சுவிஸ் மார்ச் 28 தேர்தலுக்கும் எமக்கும் தொடர்பேதுமில்லை! – ருத்ரகுமாரன்
-
இவ் விடயம் 11. 03. 2010, (சனி),
தமிழீழ நேரம் 22:12க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், புலத்தமிழர் செய்திகள்
சுவிஸ் நாட்டில் மார்ச் மாதம் 28 ஆம் திகதி சுவிஸ் தமிழ் டயாஸ்பொறா (Swiss Tamil Diaspora) என்ற அமைப்பு நடாத்தப்போவதாக அறிவித்துள்ள தேர்தலுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் இடையே எவ்வித தொடர்புகளும் இல்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் திரு விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் இதற்கென நாடுவாரியாக அமைக்கப்பட்டுவரும் சுயாதீனமான செயற்பாட்டுக்குழுக்களால் மட்டுமே ஒழுங்கு செய்யப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பாக திரு ருத்ரகுமாரன் மேலும்
தெரிவித்ததாவது:
சுவிஸில் வாழும் மக்கள் மத்தியில் இருந்து பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை அறிவிக்கும் பிரசுரம் ஒன்றில் மேற்படித் தேர்தல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காகவுமே நடைபெறுகின்றது என்று குறிப்பிடப்பட்டிருப்பது உண்மைக்கு மாறான தகவலாகும். எம்முடன் எவ்வித கலந்தாலோசனையுமின்றி இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரிய நேர்மையற்ற ஒரு செயற்பாடாகும்.
ஏப்ரல் இறுதியில் தேர்தல்
நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகளைத் நேரடியாகத் தேரந்தெடுப்பதற்கான தேர்தல்களை ஏப்ரல் மாத இறுதியில் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுவிஸிலும் இதற்கான ஏற்பாடுகளை நாம் ஆரம்பித்துள்ளோம்.
இத் தேர்தலை சுவிஸில் ஒழுங்கமைத்து நடத்துவதற்கான எற்பாடுகளை மேற்கொள்வதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான சுவிஸ் செயற்பாட்டுக்குழு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இக் குழுவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்களை சுவிஸில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் மக்களுக்கிடையேயிருந்து நேரடியாக, இதற்கென நடாத்தப்படும் தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படுவரென நாம் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறோம். இவ்வழிமுறைதான் மக்களுக்கு நாடு கடந்த அரசாங்கத்தில் கூடுதல் உரித்துரிமையைக் கொடுக்கும். அனைத்துலக சமூகத்தின் மத்தியிலும் கூடுதல் ஏற்புடைமையைத் தரும்.
மேலும் எந்த நோக்கத்திற்காக இந்த அமைப்பு உருவாக்கப்படுகின்றதோ அந்த நோக்கை நிறைவேற்றப் பொருத்தமானவர்கள் யார் என்பதை மக்கள் ஆராய்ந்து, அதற்குரியவர்களை தாமே நேரடியாகத் தெரிவு செய்ய வாய்ப்பளித்தலே மக்களை மதிக்கும் ஜனநாயகப் பண்பாக இருக்க முடியும்
மேலும், நாடுகள் தோறும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை நடத்தி, பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வை மே 17 – 19 க்கு இடைப்பட்ட காலத்தில் கூட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார்தட்டும் சிறிலங்கா அரசுக்கு ஈழத்தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும்.
ஐரோப்பாவில் 65 – சுவிஸில் 10 பிரதிநிதிகள்:
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் 135 பேரில் 115 பேர் மக்கள் மத்தியில் இருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இவர்களில் 65 பேர் ஐரோப்பாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
பிரித்தானியாவிலிருந்து 20 பேரும், பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ் ஆகிய நாடுகளில் இருந்து தலா 10 பேரும், நோர்வே, டென்மார்க், Benelux (நெதர்லாந்து, பெல்ஜியம், லக்ஸம்பேர்க்), இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து தலா 3 பேரும், சுவீடன், பின்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒருவருமாக 65 பேர் ஐரோப்பாவிலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர் என ருத்ரகுமாரன் மேலும் தெரிவித்துள்ளார்.
வெளியீடு:
அனைத்துலகச் செயலகம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழு
தொடர்புகளுக்கு: [email protected]