ஜி.எஸ்.பி. சலுகையை மீண்டும் பெற முயற்சி: சிறிலங்கா உயர் மட்டக் குழு ஐரோப்பா பயணம்

ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்படும் சிறப்பு வர்த்தகச் சலுகையான ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வது உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்காவின் உயர் மட்டத் தூதுக்குழு ஒன்று விரைவில் பிரஸ்ஸல்ஸ் செல்கின்றது.

திறைசேரியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜெயசுந்தர, வெளிவிவகாரச் செயலாளர் ரொமேஷ் ஜெயசிங்க, நீதி அமைச்சின் செயலாளர் சுடா கம்லத், சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் இந்த உயர் மட்டக் குழுவில் உள்ளடங்கியிருப்பார்கள் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

சிறிலங்காவுக்கு தொடர்ந்து வழங்கிவந்த ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையை கடந்த மாதம் ஐ.ரோப்பிய ஒன்றியம் இடைநிறுத்தியிருந்தது. மனித உரிமை நிலைமைகளைக் காரணம் காட்டியே இந்த நடவடிக்கையை ஐ.ரோப்பிய ஒன்றியம் எடுத்திருந்தது.

சிறிலங்காவின் பொருளாதாரத்தைப் பெருமளவுக்குப் பாதிப்பதாக இந்த நடவடிக்கை அமைந்திருப்பதால் அதனை மீண்டும் பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளில் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபட்டிருந்தது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.