சிறீலங்கா எமக்கு வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றவில்லை: ஐ.நா

சிறீலங்காவுக்கு நான் மேற்கொண்ட விஜயத்தின் போது அரச தலைவர் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் அரசு காத்திரமான செயற்திட்டங்களை முன்னெடுக்கவில்லை என்பது கவலை தருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நான் கடந்த வருடம் சிறீலங்காவுக்கு சென்ற போது பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையடியிருந்தேன். ஆனால் சிறீலங்கா அரச தலைவர் வழங்கிய உறுதிமொழிகளை அவர் நிறைவேற்றவில்லை.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் எனக்கு ஆலாசனைகளை வழங்குவதற்கு குழு ஒன்றை அமைப்பது தொடர்பில் நான் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுக்கு தெளிவாக எடுத்துக் கூறியுள்ளேன்.

இந்த நோக்கத்திற்காக ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிநிதி லியாம் பெஸ்கோ விரைவில் கொழும்பு செல்லவுள்ளார்.

போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள், அரசியல் தீர்வு முன்வைக்கப்படுதல், இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு போன்றவை தொடர்பில் கடந்த வியாழக்கிழமை (4) சிறீலங்கா அரச தலைவருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலில் தெளிவாக தெரிவித்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.