மிஞ்சி இருக்கும் புலிகள் தமது தலைவரை தேடுகின்றனராம் – இந்தியாவிடம் சிறிலங்கா
-
இவ் விடயம் 09. 03. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 12:52க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தடையங்களைத் தேடுவதில் அந்த இயக்கத்தின் மிச்ச சொச்சங்கள் சில ஈடுபட்டிருப்பதைத் தாம் கவனத்தில் கொண்டுள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து இந்தியாவுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் உடன் நடத்திய பேச்சுக்களின் போது இது தொடர்பிலான தமது கவலைகளை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம வெளிப்படுத்தினார்.
சிறிலங்கா தொடர்ந்தும் வழிப்புடன் இருக்கும் என்றும் நாட்டின் நில ஒருமைப்பாட்டையும் இறைமையையும் பாதுகாப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அச் சந்திப்பில் விளக்கினார்.
“தீவிரவாதம் குறித்தும் அது தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் குறித்தும் நாம் விவாதித்தோம்.
அனைத்துலக மட்டத்தில் செயற்பட்டு வரும் விடுதலைப் புலிகளின் மிச்ச சொச்சங்கள் சில தமது தலைவரை இன்னும் தேடி வருவது குறித்த எமது கவலைகளையும் இந்திய வெளிவிவகாரச் செயலரிடம் பகிர்ந்து கொண்டோம்” எனத் தெரிவித்தார் அமைச்சர் போகொல்லாகம.
நிருபமா ராவ் உடனான சந்திப்பின் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலைத் தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டிருக்கின்றது எனவும் அவர் கூறினார்.
சிறிலங்காவில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்க ஐ.நா. பொதுச் செயலாளர் குழு ஒன்றை அமைத்துள்ளமை குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், அது நாட்டின் உள் நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்பதுடன் அத்தகைய ஒரு குழு தேவையில்லை என்பதை குடியரசு அதிபர் மகிந்த ராஜபக்ச அழுத்திச் சொல்லியுள்ளார் என்றும் கூறினார்.
“போரின் பின்னரான நிலைமைகள் மற்றும் அதற்கு முன்னரான நிலைமைகள் குறித்து பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழு சிறிலங்காவின் உள் நாட்டு விவகாரங்களில் தலையிட அனுமதிக்கபட மாட்டாது. அத்தகைய குழு தேவையில்லை என்பதை எமது குடியரசு அதிபர் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்” என்றார் அமைச்சர்.