெருக்கடிகால நிலைமைக்கு ஒத்ததான ஒரு போரியல் சூழலை நோக்கி பின்நோக்கிச் சென்றிருக்கின்றது. இது மீண்டுமொருமுறை டார்வினின் பரிணாமவாத படிநிலைகளான இயற்கைத்தேர்வு, தக்கன பிழைத்தல் என்பவற்றினை சந்தித்து வளமான எச்சங்களை தோற்றுவிக்கத்தான் போகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.