உயிராபத்தை எதிர்நோக்கும் மெராக் துறைமுக அகதிகள்

இந்தோனேசியாவின் மெராக் துறைமுகத்தில் கப்பலில் தங்கியிருக்கும் தமிழ் அகதிகளின் நிலை குறித்து அவுஸ்திரேலியப் பிரதமர் Kevin Rudd ம், இந்தோனேசிய ஜனாதிபதி Susilo Bambang Yudhoyono ம் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளனர்.

நாளையுடன் 150 நாளாக இக்கப்பலில் தங்கியிருக்கும் இவ்வகதிகள் மத்தியில் பொக்கிளிப்பான் நோய் வேகமாக பரவி வருகின்ற நிலையில், நாளை அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் இரு நாடுகளுக்கும் இடையிலான இச்சந்திப்பில் தமிழ் அகதிகள் குறித்தே பிரதானமாக பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கப்பலில் வேகமாகப் பரவி வருகின்ற பொக்கிளிப்பான் நோயால் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் மூன்று குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ள இவ்விகாரம், அம்மக்களின் எதிர்காலத்தையும் நிர்ணயிப்பதாக உள்ளது.

இக்கப்பலில் தங்கியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவனேசன் இரு நாடுகளுக்கும் இடையில் நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தமக்கு சாதகமான ஒரு பதில் கிடைக்குமென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமது எதிர்காலம் குறித்து கப்பலில் உள்ள மக்கள் மிகுந்த அச்சம் கொண்டிருப்பதாகவும், அவர்கள் மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 அதேவேளை, அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்ற மனிதவுரிமை ஆர்வலர் கலாநிதி பிரையன் செனிவரத்ன இக்கப்பலில் பரவி வருகின்ற பொக்கிளிப்பான் நோய் குறித்து மிகுந்த அச்சம் தெரிவித்துள்ளார்.

இந்த பொக்கிளிப்பான் நோய் தீவிரமடைந்தால் அது அவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி ஒருவர் கூட உயிர் வாழ முடியாத நிலை ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அவர்களுக்கான உடனடி மருத்துவ உதவிகள் குறித்தும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்நோய் பரவி வருவது குறித்து தமக்கு எதுவும் தெரியாதென இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Teuku Faizasyah தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தோனேசியாவில் பொக்கிளிப்பான் என்பது ஒரு சாதாரண நோய் எனவும், இதற்காக விசேட சிகிச்சைகளை மேற்கொள்வது குறித்து விருப்பமின்மையையும் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு விசேட சிகிச்சை மேற்கொள்ள முயற்சித்தால், இச்சிகிச்சையின் பேரில் கப்பலிலுல்ள பலர் தமது பகுதிக்கு வந்து விடுவார்கள் எனவும், அந்நிலை தமக்கு மேலும் பிரச்சினைகளை உருவாக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Oceanic Viking கப்பலில் இருக்கின்ற தமிழ் அகதிகளின் விடயத்தை அணுகுவது போல், மெராக் துறைமுகத்தில் கப்பலில் இருக்கின்ற அகதிகளின் விவகாரம் விரைவில் பரிசீலனைக்கு எடுக்கப்படும் என இந்தோனேசிய அரசு நம்பவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு இன்று விஜயம் செய்துள்ள இந்தோனேசிய ஜனாதிபதி Susilo Bambang Yudhoyono க்கு அவுஸ்திரேலிய அரசு கௌரவமளிக்கவுள்ளது.

தமது நாட்டுடனான, ராஜதந்திர உறவுகளை பலப்படுத்துவதற்கு அவர் எடுத்த முயற்சிக்கே இந்த கௌரவம் வழங்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.