முன்னாள் இராணுவ தளபதிக்கே இந்நிலை என்றால் சாதாரண பொது மக்களின் நிலையை சிந்தித்துப் பார்க்கவே முடியாது என்கிறார் அனோமா
-
இவ் விடயம் 10. 03. 2010, (சனி),
தமிழீழ நேரம் 5:04க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
ஜனநாயக விரோத செயற்பாடுகள் நாட்டில் தலைதூக்குகின்ற பொழுது அதற்கெதிராக குரல் கொடுக்கும் ஆண்களை சிறை வைக்கும் ஆபத்தானதோர் சூழல் தற்பொழுது உருவாகியுள்ளது. இத்தகைய ஜனநாயக விரோத செயல்களுக்கு கணவர்களையும், பிள்ளைகளையும், சகோதரர்களையும் பலி கொடுக்கும் காலத்தை மாற்றியமைக்க வேண்டுமென அனோமா பொன்சேகா தெரிவித்தார்.
குற்றமற்ற நிலையில் ஜெனரல் பொன்சேகா சிறை வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் இராணுவ தளபதிக்கே இந்நிலை என்றால் சாதாரண பொது மக்களின் நிலையை சிந்தித்துப் பார்க்கவே முடியாது என்று அவர் தெரிவித் தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று பொது நூலகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அனோமா பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.
அவர், தொடர்ந்தும் கூறுகையில், இன்று நூறாவது ஆண்டு மகளிர் தினத்தை சர்வதேச ரீதியில் பெண்கள் கொண்டாடுகின்றார்கள். ஆனால், இலங்கைவாழ் பெண்கள் எந்த நிலையில் உள்ளார்கள் என்று புதிதாக ஒன்றும் கூறத் தேவையில்லை. அநீதிகள் மேலோங்கி பொய்ப் பிரசாரங்களும் அடக்கு முறைகளும் இலங்கையில் தலை விரித்தாடுகின்றது.
இதற்கெதிராக குரல் கொடுப்பவர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கென கூட்டிச் சென்று பலவந்தமாக சிறைகளில் தடுத்து வைக்கின்றனர். இந்த நிலையே ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று பல அசாதாரண சிறை வைப்புக்களும் இடம்பெற் றுள்ளன.
எனவே, இலங்கையில் தற்போது காணப்படும் ஆபத்தான சூழ்நிலையில், பெண்கள் அணிதிரள வேண்டும். எமது பங்களிப்புக்கள் கட்டாயமாக காணப்பட வேண்டும்.
இல்லையென்றால் எதிர்வரும் நாட்களில் பலர் சிறை வைக்கப்படுவார்கள். இன்னும் பலரின் உயிர் காவு கொள்ளப்படும். பணத்திற்காக காட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபடக்கூடாது. எம்முன் உள்ள சவால்களை எதிர்கொள்ளக்கூடியவாறு எமது கரங்கள் மேலோங்க வேண்டும் என்றார்.