போர் முடிந்த நிலையில் புதிய தடுப்பு முகாம்கள்! ஏன்? எதற்காக? – ஜே.வி.பி
-
இவ் விடயம் 10. 03. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 5:14க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்துள்ள நிலையில் புதிய தடுப்பு முகாம்கள் அமைப்பது குறித்து சிறிலங்காவின் வர்த்தகமானியில் அறிவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக ஜே.வி.பி. கேள்வி எழுப்பியுள்ளது.
அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது குறித்து சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இக்கேள்வியை எழுப்பியுள்ளார்.
சிறிலங்காவின் படைத் தலைமையகம், சாலியபுர படைமுகாம், பனாகொட படை முகாம் மற்றும் கடற்படைத் தலைமையகம் உட்பட எட்டு முகாம்கள் புதிய தடுப்பு முகாம்களாக வர்த்தகமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இப்புதிய தடுப்பு முகாம்கள் அமைக்கப்படுவது குறித்த வர்த்தகமானி அறிவித்தல் வெளியானதைத் தொடர்ந்து, இதற்கெதிராக உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனிதவுரிமை செயற்பாட்டாளரான பயாகல அமிதா பிரியந்தியால் தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவில், வர்த்தகமானியில் வெளியிடப்பட்ட புதிய தடுப்பு முகாம் அமைப்பது தொடர்பான அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்படுவதை இடைநிறுத்த இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இம்மனுவில் சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் மகிந்த பாலசூரிய மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.