வன்னியில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் முற்று முழுதாக ராணுவ நெருக்குவாரங்களின் கீழேயே வாழ்ந்து வருவதாக குற்றச்சாட்டு
-
இவ் விடயம் 11. 03. 2010, (சனி),
தமிழீழ நேரம் 5:11க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
வன்னியில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் முற்று முழுதாக ராணுவ நெருக்குவாரங்களின் கீழேயே வாழ்ந்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன. அண்மையில் இலங்கை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் குழு ஒன்று மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடி விஜயம் செய்திருந்தது.
யாழ் ஆயர் அதி வணக்கத்திற்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தலைமையில் இடம்பெற்ற இந்தக் குழுவில் குருநாகல், பதுளை, ரத்தினபுரி, சிலாபம், மன்னார் குரு முதல்வர் அன்ரனி விக்ரர் சூசை ஆகியோரும் விஜயம் செய்திருந்தனர்.
முல்லைத்தீவு, கிளிநொச்சி பங்குத் தந்தை அருட்திரு ஜோன் அடிகளார் இவர்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற குழுவினர் மக்கள் முற்றுமுழுதாக ராணுவ நெருக்குவாரங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் அடிப்படை வீட்டு வசதிகள் எதுவும் அற்ற நிலையிலேயே அவர்கள் உள்ளதாகவும் தமது அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
முக்கியமாக ஏ9 வீதியிலுள்ள கிளிநொச்சி நகரை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவர மறுப்பதாகவும் மக்களின் பிரதான நகரமான அங்கு தமது கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நெருக்குவாரங்கள் நிலவுவதாகவும் ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இம்முறையும் படைத்தரப்பு இவர்களது விஜயம் தொடர்பாக ஊடகங்களுக்கு தகவல்களை வழங்க தடை விதித்திருப்பதாக தொடர்புடைய வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது.