சிறிலங்காவோடு ஒப்பந்தம் – இஸ்ரேலும் களமிறங்குகிறது!

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் போது சிறிலங்கா அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய இஸ்ரேல் அந்நாட்டுடன் பொருளாதார ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திடவுள்ளது.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், புதுடில்லி மற்றும் கொழும்புக்கான இஸ்ரேலியத் தூதுவர் Mark Sofer க்கும் இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பில் இதுகுறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுடனான போரின் போது மிகவும் நெருக்கமாகச் செயற்பட்ட இந்நாடுகள் தற்போது போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தமக்கிடையேயான பொருளாதார ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் ஆராயப்பட்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், விவசாயம், தொழில் வாய்ப்பு, சுற்றுலாத்துறை மற்றும் தொழில்நுட்பம் உட்பட மற்றும் பல்வேறு துறைகளில் இவ்விரு நாடுகளும் இணைந்து புதிய திட்டங்களை மேற்கொள்வது குறித்தும் இச்சந்திப்பின் போது உடன்பாடுகள் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் சிறிலங்கா வெற்றி பெற்றமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்ட Mark Sofer, தற்போது இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் கொண்டிருப்பதாக ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

புதுடில்லி மற்றும் கொழும்புக்கான இஸ்ரேலியத் தூதுவர் Mark Sofer இஸ்ரேலியப் பிரதமர் Shimon Peres இன் முன்னாள் கொள்கை வகுப்பு ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.